Election bannerElection banner
Published:Updated:

மதுரை ஸ்மார்ட் சிட்டி குறித்த ஆலோசனை; ரத்தான அமைச்சரின் ஆய்வுக் கூட்டம்! - அப்செட்டில் செல்லூர் ராஜூ

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

11 மணிக்கு செல்லூர் ராஜூவின் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக இருந்த கலெக்டராலும், கமிஷனராலும் அங்கிருந்து நகர முடியவில்லை.

மதுரை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக்குழுக் கூட்டத்தை கலெக்டர் தலைமையில் சு.வெங்கடேசன்.எம்.பி நடத்திய நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ நடத்தவிருந்த ஆய்வுக் கூட்டம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

மதுரையில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் சிட்டிக்கான ஆலோசனைக்குழுக் கூட்டம் நடத்தப்படாமல் இருந்த நிலையில், இது பற்றி கடந்த ஜூலை மாதம் சு.வெங்கடேசன் தலைமையில் நடந்த மாவட்ட வளர்ச்சி - ஒருங்கிணைப்பு - கண்காணிப்புக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதில், ஒரு மாதத்துக்குள் கூட்டத்தை நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அதன் பிறகும் ஆலோசனைக்குழுக் கூட்டம் நடத்தப்படவில்லை. இந்தநிலையில், ஆலோசனைக்குழுவின் தலைவரான கலெக்டருக்கு இணைத் தலைவர் என்ற முறையில் சு.வெங்கடேசன் நினைவுபடுத்தினார். கடிதமும் கொடுத்தார். ஆனால், கூட்டம் நடத்த தாமதமாகிக்கொண்டிருந்தது.

கூட்டம்
கூட்டம்

இந்தநிலையில், கலெக்டர் ஆர்வம் காட்டாவிட்டாலும், ஆலோசனைக்குழுவின் இணைத் தலைவர் என்ற முறையில் கடந்த 18-ம் தேதி கூட்டத்தைக் கூட்டுவதாக சு.வெங்கடேசன் அறிவித்தார். இதனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே கலெக்டரும், மாநகராட்சி கமிஷனரும் சு.வெங்கடேசனிடம் பேசி ஆலோசனைக் கூட்டத்தைத் தாங்களே 19-ம் தேதி நடத்துவதாகத் தெரிவித்தனர்.

இந்தநிலையில், நேற்று காலை 10 முதல் 11 மணிவரை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் கூட்டமும், அதன் பிறாகு 11 முதல் 12 மணி வரை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆய்வுக்கூட்டமும் நடைபெறும் என்று செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம்

இதைப் பார்த்து சு.வெங்கடேசன் கோபமடைந்தார். `நேரக் கட்டுப்பாட்டை கலெக்டரோ, கமிஷனரோ நிர்ணயம் செய்யவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதனால், ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பல விஷயங்கள் பேச வேண்டியிருப்பதால் நேரக் கட்டுப்பாடு இல்லை’ என்று அறிவித்தார். இதனால் நிலைமை மேலும் டென்ஷனானது.

சு.வெங்கடேசன், விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, டாக்டர் சரவணன் ஆகியோர் கலந்துகொள்ள, மாநகராட்சி கூட்டரங்கில் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் மதியம் 2 மணி வரை நடந்தது.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

11 மணிக்கு செல்லூர் ராஜூவின் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக இருந்த கலெக்டராலும், கமிஷனராலும் அங்கிருந்து நகர முடியவில்லை. அழைப்பு வரும் என்று நீண்ட நேரம் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த செல்லூர் ராஜூ ஒருகட்டத்தில் கடுப்பாகி, கூட்டம் ரத்து என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தைவிட்டு எழுந்து வர முடியாத சூழலில் கலெக்டரும் கமிஷனரும் பதறிப்போய் செல்லூர் ராஜூவைத் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி எம்.பி நடத்திய கூட்டத்தால், அமைச்சர் நடத்தவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு