Published:Updated:

தினகரன் அழிவுக்கு காரணம்.. அ.ம.மு.கவின் `ஸ்லீப்பர் செல்' தான்!- முன்னாள் அமைச்சரை விளாசிய புகழேந்தி

அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர் தினகரனோடு ஏற்பட்ட கருத்து மோதலால் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி அதிருப்தியில் இருந்தார்.

புகழேந்தி
புகழேந்தி ( எம்.விஜயகுமார் )

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தினகரனோடு ஏற்பட்ட கருத்து மோதலால், அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி அதிருப்தியில் இருந்துவந்தார். அவருடைய தலைமையில் இன்று சேலம் ரேடிசன் ஹோட்டலில் அ.ம.மு.க போட்டி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சேலம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட அ.ம.மு.க அதிருப்தி நிர்வாகிகள் வந்திருந்தார்கள். இக்கூட்டத்தின் முக்கியத் தீர்மானமாக, அனைவரும் அ.ம.மு.க-விலிருந்து விலகி விரைவில் அ.தி.மு.க-வில் இணைவதாகத் தெரிவித்தார்கள்.

பெங்களூரு புகழேந்தி
பெங்களூரு புகழேந்தி
எம். விஜயகுமார்

இதுபற்றி அ.ம.மு.க-வின் செய்தித்தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி, ''இரண்டாண்டு காலமாக பட்டா இல்லாத பொறம்போக்கு நிலத்தில் வசித்ததுபோன்று, பதிவுபெறாத அமைப்பில் ஆயிரக்கணக்கானோர் உழைத்தது வீணாகப்போனது. செயல்பட முடியாத தினகரனை நம்பியது ஏமாற்றம் அளித்துள்ளது. தினகரனுடன் இணைந்த காரணத்திற்காக மக்கள் மன்றத்தில் மன்னிப்பு கேட்கிறேன்.

தமிழகம் முழுவதும் தினகரனிடமிருந்து விலகி அ.தி.மு.க-வில் மன மகிழ்ச்சியுடன் இணைய இருக்கிறோம். அ.ம.மு.க-வின் ஸ்லீப்பர் செல்லாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் செயல்படுகிறார். தினகரனை முடித்த பிறகு அவரும் தாய் கழகமான அ.தி.மு.கவிற்குத் திரும்புவார். அ.ம.மு.க கட்சியிலிருந்து நான் உட்பட முக்கிய நிர்வாகிகள் 16 பேர் விலகி இருக்கிறோம். இதைத் தேர்தல் கமிஷனிடம் தெரிவித்துள்ளோம்.

நாங்கள் கையெழுத்திட்ட அஃபிடவிட்டை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளோம். அதனால், திட்டவட்டமாகச் சொல்லுகிறேன், இனி தினகரனின் அ.ம.மு.க கட்சியைப் பதிவுசெய்ய முடியாது. நாங்கள் கட்சிக்காகக் கடுமையாக உழைத்தோம். ஆனால், மனசாட்சி இல்லாத மனிதர் தினகரன். நான் சசிகலாவிற்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். சசிகலா சிறையிலிருந்து வெளியே வருவதற்கு தினகரன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நற்பண்புகளுடன் ஆட்சியை நடத்திவருகிறார் எடப்பாடியார். சசிகலா குறித்து அ.தி.மு.க-வில் உள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் தவறான கருத்துகளைக் கூறியதில்லை. சசிகலா சிறையிலிருந்து வெளி வந்த பிறகு, அவர் அ.தி.மு.க-வில் இணைவது குறித்து விரிவாகத் தெரியவரும். முதல்வரை அணுகி, இணைப்பு விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும். கர்நாடகா அரசியலில் இருந்து விலகி, தமிழக அரசியலில் மட்டுமே முழுவதுமாக ஈடுபட இருக்கிறேன். தினகரன் அமைப்பில் இருந்து பெரும்பாலும் விலகிவிட்டார்கள். மற்றவர்கள் மன உளைச்சலில் இருக்கிறார்கள். தினகரனின் அழிவுக்கு, முன்னாள் அமைச்சர் பழனியப்பனே முக்கியக் காரணம்.

கூட்டம்
கூட்டம்
எம். விஜயகுமார்

அ.தி.மு.க-வில் சிலீப்பர் செல் என்பது ஒன்றும் கிடையாது. ஆட்சியாளர்களை மிரட்டவே தினகரன் அதைக் கூறிவந்தார். அ.திமு.க-விற்கு எதையும் நான் எதிர்பார்த்துச் செல்லவில்லை. அ.தி.மு.க ஆட்சி நல்ல முறையில் தொடர வேண்டும். அதனால் அ.தி.மு.க-வில் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளோம். அ.ம.மு.க-வின் ஐ.டி லிங்கில் உள்ளவர்கள் ஆபாசப் படம் எடுப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் விரைவில் சிறை செல்வார்கள். நல்ல மனிதர்கள் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம். அவர்களை மக்கள் ஏற்றதன் காரணமாக இடைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்கள்'' என்றார்.