Published:Updated:

`சசிகலாவும் அ.தி.மு.க-வில் இணைவார்'- பெங்களூரு புகழேந்தி!

புகழேந்தி
புகழேந்தி

தினகரனிடம் 10,000 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கிறது. அவற்றை பாதுகாக்கவே கட்சி என்ற பெயரில் கம்பெனி நடத்துகிறார் என தஞ்சாவூரில் பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.

அ.ம.மு.க-வில் இருந்த புகழேந்தி அதிலிருந்து விலகி மாவட்டம் தோறும் அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்திவருகிறார். இன்று தஞ்சாவூரில் தஞ்சை தரணியில் தலை நிமிர்வோம் எனற அடைமொழியுடன் ஆலோசனைக் கூட்டம் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது, ``அமெரிக்கா சென்றுள்ள ஓ.பி.எஸ். திரும்பி வந்தவுடன், ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். முன்னிலையில், இணைவதற்காக நேரம் கேட்டுள்ளேன். அ.ம.மு.க-வின் அதிருப்தியாளர்கள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அ.தி.மு.க-வில் இணைய உள்ளோம்.

கூட்டத்தில் புகழேந்தி
கூட்டத்தில் புகழேந்தி

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றதைப் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் 80 சதவிகித இடங்களில் வெற்றி பெறும். அ.தி.மு.க-வில் ஸ்லீப்பர் செல் இருப்பதாக எல்லோரையும் சொல்ல வைத்தார் தினகரன். நானும் அதைத்தான் சொன்னேன். தினகரனிடம் 10,000 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தினகரன் முகாமிட்டு நிவாரணப் பணிகளைச் செய்தார் அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிர்வாகிகள் கொடுத்த பணத்தை வைத்தே நிவாரணப் பொருள்களை வழங்கினார். அவரது பாக்கெட்டிலிருந்து எடுத்து மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

இதுபோன்று பல விஷயங்களை என்னால் சொல்ல முடியும். தினகரன் அரசியல் நடத்தத் தெரியாதவர், தலைமைப் பண்புக்கு ஏற்றவர் இல்லை. அவரை இவ்வளவு நாளாக நாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். அவருடைய சொத்துகளைப் பாதுகாத்துக்கொள்ளவே அரசியலில் இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு தினகரனின் அரசியல் கதை முடிந்து விடும். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை அறிவித்து விருப்ப மனுவை வாங்கிவருகின்றன. ஆனால், அ.ம.மு.க-வில் போட்டியிடுவதற்கு யாரும் இல்லை.

கூட்டத்தில் புகழேந்தி
கூட்டத்தில் புகழேந்தி

தினகரனின் இயக்கத்திற்கு பட்டா கிடையாது, ரசீது கிடையாது, உறுப்பினர் அட்டை கிடையாது, அது ஒரு புறம்போக்கு இடம், அதன் அலுவலகத்தைக் காலி செய்யச் சொல்லி இடத்தின் உரிமையாளர் இசக்கிசுப்பையா கூறிவிட்டார். இனிமேல் அந்த கம்பெனி இருக்காது. அந்த இயக்கத்தை ஆரம்பிக்க துணை நின்றவர்களில் நானும் ஒருவன். அந்த இயக்கத்தைவிட்டு முக்கியமான பலர் வெளியேறிவிட்டனர். எனவே, அ.ம.மு.க கலைக்கப்பட்டுவிட்டது. இதுகுறித்து நான் தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுத்திருக்கிறேன். இனிமேல் அ.ம.மு.க பெயரை யாராவது பயன்படுத்தினால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

சசிகலாவிடம் நான் அ.தி.மு.க-வில் இணைவது குறித்து எதுவும் சொல்லவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளேன். அதேநேரம் நல்ல தலைவராக தினகரன் இருப்பார் என நம்பி அவர் பின்னால் சென்றோம். அவரை வருங்கால முதல்வர் என்றும் சொன்னேன் இப்போதுதான் தெரிகிறது, அது சரி இல்லை. அவர் தலைமை பண்புக்கு தகுதியில்லாதவர் என்று. இப்போதுதான் தப்பு செய்துவிட்டோம் எனத் தெரிகிறது.

புகழேந்தி
புகழேந்தி

தினகரன் பல கனவுகளுடன் அரசியலுக்கு வந்தார். அவரது கனவு தகர்த்தப்பட்டுவிட்டது. அ.தி.மு.க-வுக்குச் சென்றாலும், ஒரு நண்பராக சசிகலா வெளியே வருவதற்கான சிறை தொடர்பான பணிகளைச் செய்வேன். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற பெயரில் இந்தக் கம்பெனி முழுவதுமாக கலைக்கப்பட்டது. ஸ்லீப்பர் செல்களாக டி.டி.வி.தினகரனின் அருகிலேயே இருவர் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும். தினகரனை தவிர்த்து சசிகலா உட்பட அனைவரும் அ.தி.மு.க-வில் இணைவது உறுதி என்றார்.

பின் செல்ல