Published:Updated:

54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்! - பின்னணியில் நடந்தது என்ன?

தமிழக அரசு
தமிழக அரசு

தேர்தல் தேதி இரண்டு வாரத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது. அது வெளியாவதிலிருந்து தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் நாள் வரைதான் ஆளுங்கட்சியின் முத்திரை பெற்ற அதிகாரிகள் ஒத்துழைப்பு தேவைப்படும்.

சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் விநியோகம், கள்ள ஒட்டுப்போடுவது... எனச் சகல சட்டவிரோதச் செயல்களுக்கும் போலீஸாரின் கண் அசைவு இருந்தால்தான் நடக்கும். குறிப்பாக, ஆளுங்கட்சியினரின் உத்தரவுகளை அமல்படுத்துவதற்கு ஏதுவான அதிகாரிகளை இந்த நேரத்தில் பதவியில் அமர்த்துவது வழக்கம். இப்படியிருக்க... பிப்ரவரி 17-ம் தேதியன்று இரவு நேரத்தில் 54 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

தமிழக காவல்துறை
தமிழக காவல்துறை

தேர்தல் நேரத்தில் யார் வேண்டும், யார் வேண்டாம் என்று அமைச்சர்கள் லெவலில் ஆட்சி மேலிடம் லிஸ்ட் கேட்டதாம். அப்படி வந்த லிஸ்ட் அடிப்படையில் அதிகாரிகளை மாற்றியிருக்கிறார்கள். மூன்று ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் பணியில் இருந்தவர்கள் சிலரையும் தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி மாற்றியிருக்கிறார்கள். அவர்களில் சென்னை வடக்கு கூடுதல் கமிஷனர் பதவியில் இருந்த அருணை டி.ஜி.பி அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவுக்கும், சென்னை மேற்கு இணை கமிஷனர் பதவியில் இருந்த மகேஷ்வரியை டி.ஜி.பி அலுவலக தலைமையகப் (ஹெட் குவார்ட்டர்ஸ்) பிரிவுக்கும் மாற்றியிருக்கிறார்கள். இந்த இருவரும் சட்டம் ஒழுங்கு பிரிவில் இருந்தவர்கள். தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என்பதால் டம்மி பதவிகளுக்கு தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி-யான சத்தியமூர்த்தி அவரது ஒய்வுக்குப் பிறகு முதல்வரின் ஆலோசகராகச் செயல்படுகிறார். போலீஸ்துறையின் இந்த மாறுதல் லிஸ்ட் ரெடி பண்ணியதில் அவரின் பங்கு நிறையவே இருக்கிறதாம். முதல்வர் தொகுதி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோரின் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்துக்கு ஐ.ஜி-யாக தினகரனை நியமித்திருக்கிறார்கள். முதல்வருக்கு நன்கு தெரிந்த சேலம் கமிஷனர் செந்தில்குமார் சென்னை போலீஸின் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த காலங்களில் உள்ளூர் அமைச்சர்களின் ஸ்பெஷலான உத்தரவுகளைக் கண்டுகொள்ளாத சில மாவட்ட எஸ்.பி-கள் டம்மியான பதவிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சியின் ஆசி இருந்து, அதேநேரம் டம்மியான பதவியில் இருந்த வேறு சிலர் தற்போது முக்கியப் பதவிகளை பெற்றுள்ளனர். அ.தி.மு.க-வுக்கு வரும் தேர்தலில் சவாலாக இருக்கப்போவது சென்னை மாநகரத் தொகுதிகள்தான். அதைச் சரிசெய்யும் வகையில், சென்னை மாநகர போலீஸில் பல்வேறு அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

தலைமை செயலகம்
தலைமை செயலகம்

உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது ஆஃப் த ரெகார்டாகச் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அவர். ``வடக்கு மண்டல ஐ.ஜி பதவிக்கு சங்கர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஆளுங்கட்சி மேலிடத்துடன் நல்ல அறிமுகம் உள்ளவர். 1996-ம் வருட ஐ.பி.எஸ் பேட்ஜில் முதவாவதாக இருக்கிறவர் சங்கர். இவருடன் சேர்த்து அதே ஆண்டில் பணிக்குச் சேர்ந்த வேறு இருவரும் ஐ.ஜி அந்தஸ்தில் இருக்கிறார்கள். இந்த மூவரும் இந்நேரம் கூடுதல் டி.ஜி.பி-க்களாகப் பதவி உயர்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் வரை சங்கரை சட்டம்-ஒழுங்குப்பிரிவில் வைத்திருக்க ஆளுங்கட்சி மேலிடம் நினைத்ததாம். அதற்காகவே, பதவி உயர்வு உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கிறார்கள். 1996-ம் வருட பேட்ஜுக்கு அடுத்த வருடங்களில் பணியில் சேர்ந்த டி.ஐ.ஜி., எஸ்.பி... என பல்வேறு பதவிகளில் இருக்கும் உயரதிகாரிகளின் பதவி உயர்வு தள்ளிப்போகிறது. இனி வரும் ஜூன் மாதத்தில்தான் பதவி உயர்வு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இது எந்த வகையில் நியாயம்? '' என்கிறார் அவர்.

தேர்தல் தேதி இரண்டு வாரத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது. அது வெளியாவதிலிருந்து தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் நாள் வரைதான் ஆளுங்கட்சியின் முத்திரை பெற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பு தேவைப்படும். ஆக, இப்போது நல்ல பசையுள்ள ஏரியாக்களுக்கு நியமிக்கப்பட்டவர்கள் வருகிற மே மாதத்தின் இறுதி வாரம் வரைதான் அந்தந்தப் புதிய பதவிகளில் இருப்பார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தற்போது பசையான பதவியில் உள்ளவர்களை நிச்சயமாக டம்மியான பதவிக்கு மாறுதல் செய்ய வாய்ப்புகள் உண்டு.

ஒருவேளை தி.மு.கழகம் தேர்தலில் ஜெயித்து ஆட்சியைப் பிடித்தால், சைலேந்திரபாபு தமிழக போலீஸின் சட்டம்-ஒழுங்குப்பிரிவின் டி.ஜி.பி-யாக நியமிக்கப்படுவார் என்றும் டி.ஜி.பி அலுவலக அதிகாரிகள் பேசிக்கொள்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு