`சசிகலாவைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முடியாது!' - உறவினர்களின் கோரிக்கை நிராகரிப்பு

சசிகலா விரைவில் குணமடைய வேண்டி அவரின் குடும்ப உறவினர்கள் பெங்களூரிலுள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வி.கே.சசிகலா உடல்நிலை பாதிக்கப்பட்டு, பெங்களூரு கே.ஆர்.சந்தைப் பகுதியிலுள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டிருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, 24 மணி நேர மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். சசிகலாவின் உடல்நிலை தற்சமயம் சீராக இருக்கிறது.
இந்தநிலையில், சசிகலாவைப் பழைய விமான சாலையிலுள்ள மணிபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சிறைத்துறையிடம் சசிகலாவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், விக்டோரியா அரசு மருத்துவமனையிலேயே அனைத்து வசதிகளும் இருப்பதால், தனியார் மருத்துவமனைக்கு சசிகலா மாற்றப்பட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது.


இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் சசிகலாவை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான பரிந்துரையையும் விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் ஏற்கவில்லை. இதற்கிடையே அ.ம.மு.க கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு வந்தார். சசிகலா அனுமதிக்கப்பட்டிருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல முயன்ற சி.ஆர்.சரஸ்வதியை போலீஸார் அனுமதிக்கவில்லை.
இதனால், போலீஸாருக்கும் அ.ம.மு.க-வினருக்கும் இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, சரஸ்வதி மட்டும் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டார். மருத்துவனை டீனை சந்திக்க முடியாததால், அவர் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்துவிட்டார்.
பத்திரிகையாளர்களைச் சந்தித்த சரஸ்வதி, ``சசிகலாவின் உறவினர் டாக்டர் வெங்கடேஷுக்காகக் காத்திருக்கிறேன். அவர் வந்தவுடன் சிகிச்சை குறித்த விவரங்களை தெரியப்படுத்துகிறேன்" என்றார்.

இதற்கிடையே, விக்டோரியா மருத்துவமனையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ராஜராஜேஸ்வரி நகரில் பிரசித்திபெற்ற ராஜ ராஜேஸ்வரி கோயில் அமைந்திருக்கிறது. தமிழர்களால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கோயிலில் சசிகலாவின் பெயரில் அவருடைய உறவினர்கள் சிறப்பு அர்ச்சனை செய்தனர். `விரைவில் சசிகலா குணமடைய வேண்டும். எந்தத் தடையும் இல்லாமல் சிறையிலிருந்து வரும் 27-ம் தேதி விடுதலையாக வேண்டும்" என்று அவர்கள் வேண்டிக்கொண்டனர்.