Published:Updated:

அன்புமணி காலில் விழத் தயாராக இருக்கிறார் எடப்பாடி!

புகழேந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
புகழேந்தி

போட்டுத்தாக்கும் புகழேந்தி...

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வா.புகழேந்தி, கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரில் நடந்தபோது அதை கவனித்துக்கொண்டவர் புகழேந்தி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் முகாமுக்குத் தாவியவர், பிறகு மீண்டும் அ.தி.மு.க-வில் ஐக்கியமானார். ஜூன் 13-ம் தேதி கூட்டணியிலிருக்கும் பா.ம.க-வின் அன்புமணியை விமர்சித்து புகழேந்தி பேசியிருந்த நிலையில், மறுநாளே அவர்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. புகழேந்தியிடம் பேசினோம்.

‘‘திடீரென்று கட்சியைவிட்டு நீக்கப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

‘‘ஜெயலலிதாவுக்காக கோடிக்கணக்கான சொத்துகளை ஜாமீனாகக் கொடுத்த புகழேந்தி, இப்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன். இது நான் எதிர்பார்த்ததுதான். அவர்கள் கட்சியா நடத்துகிறார்கள்? இப்போதுதான் என் யுத்தம் தொடங்கியிருக்கிறது. இது எங்கே போய் முடியும் என்று பொறுத்திருந்து பாருங்கள்.”

அன்புமணி காலில் விழத் தயாராக இருக்கிறார் எடப்பாடி!

‘‘நீக்கத்துக்கு உண்மையான காரணம் என்ன?’’

‘‘எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வளர்த்து உருவாக்கிய கட்சி, அ.தி.மு.க., ‘பா.ம.க மட்டும் கூட்டணியில் இல்லையென்றால், மிகக் குறைவான இடங்களில்தான் அ.தி.மு.க வெற்றிபெற்றிருக்கும். தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ்-ஸுக்கு செல்வாக்கு இல்லை’ என்றெல்லாம் அன்புமணி பேசியதற்கு, ‘இப்படியெல்லாம் பேசாதீர்கள். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்-ஸுக்கு செல்வாக்கு இல்லாமலா உங்களை எம்.பி-யாக்கினார்கள்?’ என்று அவரைக் கண்டித்துப் பேசியதால் நீக்கப்பட்டிருக்கிறேன். எடப்பாடி என்ற நபர் சிறையில் இருக்க வேண்டியவர். அதற்கான நேரம் வந்துவிட்டது. அகம்பாவம், ஆணவத்துடன் கட்சிக்காரர்களைக் கொத்தடிமையாக நடத்துகிறார் எடப்பாடி.’’

“எடப்பாடி இப்படிச் செய்வதற்கு என்ன காரணம்?’’

‘‘அவர் முழுமையாகக் கட்சியை கைப்பற்றி, அ.தி.மு.க-வை அழிவுப் பாதைக்குக் கொண்டு வந்துவிட்டார். இது நீண்ட நாள்களாக நடந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் அன்பைப் பெற்ற என்னை நீக்கியதன் மூலம் அவர்களின் நோக்கம் தெரிகிறது. எதிர்காலத்தில் எடப்பாடி தலைமையில் கட்சி எழுந்து நிற்க வாய்ப்பே இல்லை. எடப்பாடி தொடர்ந்து தோல்வியைச் சந்திக்கப்போகிறார். விரைவில் செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடியைப் பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன்.”

‘‘நீங்கள் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாகத்தான் பேசினீர்கள். ஆனால், உங்களை நீக்கும் கடிதத்தில் அவரும் கையொப்பமிட்டுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘ஓ.பி.எஸ் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இப்போதுகூட அவரைப் பற்றி தவறாகப் பேச விரும்பவில்லை. இதற்கு எப்படி ஒப்புக்கொண்டார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.’’

‘‘சமீபகாலமாக சசிகலா போனில் பேசிய கட்சி நிர்வாகிகள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அதுபோல் உங்கள் மீதும் சந்தேகப்பட்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்களா?”

‘‘நான் சசிகலாவுடன் தொடர்பில் இல்லை... தினகரனுடனும் பேசுவதில்லை. அ.ம.மு.க-விலிருந்து வெளியில் வந்த நாளிலிருந்து அ.தி.மு.க-வில் செயல்பட்டுவருகிறேன். இது அவர்களுக்கும் நன்கு தெரியும். சசிகலா காலில் விழுந்து, பின்பு அவர் காலை வாரிவிட்டதுபோல, தற்போது அன்புமணி காலில் விழத் தயாராக இருக்கிறார் எடப்பாடி.”