Published:Updated:

`கங்கனாவைக் குறிப்பிடவில்லை; பொதுவாகப் பேசியது!'’- பின்வாங்கிய சஞ்சய் ராவத்

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

சஞ்சய் ராவத்தின் வழக்கறிஞர் பிரதீப் தோரத், ``ஆடியோவில் மனுதாரரின் (கங்கனா) பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அவரின் வார்த்தைகள் பொதுவாகப் பேசப்பட்டவை'' என்ற வாதத்தை முனவைத்தார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் பாலி ஹில் அலுவலகத்தை பி.எம்.சி இடித்தது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்தின் ஆடியோ பதிவு முக்கியமான ஆதாரமாக கங்கனாவின் வழக்கறிஞரால் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைத் தொடர்ந்து நடிகை கங்கனா ரணாவத் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளைத் தெரிவித்து, பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிவருகிறார்.

சமீபத்தில், மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்போல் மாறியிருப்பதாக ட்விட்டரில் கங்கனா வெளியிட்ட கருத்து, பெரும் சர்ச்சையாக உருமாற, சிவசேனா கட்சியினர் மத்தியில் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்தநிலையில் மும்பை பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியிலுள்ள கங்கனாவின் பங்களா, சட்டவிதிகளை மீறிக் கட்டப்பட்டது என்று கூறி, அதன் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். இதை எதிர்த்து ரூபாய் 2 கோடி இழப்பீடு அளிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் நடிகை கங்கனா வழக்கு தொடர்ந்தார்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

இரு தினங்களுக்கு முன்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஷாருக் ஜிம் கதவாலா, ரியாஸ் இக்பால் சாக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. அப்போது, ``சட்டவிதிகளை மீறிய அனைத்துக் கட்டடங்கள் வழக்கிலும் இப்படித்தான் அவசர அவசரமாக வீடுகள் இடிக்கப்பட்டனவா... இந்த வீட்டை மட்டும் இடிப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் அவசரம் காட்டியது ஏன்... நடிகை கங்கனாவுக்குப் போதிய அவகாசத்தை மாநகராட்சிகள் அதிகாரிகள் தர மறுத்தது ஏன்?” ஆகிய கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு, 28-ம் தேதியான நேற்று மீண்டும் விசாரிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில், கங்கனா ரணாவத்தின் வழக்கறிஞர், ``கங்கனாவின் அலுவலகத்தில் எந்தக் கட்டுமானமும் நடக்கவில்லை. எந்தவொரு வேலையும் நடந்து கொண்டிருப்பதைக் கண்டறிந்ததன் அடிப்படையில் நோட்டீஸ் வழங்கப்படவில்லை. பி.எம்.சி சட்டத்தின் பிரிவு 354 ஏ-யின் கீழ், பணிகள் நடைபெற்றுவருவதாகக் கருதி, அதிகாரிகள் அனுமதிபெற்ற ஆணையைச் சமர்ப்பிக்க, சம்பந்தப்பட்ட நபருக்கு ஒரு வாய்ப்பை வழங்கி, நோட்டீஸ் அளிக்க வேண்டும். எடுத்தவுடன் இடிப்பது பற்றிச் சிந்தித்திருக்கக் கூடாது. பி.எம்.சி அதிகாரிகள் விதிகளை மீறிச் செயல்பட்டதால்தான் கங்கனாவுக்கு இந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கின்றன" என்றார்.

இதையடுத்து கங்கனா ரணாவத்,``உண்மை என்னவென்றால், எனது ட்விட்டர் பதிவுகளில் ஒன்றுக்கு சஞ்சய் ராவத், கடுமையாக பதிலளித்திருந்தார். `எனக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்' என்று அதில் சஞ்சய் கூறியிருந்தார்'' என்று நீதிமன்றத்தில் கூறினார். அதேபோல், தனக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கும் வகையில் பேட்டி ஒன்றில் சஞ்சய் ராவத் பேசியிருந்ததாகவும் கங்கனா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்
www.instagram.com/team_kangana_ranaut

இந்தநிலையில் கங்கனாவின் வழக்கறிஞர், சஞ்சய் ராவத் பேசிய ஆடியோ பதிவு அடங்கிய டிவிடி ஒன்றை நீதிபதிகள் முன்பு சமர்ப்பித்தார். ஆடியோ பதிவுக்கு ஆட்சேபனை தெரிவித்த சஞ்சய் ராவத்தின் வழக்கறிஞர் பிரதீப் தோரத், ``ஆடியோவில் மனுதாரரின் (கங்கனா) பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அவரின் வார்த்தைகள் பொதுவாகப் பேசப்பட்டவை'' என்ற வாதத்தை முன்வைத்தார்.

நீதிபதிகளும், சஞ்சய் ராவத் கங்கனாவின் பெயரைச் சுட்டிக்காட்டிப் பேசவில்லை என்பதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சஞ்சய் ராவத்தின் வழக்கறிஞர் தோரத் தங்களது தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாகக் கூறினார். இதையடுத்து, நீதிமன்றம் வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தது.

அடுத்த கட்டுரைக்கு