Election bannerElection banner
Published:Updated:

`வாரிசு அரசியல்... அரசியல் அறிவு, அனுபவமற்றவர்கள்!’ - எதிர்க்கட்சிகளைச் சாடிய நிதிஷ் குமார்

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

`என்னைப் பற்றி தரக்குறைவாகப் பேசி, விளம்பரம் தேடிக்கொள்ள விரும்புகின்றனர். அரசியலில் அறிவும், அனுபவமற்றவர்களுமே என்னைப் பற்றித் தவறாகப் பேசிவருகின்றனர்’ - நிதிஷ் குமார்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் பீகார் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. பெருந்தொற்று காலத்தில் நடக்கும் முதல் தேர்தலுக்கு பீகார் தயாராகிவருகிறது. நாளை (28.10.2020) முதல் மூன்று கட்டங்களாக நடக்கவிருக்கும் தேர்தலுக்காக பீகாரில் மாநில, தேசியக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் விறுவிறு பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பாட்னா மாவட்டம், முசாபர்பூரிலுள்ள சக்ரா நகரில் போட்டியிடும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி வேட்பாளரான அசோக் குமார் சௌத்ரிக்கு ஆதரவாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் வாக்கு சேகரித்தார்.

ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ்
ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ்

அப்போது பேசிய அவர்,``மத்திய அரசு வெளியிட்டிருக்கும் கணக்கெடுப்புகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பீகாரில் நிகழும் குற்றவியல் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இந்தியாவில் பாதுகாப்பான மாநிலங்களில் பீகார் 23-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

பீகார் தேர்தல்: `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் சிறையிலடைக்கப்படுவார்!’ - சிராக் பஸ்வான்

சிலர், என்னைப் பற்றித் தரக்குறைவாகப் பேசி விளம்பரம் தேடிக்கொள்ள விரும்புகின்றனர். அரசியலில் அறிவும், அனுபவமற்றவர்களுமே என்னைப் பற்றித் தவறாகப் பேசிவருகின்றனர். என் பணியே எனக்கு முக்கியமே அன்றி, விளம்பரம் அவசியமில்லை. அதேபோல், சிலர் பீகார் மாநிலத்தின் மக்கள் நலனைவிட, அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காகவே அதிக அக்கறைகொண்டு பாடுபடுகின்றனர். நான் கவலைகொள்வதெல்லாம் அரசியல் களத்தில் ஊடுருவ நினைக்கும் இந்த வாரிசு அரசியலைப் பற்றித்தான்” என்று பேசினார். எதிர்க்கட்சி வேட்பாளரான லாலுபிரசாத்தின் மகன் தேஜஸ்வியின் பிரசாரத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி நிதிஷ் விமர்சித்தார்.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

தொடர்ந்து பேசிய நிதிஷ் குமார்,``நான் இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் 15 வருடங்களாகப் பாடுபட்டுவருகிறேன். இந்த பீகார் மக்கள்தான் என் குடும்பம். எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கினீர்களென்றால், அந்தப் பணியைத் தொடர்வேன். உங்களின் வளர்ச்சிக்காக மேலும் பல சிறப்பான திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படவிருக்கின்றன” என்று கூறினார்.

பீகார் சட்டபேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது சட்டபேரவைத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் பிரசாரம் ஓய்ந்திருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு