Published:Updated:

25 மெட்ரிக் டன்... 64 பஸ் ரூட்... ஆபரேஷன் அ.தி.மு.க!

எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்

இந்தியா முழுவதும் மாநில அரசுகளை மிரட்டுவதற்காகவே வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட சில துறைகளை மத்திய பா.ஜ.க அரசு பயன்படுத்திவருகிறது.

25 மெட்ரிக் டன்... 64 பஸ் ரூட்... ஆபரேஷன் அ.தி.மு.க!

இந்தியா முழுவதும் மாநில அரசுகளை மிரட்டுவதற்காகவே வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட சில துறைகளை மத்திய பா.ஜ.க அரசு பயன்படுத்திவருகிறது.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்
‘‘விரைவில் அமைச்சர்கள்மீது அடுத்தடுத்து ஐ.டி ரெய்டுகள் நடத்தி, அவர்களை முழுமையாக லாக் செய்துவிடுவார்கள்.” - ‘முன்கூட்டியே தேர்தல்... முடிவுக்கு வருகிறதா கூட்டணி? பன் வார் லால்!’ என்ற தலைப்பில் கடந்த ஜூ.வி இதழில் இப்படி எழுதியிருந்தோம். நம் இதழ் கடைகளுக்கு வரும் முன்பே நாம் சொன்னதுபோலவே பா.ஜ.க தனது ஆட்டத்தை அதிரடியாக அடித்து ஆட ஆரம்பித்துவிட்டது. அதுவும் முதல்வர் பழனிசாமியின் சொந்த மாவட்டத்தை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தி லிருந்தே இந்த அதிரடியைத் தொடங்கியிருப்பதுதான் ஹைலைட்!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியா முழுவதும் மாநில அரசுகளை மிரட்டுவதற்காகவே வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட சில துறைகளை மத்திய பா.ஜ.க அரசு பயன்படுத்திவருகிறது என்பது பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டு. இந்தச் ‘சொல்லடி’க்கெல்லாம் கவலைப்படாமல் அரசியல் ‘உள்ளடி’ வேலைகளை கனகச்சிதமாக செய்துமுடிக்கிறது வருமான வரித்துறை. தமிழகத்தில் சிலபல வருடங்களாக அவ்வப்போது அரங்கேறும் சில ஐ.டி ரெய்டுகளின் பின்னணியும் இதுதான். தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில்... ரஜினி அரசியல் பிரவேச அறிவிப்பைத் தொடர்ந்து இது இன்னும் தீவிரமாகியிருக்கிறது. டிசம்பர் 14-ம் தேதி தொடங்கி 17-ம் தேதிவரை ஈரோடு உள்ளிட்ட இடங்களில் தமிழகத்தின் அதிகார மையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட ரெய்டின் பின்னணியும் இதுதான் என்கிறார்கள் இதன் உள்விவரங்கள் அறிந்தவர்கள்!

இது குறித்து நம்மிடம் பேசிய உள்விவரங்கள் அறிந்த சிலர், “பா.ஜ.க-வுக்கு அ.தி.மு.க இணக்கமாக இருந்தாலும், அரசியல் சதுரங்க ஆட்டத்துக்காக ஆளும்தரப்பின் ஊழல் குறித்த ஃபைல்களை மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ரகசியமாக அனுப்பிக்கொண்டேதான் இருந்தார்கள். ஐரோப்பிய நாடுகளில் நட்சத்திர ஹோட்டல்கள், ஆப்பிரிக்க நாடுகளில் கனிமச் சுரங்கங்கள், உல்லாசத் தீவுகளில் ரிசார்ட்டுகள் எனத் தமிழக ஆளும்தரப்பு புள்ளிகள் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துகளைப் பார்த்து மத்திய ‘புள்ளி’களே மலைத்துப்போயிருக்கிறார்கள். ஆனாலும், தமிழகத்தில் தங்களுக்குக் கூட்டணிக்கான ‘பிடி’ ஒன்று வேண்டுமே என்றுதான் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; ஆனாலும், ‘நாங்கள் உங்களை எங்கள் கன்ட்ரோலில்தான் வைத்திருக்கிறோம்’ என்பதை உணர்த்த அவ்வப்போது ஐ.டி ரெய்டுகளையும் நடத்தத் தவறவில்லை மத்திய அரசு.

எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்

25 மெட்ரிக் டன் எங்கே?

இந்தநிலையில் தற்போது அ.தி.மு.க தரப்புக்கு எதிராகத் தனது பிடியை மேலும் இறுக்கியிருக்கிறது டெல்லி. இதன் ஆரம்ப நடவடிக்கைதான், ஈரோட்டை தலைமையிடமாகக்கொண்ட ‘ஸ்ரீபதி அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ரெய்டு. இதற்காக, கடந்த 15 நாள்களுக்கும் மேலாக அந்த நிறுவனம் தொடர்பான 17 பேரின் செல்போன்களை ரகசியமாக டேப் செய்து 24 மணி நேரமும் ‘வெயிட்’டான தகவலுக்காகக் காத்திருந்தது ஒரு டீம். அந்த 17 பேரில் கொங்கு மண்டலத்தின் உச்ச பிரமுகரின் வாரிசு, இன்னோர் அமைச்சரின் வாரிசு, உச்ச பிரமுகரின் பெங்களூரு உறவினர் ஒருவர், சமீபத்தில் பசையான பதவிக்கு மாற்றலான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் அடக்கம்.

இப்படிக் காத்திருந்தபோதுதான் கடந்த வாரம் ஒருநாள் மேற்கண்ட தரப்பினர்களில் இருவர், ‘25 மெட்ரிக் டன்னை எங்கே அனுப்புவது?’ என்று கோட்வேர்ட் பயன்படுத்திப் பேசியிருக்கிறார்கள். அதிகாரிகள் டீம் இதை ஆரம்பத்தில் சாதாரணமாகக் கடந்தாலும், ஏற்கெனவே நான்கைந்து முறை இதே வார்த்தைகளை இவர்கள் பயன்படுத்தியதைக் கவனித்து சுதாரித்திருக்கிறது. இதை நூல்பிடித்து விசாரித்ததில்தான் ‘25 மெட்ரிக் டன்’ என்கிற வார்த்தை கரன்சியைக் குறிக்கிறது என்கிற உறுதியான முடிவுக்கு வந்தார்கள். விசாரணையில் சேலம், ஈரோடு, பெங்களூரு, புனே, நொய்டா ஆகிய நகரங்களிலும், ஆஸ்திரேலியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் ஹோட்டல், மின்சார உற்பத்தி, பதப்படுத்தும் தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் பெரும் தொகைகள் முதலீடுகள் செய்யப்பட்டிருப்பதை சில ஆவணங்கள் உறுதிப்படுத்தின. ஆனாலும் அது 25 கோடி ரூபாயா, 25,000 கோடி ரூபாயா என்பது மட்டும் சற்றே குழப்பமாக இருக்கிறது.

இதுதவிர, கடந்த அக்டோபர் மாதம் மத்திய உளவுத்துறையினர் அனுப்பிய ரகசிய ‘நோட்’ ஒன்றும், கவர்னர் தரப்பில் சமீபத்தில் அனுப்பிய ஃபைலில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல் ஒன்றும், தற்போது கண்டுபிடித்திருக்கும் தகவலும் ஒன்றாக ‘மேட்ச்’ ஆகவே ‘யுரேகா!’ என்று துள்ளிக்குதித்த அதிகாரிகள் தரப்பினர் உடனடியாக டெல்லி மேலிடத்துக்குத் தகவல் அனுப்பியிருக்கிறார்கள். இதையடுத்துதான், டெல்லியிலிருந்து ரெய்டுக்கு உடனடியாக சிக்னல் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து டிசம்பர் 14-ம் தேதி ஈரோட்டிலுள்ள ஸ்ரீபதி குழுமத்தின் தலைமை அலுவலகத்தைச் சுற்றிவளைத்தது வருமான வரித்துறை. நிறுவனத்தின் இயக்குநர்களான சேகர், ஸ்ரீனிவாசமூர்த்தி, பூபதி ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என 25 இடங்களில் தீவிர சோதனை நடந்தது. நான்கு நாள்களாக நீடித்த ரெய்டில் 20 கோடி ரூபாய் ரொக்கப் பணம், 700 கோடிக்கும் மேல் கணக்கில் வராத ஆவணங்கள், ஹார்ட் டிஸ்குகள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியிருக் கிறார்கள்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

யார் அந்தப் பெரியவர்?

தனியார் பேருந்து போக்குவரத்தைக் கையிலெடுத்திருந்த இந்த நிறுவனம், ஏற்கெனவே பஸ் ரூட்களை கையில் வைத்திருந்த வர்களிடமிருந்து, 64 தனியார் பேருந்து ரூட்களை சமீபத்தில் வாங்கியிருக்கிறது. ஒவ்வொரு ரூட்டுக்கும் மூன்று கோடி முதல் ஐந்து கோடி ரூபாய் வரை பணம் கைமாறியிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், ஒவ்வொரு ரூட்டுக்கும் மூன்று லட்சம், ஐந்து லட்சம் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள். மார்க்கெட் மதிப்புக்கும் இதற்கும் துளியும் தொடர்பு இல்லை.

அதேபோல், பெரும் தொகை வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆளும்தரப்பின் முக்கியப் புள்ளியின் பெரும் தொகையை இந்த நிறுவனமே பராமரித்து வந்திருக்கிறது. அவருக்காகவே பஸ்களும் வாங்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கிறோம். அத்துடன், ‘பெரியவர்’ என்று குறிப்பிட்டு சில ஆவணங்களும் சிக்கியுள்ளன. கணக்குகளைக் குறித்துவைத்திருந்த நோட்டில், ‘பெரியவர்’ என்று பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அந்தப் பெரியவர் யார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேலும், சில ஆவணங்களும் ‘பெரியவர்’ பெயரில் கிடைத்துள்ளன. சொல்லப்போனால், ‘பெரியவர்’தான் இந்த நிறுவனத்துக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்” என்றவர்கள், மேற்கண்ட நிறுவனத்தின் பின்னணியையும் விவரித்தார்கள்.

ஸ்ரீனிவாசமூர்த்தி - சேகர்
ஸ்ரீனிவாசமூர்த்தி - சேகர்

நிறுவனம் வளர்ந்த கதை!

“இந்த நிறுவனம் 2019-ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. உண்மையில், பல ஆண்டுகளாகத் தொழிலில் இருக்கும் அந்த நிறுவனம், 2019-ல்தான் பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாற்றப்பட்டது. ரியல் எஸ்டேட், கட்டுமானம், கல் குவாரிகள், மசாலாப் பொருள்கள் தயாரிக்கும் கம்பெனி, திருமண மண்டபம் மற்றும் `ஸ்ரீபதி’ எனும் பெயரில் பஸ்கள் என 30-க்கும் மேற்பட்ட பிசினஸ்களை செய்துவருகிறது இந்த நிறுவனம். கரூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான டெண்டரை ஸ்ரீபதி குழுமம் கைப்பற்றியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள், முதல்வர் பழனிசாமியின் சம்பந்தி சுப்பிரமணியத்தின் சம்பந்தியான ராமலிங்கத்தின் ‘ராமலிங்கம் அண்ட் கோ’ நிறுவனத்துடன் இணைந்து கட்டுமானம் உட்பட பல பிசினஸ்களை செய்துவந்திருக்கிறார்கள்.

1989-ல் சின்னச் சின்ன டெண்டர்களை எடுத்துச் செய்ய ஆரம்பித்த ஸ்ரீபதி அசோசியேட்ஸ்’ நிறுவனத்தை, சகோதரர்களான சேகர், பூபதி இருவரும் சேர்ந்துதான் ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த நிறுவனத்தில் எடப்பாடியின் உறவினருக்கு நெருக்கமான ஸ்ரீனிவாசமூர்த்தி வந்து சேர்ந்த பின்னரே அது பிரமாண்ட வளர்ச்சி அடைந் திருக்கிறது.

1997-ல் தொடங்கப்பட்ட ‘சுப்ரீம் சாகோ இண்டஸ்ட்ரீஸ் ஈரோடு பிரைவேட் லிமிடெட்’ எனும் நிறுவனத்தில் எடப்பாடியின் உறவினரான ராமலிங்கத்தின் மனைவி தமிழ்செல்வியும், ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாச மூர்த்தியும் இயக்குநர்களாக இருந்திருக்கிறார்கள். 2015-ல் ஆரம்பிக்கப்பட்ட ‘சுகன்முல் துகர் டெவலப்பர்ஸ்’ எனும் நிறுவனத்தில் ராமலிங்கமும், ஸ்ரீனிவாசமூர்த்தியும் இயக்குநர்களாக இருந்திருக்கிறார்கள். ராமலிங்கத்தின் ‘ஸ்பேக் ஸ்டார்ச் புராடெக்ட்ஸ்’ நிறுவனத்தில் ஸ்ரீபதி அசோசியேட்ஸின் இன்னோர் இயக்குநரான சேகர் பதவி வகித்திருக்கிறார்.

தமிழக முன்னாள் உச்ச அதிகாரியாக இருந்த ஒருவருக்கும், ஸ்ரீபதி குழுமத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஆரம்பகாலத்தில் அரசு ஒப்பந்தங்களைப் பெற அவரது தரப்பு உதவி செய்திருக்கிறது. தவிர, ஸ்ரீபதி குழுமம் ஆரம்பத்தில் துணை முதல்வர் பன்னீர் செல்வத்துடன் தொடர்பில் இருந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்த நிறுவனம் முழுக்க முழுக்க எடப்பாடிக்கு நெருக்கமான நிறுவனமாக மாறியிருக்கிறது” என்றார்கள் விரிவாக.

டெல்லி பா.ஜ.க மேலிடத்துக்கு நெருக்கமான ஒரு பிரமுகரிடம் இது குறித்துப் பேசினோம்... ‘‘டெல்லி மேலிடம் ‘ஆபரேஷன் அ.தி.மு.க’ என்ற பெயரில் ஒரு சர்ஜிக்கல் அட்டாக்கைத் தொடங்கி யிருக்கிறது. ‘அ.தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டாம்’ என்று பா.ஜ.க தலைமை முடிவெடுத்துவிட்டால், இந்த நிறுவனத்தில் கிடைத்த ஆவணங்களைவைத்து, குறிப்பாக மூன்று இடங்களில் ரெய்டு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எடப்பாடியைச் சுற்றியுள்ள சிலர் வளைக்கப் படலாம். மேலும் சில இடங்களும் குறிவைக்கப் பட்டிருக்கின்றன. சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம், சேலத்தில் இரண்டு பெரிய மனிதர்கள், உச்சத்திலிருக்கும் அதிகாரி ஒருவர் என்று பெரும் பட்டியலே வருமான வரித்துறையினர் கையிலுள்ளது. தவிர, ஈரோடு நிறுவனம் தமிழக அரசின் மீன்வளத்துறையிலும் பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்களை எடுத்திருக்கிறது. அது குறித்த ஆவணங்களும் சிக்கியிருப்பதால், அந்தத் துறை சார்பான முக்கியப் புள்ளிக்கும் சிக்கல் வரலாம்.

25 மெட்ரிக் டன்... 64 பஸ் ரூட்... ஆபரேஷன் அ.தி.மு.க!

இன்னொரு முக்கியமான விஷயம்... ஸ்ரீபதி குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்துகொண்டிருந்த போதே டிசம்பர் 16-ம் தேதியன்று, எடப்பாடிக்கு நெருக்கமான இரண்டு உறவுகளுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தவிர, கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி யிடம் டெல்லி பா.ஜ.க வி.ஐ.பி ஒருவர் கடந்த வாரம் பேசியிருக்கிறார். அப்போது, ‘நீங்கள் அ.தி.மு.க மீது போட்டிருக்கும் வழக்குகளின் நிலை என்ன, அதன் விவரங்களை அனுப்பவும்’ என்று கேட்டிருக்கிறார். ரெய்டு நடந்த அதே நாள்களில் சுகாதாரத்துறை தொடர்பான ஃபைல் ஒன்றும் மத்திய அரசுக்குச் சென்றுள்ளது.

