Published:Updated:

``பெண்கள் அரசியலுக்கு வர முதலில் குரல் கொடுத்தவர் பாரதியார்”- ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

``பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று முதலில் குரல் எழுப்பியவர் பாரதியார்தான்” என எட்டயபுரத்தில் நடைபெற்ற பாரதியார் விருது வழங்கும் விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்த ஆளுநர்
பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்த ஆளுநர்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாரின் 138வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தினமணி நாளிதழ் சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பன்வாரிலால் புரோஹித்
பன்வாரிலால் புரோஹித்

இதையடுத்து மணி மண்டப வளாகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூத்த பாரதி ஆய்வாளர் இளசை மணியனுக்கு, மகாகவி பாரதியார் விருதுடன் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, ``அனைவருக்கும் வணக்கம், தமிழ் இனிமையான மொழி” என முதலில் தமிழில் பேசியவர், ``தமிழில் பேச முயற்சி செய்து வருகிறேன். இன்னும் மூன்று ஆண்டுகளில் தமிழில் பேச துவங்கிவிடுவேன்” எனச் சொல்லி உரையைத் தொடங்கினார். ``மகாகவி பாரதியார் பன்முகத்தன்மை கொண்டவர்.

பாரதி வேடமணிந்த மாணவர்கள்
பாரதி வேடமணிந்த மாணவர்கள்

பெண் விடுதலை பற்றிப் பேசிய பாரதி ஒரு பத்திரிகையாளர், பெண்ணுரிமை, பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று முதலில் குரல் எழுப்பிய பாரதி, ”ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்தல்” என ஆணுக்குப் பெண் நிகர் என்றார், நான் பாரதியையும், அவர் பிறந்த எட்டயபுரத்தினையும் வணங்குகிறேன்” எனச் சுருக்கமாகப் பேசினார்.

ஆளுநர் உரையாற்றுகையில் மகாகவி பாரதியாரின், ”ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம், எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை நினைத்தல் வேண்டும்” ஆகிய வரிகளை தமிழில்பேசி மேற்கோள் காட்டினார்.

பாரதி இல்லம் முன்பு, பாரதி வேடமணிந்த மாணவர்கள்
பாரதி இல்லம் முன்பு, பாரதி வேடமணிந்த மாணவர்கள்

ஆளுநரின் வருகைக்கு முன்பு, எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளி, மாரியப்பநாடார் நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 138 பேர் பாரதியாரின் வேடம் புனைந்து பாரதியார் பட்டம் பெற்று அரசவைக் கவிஞராக இருந்த எட்டயபுரம் எட்டப்ப மன்னனின் அரண்மனை முன்பு இருந்து கிளம்பி பாரதியாரின் பிறந்த வீட்டிற்கு ஊர்வலமாக வந்தனர்.

``அச்சமில்லை அச்சமில்லை..”, “வந்தே மாதரம்..” ஆகிய பாடல்களைப் பாடிக்கொண்டே வந்தனர். இளம்பாரதியின் பாடல்களுக்கு ஏற்றபடி மற்ற மாணவர்கள் கோலாட்டம், சிலம்பம் ஆடி கோஷங்கள் எழுப்பினர்.

பாரதி வேடமணிந்த மாணவர்கள்
பாரதி வேடமணிந்த மாணவர்கள்

தொடர்ந்து, பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து பூக்கள் தூவி வணங்கி, பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இறுதியில் பாரதி வேடமணிந்த மாணவ, மாணவியருக்குப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.