Published:Updated:

`அ.தி.மு.க மா.செ-க்கள் மதிக்கவே இல்லை!’- பொன்.ராதாகிருஷ்ணன் மீது பாயும் பா.ஜ.க-வினர்

அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க-வுக்கு உள்ளாட்சித் தேர்தலில் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தரவில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் மீது அக்கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு 18,570 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட நிலையில், தங்களுக்கு உரிய எண்ணிக்கையில் சீட் ஒதுக்கீடு செய்யவில்லை என அ.தி.மு.க மீது கூட்டணிக் கட்சிகள் கோபத்தில் உள்ளன.

பல்வேறு மாவட்டங்களில் பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க., த.மா.கா ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அ.தி.மு.க-வை எதிர்த்துப் போட்டியிடுகின்றனர். குறிப்பாக, பா.ஜ.க-வினரின் குமுறல் அதிகமாகவே உள்ளது. அ.தி.மு.க தலைமையிடம் பேசி உரிய எண்ணிக்கையில் சீட் பெற்றுத் தரவில்லை என அக்கட்சியின் உள்ளாட்சித் தேர்தல் பணிக்குழு தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது புகார் வாசிக்கிறார்கள்.

கமலாலயம்
கமலாலயம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், ``உள்ளாட்சித் தேர்தலுக்காக பொன்னார் தலைமையில் 15 பேர் கொண்ட பணிக்குழு போடப்பட்டது. அப்போதே மாவட்டத் தலைவர்களிடம் கலந்துபேசி ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியினர் போட்டியிட விரும்பும் ஊராட்சிப் பதவிகளை கேட்டுத் தெரிந்திருக்க வேண்டும். அ.தி.மு.க-விடம் எவ்வளவு சதவிகிதம் சீட்டுகளைக் கேட்டுப் பெறுவது எனக் கலந்தாலோசித்திருக்க வேண்டும். எந்த முன்னேற்பாடும் இல்லாமல் நேராக அ.தி.மு.க தலைவர்களிடம் பேச்சுவார்த்தையில் உட்கார்ந்தவுடன் அவர்கள் மாவட்டச் செயலாளர்களைக் கைகாட்டி விட்டார்கள். அவர்களோ எங்களை மதிப்பதுகூட இல்லை.

மனம் வெதும்பிய நிலையில்தான் புதுக்கோட்டை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பா.ஜ.க-வினர் தனியாகப் போட்டியிடுவது எனத் தீர்மானித்தனர். கேசவ விநாயகத்திடம் கூறிவிட்டு வேட்புமனுவும் தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் பா.ஜ.க-வினர் தனித்துப் போட்டியிட களமிறங்கினர்.

இன்று வரையில் அ.தி.மு.க தலைவர்களிடம் பேசி எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் பதவிகளுக்கு அ.தி.மு.க-வின் ஆதரவை பொன்.ராதாகிருஷ்ணன் பெற்றுத் தரவில்லை. இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியாகிவிட்ட சூழலில், பா.ஜ.க வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்குத் தேவையான பணத்தையும் அளிக்கவில்லை. கட்சியை நம்பி நட்டாற்றில் நிற்பதுதான் மிச்சம்” எனக் கொந்தளித்தனர்.

பொன்னார், கேசவ விநாயகம்
பொன்னார், கேசவ விநாயகம்

இதற்குப் பதில் அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள், ``முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி கிளம்புவதற்கு முன்னதாகக்கூட அவரைச் சந்தித்து உள்ளாட்சித் தேர்தல் சீட் ஒதுக்கீடு சம்பந்தமாக பொன்னார் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜெயலலிதா பாணியில் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு தனித்து களமிறங்க அ.தி.மு.க முடிவெடுத்துவிட்டது. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்கள்.

நாங்கள் அனுப்பிய பட்டியல்களை மாவட்டச் செயலாளர்கள் தூக்கி ஓரத்தில் போட்டுவிட்டனர். இந்த அவமானங்களை நாங்கள் மட்டுமல்ல அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சிகளும் சந்திக்கின்றன. இவ்வளவு இன்னல்களுக்கு நடுவிலும் ஒருசில மாவட்டங்களில் பா.ஜ.க-வினருக்கு சீட்டுகளைப் பேசி பொன்னார் முடித்து தந்துள்ளார். இதற்கு மேல் அவர் என்ன செய்ய முடியும்?” என்றனர்.

``நீங்க யாரு... வீட்ல யாருமில்ல" - கொள்ளையனைத் தடுத்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்!