ஏற்கெனவே அ.தி.மு.க-வுக்கு எதிராகப் பல்வேறு ஊழல் வழக்குகள் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தவிர, ஆர்.கே.நகரில் பணம் வழங்கிய வழக்கு, இரட்டை இலைச் சின்னம் வழக்கு என அரசியல்ரீதியான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. எடப்பாடி பழனிசாமி தன் உறவினர் ராமலிங்கத்துக்கு விதிமுறைகளைமீறி 4,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் வழங்கிய வழக்கு ஒன்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேற்கண்ட வழக்குகளுக்கெல்லாம் எந்த நேரத்திலும் உயிர் கொடுக்கப்படலாம். அனைத்து வழக்குகளும் ஒரே நேரத்தில் பாயும் பட்சத்தில் அ.தி.மு.க-வின் உச்ச பிரமுகர்கள் ஏழெட்டு பேர் சிறைக்குச் சென்றாலும் ஆச்சர்யம் இல்லை” என்றார்!

அதேசமயம் பா.ஜ.க-வின் மூவ்களை உன்னிப்பாக கவனித்துவரும் ஆளும்தரப்பினரோ, “சிறைக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். பா.ஜ.க எங்கள் தரப்பினர்மீது ஏவும் ஒவ்வோர் அஸ்திரமும் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள். ஏனெனில் பல மாநிலங்களிலும் இதே மாதிரியான மிரட்டல்களைத்தான் மத்திய பா.ஜ.க அரசு செய்துவருகிறது. இதனால், எங்களுக்கு அனுதாப ஓட்டுகள்தான் அதிகரிக்கும்” என்றார்கள்.

அரசியலில் நாளை எதுவும் நடக்கலாம். ஏன்... எடப்பாடியும் மோடியும் நாளையே கட்டியணைத்து போஸ் கொடுக்கலாம். அரசியல் மாட்சிமை மறைந்துவிட்ட காலகட்டத்தில் ‘அதிகார மோகம்’ அத்தனை காட்சிகளையும் ஒரு கணத்தில் மாற்றிவிடும். இந்த நாடகத்தை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

ராமலிங்கத்துக்கும் சிக்கலா?

ஒருபுறம் எடப்பாடி தரப்புக்கு நெருக்கமான நிறுவனத்தில் நடந்த வருமானவரி சோதனை ஆளும் தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் நிலையில், ஜி.எஸ்.டி ஆணையரகம் மற்றொருபுறம் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. எடப்பாடியின் உறவினரான ராமலிங்கம் நடத்திவரும் கட்டட நிறுவனத்தில் ஜி.எஸ்.டி-யில் 18 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக ஜி.எஸ்.டி ஆணையரகம் புகார் பதிவுசெய்துள்ளது. இதுவும் எடப்பாடிக்குவைக்கப்பட்ட செக்காகவே பார்க்கப்படுகிறது. ஜி.எஸ்.டி சட்டங்களின்படி இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டால், வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைக்க முடியும். எனவே, 18 கோடி ரூபாய் முறைகேடு செய்திருக்கும் எடப்பாடியின் உறவினரான ராமலிங்கம் மீது மத்திய அரசின் நடவடிக்கை எப்போது வேண்டுமானாலும் பாயலாம்.

ஆபரேஷன் சூத்திரதாரி!

கடந்த மாதம் தமிழக வருமான வரித் துறையில் விசாரணைப் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் சிலரை மாற்றம் செய்து டெல்லியிலிருந்து உத்தரவு வந்துள்ளது. நீண்டநாள்களாக ஒரே இடத்திலுள்ள அதிகாரிகளால் வருமான வரித்துறையின் மூவ்கள் மாநில அரசுத் தரப்புக்கு உடனடியாகத் தெரிந்து விடுகிறது என்பதால் இந்த மாற்றம் என்கிறார்கள். மேலும், தமிழக வருமான வரித்துறையின் உயரதிகாரி ஒருவரை டெல்லி தலைமையிடத்துக்கு மாற்றம் செய்வதற்காகத் தயாரான ஃபைல் ஒன்று, திடீரென்று நிறுத்தி வைக்கப் பட்டதுடன், அந்த அதிகாரிக்குக் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டது. சில முக்கிய அசைன்மென்ட்களும் அவர் வசம் ஒப்படைக்கப்பட்டன. தற்போதைய ‘ஆபரேஷன் அ.தி.மு.க’-வுக்கும் அவர்தான் சூத்ரதாரி என்கிறார்கள்.