Published:Updated:

முன்னாள் எம்.எல்.ஏ-விடம் ரூ.1.5 கோடி பறிப்பு! - கடத்தலா... நாடகமா?

ஈஸ்வரன்
பிரீமியம் ஸ்டோரி
ஈஸ்வரன்

ஜூனியர் விகடனிலிருந்து பேசுகிறோம்’’ என்று நாம் அறிமுகப்படுத்திக்கொண்ட அடுத்த விநாடியே நமது அழைப்பைத் துண்டித்தார்

முன்னாள் எம்.எல்.ஏ-விடம் ரூ.1.5 கோடி பறிப்பு! - கடத்தலா... நாடகமா?

ஜூனியர் விகடனிலிருந்து பேசுகிறோம்’’ என்று நாம் அறிமுகப்படுத்திக்கொண்ட அடுத்த விநாடியே நமது அழைப்பைத் துண்டித்தார்

Published:Updated:
ஈஸ்வரன்
பிரீமியம் ஸ்டோரி
ஈஸ்வரன்

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதியின் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன் ‘கடத்தல்’ பின்னணி குறித்து விசாரித்தால், கிறுகிறுக்க வைக்கின்றன கிளைக் கதைகள்!

கடந்த 24-ம் தேதி தன்னைக் கண்ணைக் கட்டி கடத்திய மர்மக் கும்பல், ஒன்றரைக் கோடி ரூபாயைக் கொடுத்த பிறகே விடுவித்ததாக புஞ்சை புளியம்பட்டி போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார் ஈஸ்வரன். அப்படி அவரைக் ‘கடத்தி’ பணம் பறித்ததே ஈஸ்வரனின் முன்னாள் உதவியாளரும், ஈஸ்வரனுக்கு எல்லாமுமாக இருந்த மிலிட்டரி சரவணன்தான் என்ற தகவல்களும் தற்போது கசிகின்றன.

இதையடுத்து ஈஸ்வரனை செல்போனில் தொடர்புகொண்டோம். ‘‘ஜூனியர் விகடனிலிருந்து பேசுகிறோம்’’ என்று நாம் அறிமுகப்படுத்திக்கொண்ட அடுத்த விநாடியே நமது அழைப்பைத் துண்டித்தார். நம்முடைய குறுஞ்செய்திக்கும் அவரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. கடத்தலில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் மிலிட்டரி சரவணனுக்கு நாம் போன் செய்ய, அவரது போன் ‘ஸ்விட்ச் ஆஃப்’ ஆகியிருந்தது.

ஈஸ்வரனுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம். “ஈஸ்வரன் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது, அவருக்கு உதவி யாளராக மட்டுமல்லாமல் எல்லா பர்சனல் விஷயங்களையும் கவனிக்கிற ஆளாகவும் இருந்தவர் சரவணன். அதனால், ஈஸ்வரனின் லீலைகள் அனைத்தும் சரவணனுக்குத் தெரியும். இப்படியிருக்க, கடந்த சில மாதங்களாக ஈஸ்வரனுக்கும் சரவணனுக்குமிடையே சில மனஸ்தாபங்கள். குறிப்பாக, டெண்டர் விவகாரம் ஒன்றில் ஏற்பட்ட பணத் தகராறிலேயே ஈஸ்வரனைக் கடத்திக் கொண்டுபோய் அடித்து உதைத்திருக்கிறார் சரவணன்’’ என்றனர்.

முன்னாள் எம்.எல்.ஏ-விடம் ரூ.1.5 கோடி பறிப்பு! - கடத்தலா... நாடகமா?

விஷயமறிந்த இன்னும் சிலரோ, “சல்லிப் பைசாவைக்கூட செலவழிக்காதவர் ஈஸ்வரன். அப்படிப்பட்டவர் கடத்தல் கும்பலை வீட்டுக்கே வரவழைத்து ஒன்றரைக் கோடியைத் தூக்கிக் கொடுத்ததாகச் சொல்றது சுத்தப் பொய். வீட்டுல எப்படி ரொக்கமாக இவ்வளவு ரூபாயை வெச்சுருந்தாரு... அவர் வீட்டுல இருக்கிற சிசிடிவி கேமராவில் எல்லாம் பதிவாகியிருக்குமே... இதையெல்லாம் நோண்டுனா ஈஸ்வரன்தான் சிக்கல்ல மாட்டுவாரு. ஈஸ்வரனின் ஏதோவொரு விஷயத்தை அம்பலமாக்க நினைத்த சரவணனைத் தூக்கி உள்ளே வைக்க... ஈஸ்வரன் நடத்திய நாடகமாகத்தான் இது இருக்கும்” என்றனர்.

காவல் நிலைய ஆய்வாளர் அன்பரசு இது குறித்துப் பேசுகையில், “கடத்தல் கும்பல், ஈஸ்வரன் வீட்டில் வெச்சுதான் ஒன்றரைக் கோடி ரூபாயை வாங்கினதாகப் புகார். அதை செக் பண்ணலாம்னா ‘10 நாளா வீட்ல சிசிடிவி வொர்க் ஆகலை’னு ஈஸ்வரன் சொல்றாரு. சரவணனைப் புடிச்சாத்தான் என்ன நடந்ததுன்னு முழுசா தெரியும்” என்றார்.

சத்தியமங்கலம் டி.எஸ்.பி சந்திரசேகரனிடம் பேசினோம். ‘‘சரவணன், மோகன் உட்பட ஆறு பேர்மீது ஈஸ்வரன் புகார் கொடுத்திருக்கிறார். சம்பந்தப்பட்டவர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து, தீவிரமாகத் தேடிவருகிறோம். ஈஸ்வரன் கொடுத்த புகாரில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது எனச் சந்தேகப்படுவது சரியல்ல. குற்றவாளிகளைப் பிடித்த பிறகுதான் உண்மை தெரியவரும்” என்றார்.

என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது!