Published:Updated:

கூவத்தூர் ஸ்டைலில் குதிரைப் பேரம்! - ஜாலி டூர்... ரிசார்ட்டில் கவுன்சிலர்கள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரிசார்ட்டில் கவுன்சிலர்கள்...
ரிசார்ட்டில் கவுன்சிலர்கள்...

ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடந்திருந்தாலும் மேற்கண்ட பேரங்களில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களே முன்னிலையில் இருக்கின்றன.

பிரீமியம் ஸ்டோரி

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை தி.மு.க கைப்பற்றியுள்ள நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் அக்டோபர் 22-ம் தேதி நடைபெறுகிறது. பல இடங்களிலும் நடக்கும் மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளுக்கான குதிரைப் பேரங்கள், “ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கே இவ்வளவா?!” என்று மலைக்கவைக்கின்றன. அதுமட்டுமல்ல... கூவத்தூர் ஸ்டைலில் கவுன்சிலர்களை அள்ளிச் சென்று ரிசார்ட்களில் தங்கவைப்பது, வெளி மாநிலங்களுக்குச் சுற்றுலா அனுப்பிவைப்பது என்று களத்தில் கரைபுரண்டோடுகிறார்கள் தி.மு.க பெரும்புள்ளிகள்!

ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடந்திருந்தாலும் மேற்கண்ட பேரங்களில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களே முன்னிலையில் இருக்கின்றன. திருப்பத்தூர் மாவட்டத்திலிருக்கும் 13 மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் தி.மு.க கூட்டணியே வென்றிருக்கிறது. ஒன்பது மாவட்டங்களிலுள்ள 140 மாவட்ட கவுன்சிலர்களில், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்திருக்கிறார் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சியின் மூன்றாவது வார்டு கவுன்சிலர் பிரியதர்ஷினி ஞானவேலன். இதனால், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியைப் பிடிக்க பிரியதர்ஷினி முயன்றுவருகிறார். இவரின் கணவர் ஞானவேலன், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார். அத்துடன், அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகனும் பிரியதர்ஷினிக்குப் பரிந்துரை செய்திருப்பதால், நம்பிக்கையுடன் வலம்வருகிறார் அம்மணி.

அதேநேரத்தில், ஏழாவது வார்டு முனிவேல், ஒன்பதாவது வார்டு கவிதா தண்டபாணி, பத்தாவது வார்டு சூரியகுமார் ஆகிய மாவட்ட கவுன்சிலர்களும் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்காக முட்டி மோதுகிறார்கள். இவர்களில் கவிதா தண்டபாணி, மாவட்ட மகளிரணி அமைப்பாளராக இருப்பதால், தி.மு.க மகளிரணிச் செயலாளரான கனிமொழியின் ஆதரவு கேட்டு அவரது வீட்டில் தவமாய் தவமிருக்கிறார். இவரின் அக்கா ஸ்ரீதேவி ஒன்றிய கவுன்சிலராகவும் வெற்றிபெற்றுள்ளார். அக்காவுக்கு ஜோலார்பேட்டை ஒன்றியத் தலைவர் பதவி, தனக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியைக் கேட்டு சி.ஐ.டி காலனியில் பேசிவருகிறாராம் கவிதா தண்டபாணி.

ஜோலார்பேட்டை ஒன்றியத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறார் ஐந்தாவது வார்டு கவுன்சிலர் உமா கண்ணுரங்கம். தி.மு.க-வில் ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் உமாவுக்கும், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் தேவராஜுக்கும் ஆகாது. இதனால், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியச் செயலாளரான சதீஷ்குமாரின் மனைவி சத்தியாவை ஒன்றியத் தலைவராக்க மாவட்டச் செயலாளர் தரப்பு முன்மொழிந்துள்ளது. ஆனால், இதற்கு துரைமுருகன் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் மோதல் முற்றியிருக்கிறது.

