Published:Updated:

`அறிவாலயத்தில் நடந்த பஞ்சாயத்து!’- வாணியம்பாடி தி.மு.க நிர்வாகிகளின் பதவி பறிப்புப் பின்னணி

சாரதி குமார்
சாரதி குமார்

என் கணவன் சாரதி குமார், என்னுடைய 140 பவுன் நகைகளையும், ரூ.20 லட்சம் பணம் மற்றும் சொத்துகளை அபகரித்து, அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டார். இதுபற்றி கேட்டதால், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துவருகிறார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர தி.மு.க பொறுப்பாளர் சாரதி குமார் மீது அவரின் மனைவி ரம்யா, கடந்த 21-ம் தேதி, சென்னை பெருநகர காவலர் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘‘நானும் சாரதி குமாரும் கடந்த 2016-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பின்னரே, சாரதி குமாருக்கும் சேலத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் தவறான உறவு இருப்பது எனக்குத் தெரியவந்தது. அந்தப் பெண், என் கணவரைவிட வயதில் மூத்தவர். எனினும், குடும்ப கௌரவம் கருதி நான் அமைதியாக இருந்தேன்.

மனைவி ரம்யாவுடன் சாரதி குமார்
மனைவி ரம்யாவுடன் சாரதி குமார்

ஆனால், கணவர் சாரதி குமார் என்னுடைய 140 பவுன் நகைகளையும், ரூ.20 லட்சம் பணம் மற்றும் சொத்துகளை அபகரித்து, அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டார். இதுபற்றி கேட்டதற்கு, தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துவருகிறார். கணவனுடன் தொடர்பு வைத்துள்ள அந்தப் பெண்ணுக்கு பல தவறான பெண்களுடன் பழக்கம் உள்ளது. என் கணவன் விரும்பும்போதெல்லாம் பெண்களை அனுப்பி வைப்பார். தினமும் குடித்துவிட்டு என்னைத் துன்புறுத்தியதால், சென்னை அடையாறில் உள்ள தாய் வீட்டுக்கு நான் வந்துவிட்டேன்.

கடந்த 19-ம் தேதி, அறிவாலயத்துக்குச் சென்று, தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்து சாரதி குமாரின் அடாவடித் தனத்தை விவரித்தேன். அவரும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் கூறினார். அறிவாலயத்தை விட்டு வெளியில் வந்த என்னை சாரதி குமார் அவமானப்படுத்தி, மீண்டும் கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக சாரதி குமார் மீது வழக்குப்பதிவு செய்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மனுவில் கூறியிருந்தார்.

வேறொரு பெண்ணுடன் சாரதி குமார்
வேறொரு பெண்ணுடன் சாரதி குமார்

மனைவி ரம்யாவின் புகார் குறித்து நம்மிடம் பேசியிருந்த தி.மு.க நகரப் பொறுப்பாளர் சாரதி குமார், ``அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்தப் புகாரை அவர் கொடுத்துள்ளார். அந்தப் புகாரை நீங்கள் படித்துப்பார்த்தாலே, அவர் கூறுவதில் உண்மை இல்லை என்பது தெளிவாகத் தெரியும். ‘இவ்வளவு கொடுமைகளைப் பொறுத்துக்கொண்டு வாழ்ந்தேன்’ என அவர் கூறுவது எல்லாம் கட்டுக்கதை. அவர் கூறுவதுபோல் யாராவது நடந்து கொள்வார்களா? விவகாரத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது’’ என்று விளக்கம் கொடுத்தார்.

இந்த நிலையில், வாணியம்பாடி நகரப் பொறுப்பை திடீரென ராஜினாமா செய்துள்ளார் சாரதி குமார். ``குடும்பச் சூழ்நிலை காரணமாகத் தன்னை பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்வதாகத் தெரிவித்ததன் காரணமாக, அவர் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்’’ என்று ‘முரசொலி’யில் தி.மு.க தலைமை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல், சாரதி குமாருக்கு நேரெதிரியான வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஏ.சி.தேவகுமாரும் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பும் `முரசொலி’யில் கட்டம் கட்டப்பட்டுள்ளது.

‘முரசொலி’யில் இன்று வந்த அறிவிப்பு
‘முரசொலி’யில் இன்று வந்த அறிவிப்பு

இதுபற்றி தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். ``சாரதி குமாரும் தேவகுமாரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மாமன், மைத்துனர் முறையில் நெருக்கமாக இருந்தனர். சாரதி குமாரின் திருமணத்தை முன்னின்று நடத்தியவர்களில் தேவகுமாரும் ஒருவர். இப்படியிருக்க, வேறு பெண்ணுடன் தொடர்பு குறித்த பஞ்சாயத்தில் இரண்டு பேருக்கும் முட்டிக்கொண்டது. தேவகுமார் ஒதுங்கிக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, சாரதி குமாரின் மனைவிக்கு தேவகுமார் உதவினார். அதன் பிறகே, விவகாரம் அறிவாலயத்துக்குச் சென்றது. காவல்துறையில் புகார் அளித்ததாலும், ஊடகங்களில் செய்தி வெளியாகியதாலும் தி.மு.க-வுக்கு அவப்பெயர் ஏற்பட்டது. தலைமையின் கோபத்துக்கு ஆளாகிய சாரதி குமாரையும் தேவகுமாரையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க முடிவுசெய்யப்பட்டது. சாரதிகுமார் முந்திக்கொண்டு ராஜினாமா செய்துவிட்டார்.

‘முரசொலி’யில் இன்று வந்த அறிவிப்பு
‘முரசொலி’யில் இன்று வந்த அறிவிப்பு

பின்னர் ஏற்பட்ட சமரசத்தால், இருவரையும் பொறுப்பிலிருந்து மட்டும் தலைமை நீக்கியிருக்கிறது. இந்த விவகாரம் இன்னும் பெரிதாக வாய்ப்பிருக்கிறது. சாரதி குமாரின் மனைவி கொடுத்த புகார் மனு மீது என்ன மாதிரியான நடவடிக்கையை காவல்துறை எடுக்கப்போகிறது என்பதைத்தான் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு