சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

"அரசியல்தான் என் ஆன்மிகம்!"

பாலபிரஜாபதி அடிகளார்
பிரீமியம் ஸ்டோரி
News
பாலபிரஜாபதி அடிகளார்

எங்கள் ஆட்சி வந்தால் உங்களுக்கான பாதுகாப்பைத் தருவோம்

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் தீவிரமாக எதிர்த்துவருகிறார் ‘அய்யாவழி’ சமயத்தலைவரான பாலபிரஜாபதி அடிகளார். போராட்டங்களில் கலந்துகொள்வதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறும் பாலபிரஜாபதி அடிகளாரை, கன்னியாகுமரியை அடுத்த சாமித்தோப்பில் அமைந்துள்ள அவரது இடத்தில் சந்தித்தேன்.

“ஆன்மிகவாதியான நீங்கள் திடீரென அரசியல் கருத்துகளைத் தீவிரமாகப் பேசுவது ஏன்?”

“அரசியல்தான் என் ஆன்மிகம். தவம் என்பது காட்டுக்குள்ளே, குகைக்குள்ளே போய்விடுவது என்று பலர் நினைக்கிறார்கள். இல்லறம் என்பதுதான் தவம் என்பது அய்யா வைகுண்டரின் கொள்கை. மனு தர்மத்திற்கு எதிராகப் போராடிய அய்யா வைகுண்டர், ‘தாழ்ந்தகுடி என எங்களை எப்படிச் சொல்வீர்கள்?’ என்று திருவிதாங்கூர் மன்னரிடம் எதிர்த்துக் கேள்வி கேட்டவர்். அவருடைய வழிவந்த நான் அரசியல் பேசக்கூடாதா?”

என்னைக்
கொலை செய்துவிடுவதாகச் சிலர் மிரட்டினார்கள்

“சென்னையில் நடந்த சி.ஏ.ஏ எதிர்ப்பு மாநாட்டில் அய்யாவழி மடாதிபதியான நீங்கள் பங்கேற்றதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“என்னை எதிர்ப்பவர்கள் அய்யாவழிக்காரர்கள் அல்ல; அரசாங்கத்தின், ஆளும் கட்சியின் சார்பு உள்ள சில இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் என்னைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள். சி.ஏ.ஏ எதிர்ப்பு நிகழ்ச்சியின்போது எனக்கு உடம்பு சரியில்லை. அதனால் போகவேண்டாம் என இருந்தேன். ஆனால், நான் அந்த நிகழ்ச்சிக்குப் போனால் என்னைக் கொலை செய்துவிடுவதாகச் சிலர் மிரட்டினார்கள். எனவேதான் அதையும் பார்த்துவிடுவோம் என்ற வேகத்தில் அந்த மாநாட்டுக்குச் சென்றேன்.”

பாலபிரஜாபதி அடிகளார்
பாலபிரஜாபதி அடிகளார்

“உங்கள் தலையை எடுப்பதாக மிரட்டினர் என்று அந்த நிகழ்ச்சியில் பேசினீர்கள். உங்களை மிரட்டியது யார்?”

“இந்து முன்னணி மாநிலத் தலைவராக இருந்த மறைந்த தாணுலிங்க நாடாரின் பிறந்த தின விழாவில், இந்து முன்னணி இயக்கத்தின் மாநில நிர்வாகியாக இருக்கும் ஒருவர் அப்படிப் பேசியிருக்கிறார். ‘சி.ஏ.ஏ-வுக்கு எதிராகப் போராடச் செல்லும் பாலபிரஜாபதி மீது கல்லெடுத்து எறியுங்கள், அவரது காரை உடையுங்கள்’ என்று அவர் பேசினார். அதன் பிறகு, எனது தலையை எடுக்கப்போவதாக வாட்ஸப்பில் சிலர் மிரட்டல் விடுத்தார்கள். அதுகுறித்துக் காவல்துறையில் புகார் கொடுத்தால், அதை காமெடியாகப் பார்க்கிறார்கள். எனக்கு போலீஸ் பாதுகாப்பு தந்தால் வேண்டாம் என்று சொல்லமாட்டேன்... தராமல் இருந்தாலும் வருத்தப்பட மாட்டேன்.”

வடமொழியில் சொன்னால்தான்
கடவுள் ஏற்றுக்கொள்வார்

“ ‘அய்யாவழி என்பது இந்து மதம்தான்’ என்றும், ‘அது தனி மதம் இல்லை’ என்றும் உங்கள் எதிர்ப்பாளர்கள் சொல்கிறார்கள். அதை ஏற்கிறீர்களா?”

“ராமன் குகனைக் கட்டியணைத்து சகோதரனாக ஏற்றுக்கொண்டார். அப்படிப்பட்ட ராமருக்குக் கோயில் கட்டிவைத்துவிட்டு அவரை நான் தொடக்கூடாது என்று சொல்கிறார்கள். வேடனான கண்ணப்ப நாயனார் சிவபெருமானுக்குக் கண்ணைக் கொடுத்தார்.தான் உண்ட உணவை சிவனுக்குக் கொடுத்தார். இன்று நீங்கள் கஞ்சியைக் கொண்டு வைத்துவிட்டு வடமொழியில் சொன்னால்தான் கடவுள் ஏற்றுக்கொள்வார் என்றால் நான் எப்படி அதை ஏற்றுக்கொள்ள முடியும்? யார் இந்து என்று ஒரு வரையறை சொல்லுங்கள். இந்து என்ற வார்த்தையே ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. வேறு வழி இல்லாமல் அந்த வார்த்தையை வைத்திருக்கிறோம்.”

“ஒரு சமயத்தலைவரான நீங்கள் ‘இனிமேல்தான் பெரியாருக்கு வேலை’ என்று பேசுகிறீர்களே?”

“வைக்கம் போராட்டத்தைப் பெரியார் நடத்தாமல் இருந்திருந்தால் சுசீந்திரம் கோயில் இருக்கும் தெருவுக்கு சில சாதியினரால் போக முடியுமா? பெரியார் இன்று இருந்திருந்தால் கருவறை நுழைவுக்காகப் போராடியிருப்பார். எங்கள் தலைமைப் பதியை அரசு எடுக்கக் கூடாது என்று போராடியிருப்பார். என் கொள்கை தடைப்படுகிறபோது, பெரியார் இருந்தால் வெற்றிபெற்றிருப்போம் என்று சொல்கிற உரிமை எனக்கு இருக்கிறது.”

“மடாதிபதியான நீங்கள், தமிழகத்தில் நடப்பது டெல்லி ஆட்சி என்று விமர்சிக்கிற அளவுக்கு அரசியல் பேசவேண்டிய தேவை என்ன?”

“டெல்லி ஆட்சி இங்கு நடப்பது என்பது உண்மைதான். இல்லை என்று அவர்கள் சொல்லட்டுமே! சாமித்தோப்பு தலைமைப் பதியை அறநிலையத்துறை எடுக்கக் கூடாது என்பதற்காக நான் இரண்டுமுறை முதல்வரைச் சந்தித்தேன். அவர் சாமித்தோப்பு பிரச்னையைத் தீர்த்துத்தருவதாக உறுதியளித்தார். அதற்கு முன்பு, இந்த ஆலயத்தை அறநிலையத்துறை எடுக்காமல் இருப்பதற்குத் தனி ஆணை பிறப்பித்துத் தருகிறேன் என்று ஜெயலலிதா சொன்னார். அதைத்தான் இவர்கள் நிறைவேற்றித்தருவதாகச் சொன்னார்கள். ஆனால், செய்யவில்லை. கேட்டால், ‘மேலே இருந்து அழுத்தம் வருகிறது, அவர்கள் சொன்னால்தான் செய்ய முடியும்’ என்கிறார்கள். இது என்ன நியாயம்?”

பாலபிரஜாபதி அடிகளார்
பாலபிரஜாபதி அடிகளார்

“சாமித்தோப்பு பதியை அறநிலையத்துறை எடுப்பதில் அரசியல் தலையீடு இருக்கிறதா?”