ஆலங்காயம் ஒன்றியத் தலைவர் பதவிக்கும் போட்டா போட்டிதான்... மாவட்டச் செயலாளர் தேவராஜி தன் இளைய மருமகள் காயத்ரி பிரபாகரனை, ஆலங்காயம் ஒன்றியத் தலைவராக்குவதற்காக மற்ற கவுன்சிலர்களைக் கைக்குள் கொண்டுவர முயல்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கதிர் ஆனந்த், ஏலகிரி மலையிலுள்ள தன் பங்களாவில் வேலை பார்த்து, கவுன்சிலராக வெற்றிபெற்றுள்ள சங்கீதா பாரியை ஆலங்காயம் ஒன்றியத் தலைவராக்க விருப்பப்படுகிறார். இதற்காக, ஆதரவு தெரிவித்த கவுன்சிலர்கள் அனைவரையும் அள்ளிச் சென்று ஏலகிரியின் ரிசார்ட்டுகளில் பத்திரமான இடத்தில் மறைத்துவைத்திருக்கிறார்களாம் எம்.பி-யின் ஆதரவாளர்கள்.

கூவத்தூர் ஸ்டைலில் குதிரைப் பேரம்! - ஜாலி டூர்... ரிசார்ட்டில் கவுன்சிலர்கள்...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தி.மு.க நெமிலி கிழக்கு ஒன்றியச் செயலாளர் வடிவேலுவும், அவரின் மாமியார் சங்கரியும் ஒன்றியக் கவுன்சிலர்களாக வெற்றிபெற்றுள்ளதால், மாமியாரின் ஆதரவுடன் ஒன்றியத் தலைவர் பதவியைக் கைப்பற்றத் துடிக்கிறார் வடிவேலு. ஆனால், இங்கு தி.மு.க-வை வீழ்த்துவதற்காக பா.ம.க-வும், அ.தி.மு.க-வும் கூட்டுச் சேர்ந்து சுயேச்சைகள் இருவரை வளைக்கப் பார்த்தன. பேரம் படியாததால், அவர்கள் தி.மு.க பக்கம் சாய்ந்துவிட்டனர். இருந்தாலும் கவுன்சிலர்கள் யாரும் உள்ளூரில் இல்லை. தி.மு.க தரப்பு அவர்களை கர்நாடகா, ஆந்திரா பக்கம் சுற்றுலாத் தலங்களுக்கு அனுப்பிவைத்துவிட்டது என்கிறார்கள். மேற்கண்ட அனைத்து கவுன்சிலர்களுக்கும் பத்து சிறிய ஸ்வீட் பாக்ஸ்கள் முதல் ஒரு பெரிய ஸ்வீட் பாக்ஸ் வரை காணிக்கை தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்த நிர்வாகிகள்!

நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் ஒன்றியத் தலைவருக்கான போட்டிகள் அனல் பறக்கின்றன. இந்த இரண்டு மாவட்டங்களின் அனைத்து ஒன்றியங்களிலும் தி.மு.க-வே பெரும்பான்மை பெற்றிருக்கிறது. குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் கடையம், ஆலங்குளம், மேல நீலிதநல்லூர், மானூர் ஆகிய ஒன்றியங்களில் போட்டி கடுமையாக இருக்கிறது. வள்ளியூர் ஒன்றியத் தலைவர் பதவிக்கான ரேஸில் நெல்லை எம்.பி-யான ஞானதிரவியத்தின் மகன் சேவியர் செல்வராஜா, முன்னாள் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் கிரஹாம்பெல்லின் தம்பி திவாகரன் ஆகியோர் களமிறங்குகிறார்கள். இதில் சேவியர் செல்வராஜா தனக்கு ஆதரவான கவுன்சிலர்களை ஊட்டியில் தங்கவைத்திருக்கிறார் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியத் தலைவர் பதவி மறைந்த முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகன் எழில்வாணனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒன்றியச் செயலாளர் மாரித்துரையின் மகள் திவ்யாவுக்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபன் ஆதரவு தெரிவித்துள்ளார். தி.மு.க-வினருக்கு இடையே நடக்கும் இந்த கோதாவில் திவ்யாவுக்கு ஆதரவு அதிகரித்திருக்கிறது. இதையடுத்து, தன்னுடைய ஆதரவு கவுன்சிலர்களை கன்னியாகுமரிக்கு அள்ளிச் சென்றுவிட்டதாம் திவ்யா தரப்பு.

காந்தி படம் பொறித்த நோட்டுகளைவைத்தே காந்தியின் ‘பஞ்சாயத்து ராஜ்ஜியம்’ கனவைக் கேலிக்கூத்தாக்கிவருவதுதான் காலத்தின் சோகம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு