Published:Updated:

`பொதுத்துறை வங்கிகளின் நிலை மோசமாக இருந்தது!' - மன்மோகன், ரகுராம் ராஜனைச் சாடிய நிர்மலா சீதாராமன்

'பொதுத்துறை வங்கிகளுக்கும் உயிர்நாடி கொடுப்பது எனது முதல் கடமையாகும்' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன், அக்டோபர் 9-ம் தேதி, அமெரிக்காவின் பிரவுண் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் பேசியவர், `இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு, தவறான பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரி ஆகியவையே காரணம். நாட்டில் வளர்ச்சியே இல்லாதபோது அரசியல் ஆதாயத்திற்காக நலத்திட்டங்களை அறிவித்து செலவு செய்துவது என்பது நெருக்கடியை ஏற்படுத்தும். மோடியின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை' எனக் கடுமையாகச் சாடினார். இந்நிலையில், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மன்மோகன் சிங், ரகுராம் ராஜன் கூட்டமைப்பில் பொதுத்துறை வங்கிகள் மிக மோசமான நிலையில் இருந்தன எனச் சாடியுள்ளார்.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

மேலும் அவர் பேசுகையில், ''ரகுராம் ராஜன் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ரகுராம் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர் மன்னிப்பு கேட்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மன்மோகன் சிங், ரகுராம் ராஜன் கூட்டமைப்பில் பொதுத்துறை வங்கிகளின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. இது, அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் இருந்த காலகட்டத்தில், அரசியல்வாதிகள் போன் செய்தால் பொதுத்துறை வங்கிகளில் இருந்து கடன்கள் வழங்கப்பட்டன.

`விமர்சனங்களை ஒடுக்குவது தீக்குள் விரலை வைப்பது போன்றது!'- கொதிக்கும் ரகுராம் ராஜன்

அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் உயிர்நாடி கொடுப்பது எனது முதல் கடமை. வளர்ச்சியை எட்டுவதுகுறித்து தொடர்ச்சியான, தெளிவான பார்வை மன்மோகன் சிங்கிடம் இருந்தது என்பதையும் ராஜன் ஒப்புக்கொள்வார்" என்று பேசினார். நான் யாரையும் கேலி செய்வதற்காக இதைக் கூறவில்லை'' என்றார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

பிரவுண் பல்கலைக்கழகத்தில் பேசிய ரகுராம் ராஜன்,``அரசின் அதிகாரங்கள் மிக அதிகமாக ஒரே இடத்தில் குவிந்திருந்தன. இதனால், வளர்ச்சியை எட்டுவதுகுறித்து தெளிவான பார்வை இல்லை'' என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலடிகொடுக்கும் விதமாகப் பேசிய நிர்மலா சீதாராமன்,`` நான் உங்களிடம் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். மிகவும் ஜனநாயகப்படுத்தப்பட்ட தலைமை முழு ஊழலுக்கு வழிவகுத்தது” என்றார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா, இந்தியாவின் துணைத் தூதர் சந்தீப் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

`இந்தியப் பொருளாதாரத்தின் தேக்கநிலை கவலையளிக்கிறது’ - எச்சரிக்கும் ரகுராம் ராஜன்