“எங்கள் ஆலயத்தை எடுக்க முயற்சி செய்கிறார்கள். கைவைக்கக் கூடாத இடத்தில் கைவைத்தால் நான் சத்தம் போடத்தான் செய்வேன். இறந்தவர்களை வடக்கு முகமாகப் புதைக்க வேண்டும். தமிழில் கல்யாண வாழ்த்து சொல்ல வேண்டும். பிறந்த நாள் சடங்கு, ருதுவானால் சடங்கு தனியாக இருக்கிறது. தேங்காய் உடைக்கக் கூடாது, தலையில் தலைப்பாகை அணிந்துதான் சாமி கும்பிட வேண்டும், தொட்டுநாமம் சார்த்த வேண்டும் என எங்களுக்கு நிறைய சடங்குகள் உள்ளன. எங்கள் தனித்தன்மையைப் பாதுகாக்க நாங்கள் போராடுகிறோம். கன்னியாகுமரித் தொகுதியில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த தளவாய்சுந்தரம் தோற்றதற்கு நான் காரணம் என நினைக்கிறார்கள். எனவே, அதற்குப் பழிவாங்கும் நோக்கில் தளவாய்சுந்தரம்தான் இதையெல்லாம் செய்கிறார்.”

“சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி-யை ஏன் எதிர்க்கிறீர்கள்?”

“பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி சி.ஏ.ஏ-வில் சொல்லியிருக்கிறார்கள். ஏன் ஈழத் தமிழர்களை அதில் சேர்க்கவில்லை? வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களை இந்துவா, இஸ்லாமியரா என்று இவர்கள் எப்படி முடிவு செய்வார்கள்? ஏதோ ஒரு பின்புலத்தில் இதைச் செய்கிறார்கள். இந்தச் சட்டத்தால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனக்கும்கூட அச்சம் இருக்கிறது. நம்மை அழித்துவிடுவார்களோ, நம் தனித்தன்மை போய்விடுமோ, மீண்டும் 80 சதவிகித மக்களை அடிமைப்படுத்த அச்சாரம் போடுகிறார்களோ என்ற பயம் நிறைய இருக்கிறது.”

எங்கள் ஆட்சி வந்தால் உங்களுக்கான
பாதுகாப்பைத் தருவோம்

“தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்று பேசியிருக்கிறீர்கள். அந்த நிலைப்பாட்டுக்கு என்ன காரணம்?”

“இந்த அரசாங்கம் எங்களிடம் பாராமுகம் காட்டுகிறது. சாமித்தோப்பு ஆலயத்தைப் பாதுகாக்க நான் உண்ணாவிரதம் இருக்கும்போது முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், அனிதா ராதாகிருஷ்ணன் எல்லாரும் வந்து, ‘நாங்கள் ஸ்டாலினிடம் கேட்டிருக்கிறோம், எங்கள் ஆட்சி வந்தால் உங்களுக்கான பாதுகாப்பைத் தருவோம்’ என்று சொன்னார்கள். தராத இவர்களை நம்புவதா, தரப்போகிற அவர்களை நம்புவதா? என் அங்கீகாரத்தை அ.தி.மு.க எடுத்துவிட்டதால் நான் ஸ்டாலினைச் சந்தித்தேன். அவர் முதல்வர் ஆக வேண்டும் என்கிறேன்.”

“மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு பற்றி...?”

“மத்திய அரசு செய்ய வேண்டியவற்றைச் செய்யவில்லை. எல்லாவற்றையும் தனியாருக்குக் கொடுக்கிறார்கள். ராணுவம், வெளிநாட்டு உறவுகளைக் கையில் வைத்துக்கொண்டு, மாநிலங்களுக்கு முழுமையான அதிகாரம் கொடுத்துவிட்டு நல்லுறவை வைத்திருக்க வேண்டும்.”

“கார்ப்பரேட் சாமியார்களைப் பற்றி உங்கள் பார்வை என்ன?”

“சாமியர்கள் பற்றி நான் தனிப்பட்ட விமர்சனம் செய்யத் தயாரில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கும்.”