Published:Updated:

மதுரை: பா.ஜ.க - வி.சி.க தொண்டர்கள் திடீர் மோதல்; எல்.முருகன் சாலை மறியல்! - என்ன நடந்தது?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்

காளையார்கோவிலிலுள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்துக்கு மரியாதை செய்வதற்கு செல்ல அதிகாரிகளிடம் முறையான அனுமதி வாங்காமல் எல்.முருகனும் பா.ஜ.க-வினரும் வாகனங்களில் வந்ததால், காவல்துறையினர் அவர்களை அனுமதிக்க மறுத்தனர்.

பா.ஜ.க-வினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதலால் மதுரை கலெக்டர் அலுவலகச் சாலையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பா.ஜ.க-வினர் சிலர் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்பட்ட நிலையில் 50-க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் கைதுசெய்திருக்கிறார்கள்.

தடுத்து நிறுத்தும் கவால்துறையினர்
தடுத்து நிறுத்தும் கவால்துறையினர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜ.க-வினர் இன்று மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பாக வந்த நிலையில் காவல்துறையினர் போராட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை.

இந்தநிலையில், `பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவோம்’ என்று கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பாகக் கூடினார்கள். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பா.ஜ.க-வினர் புகார்
பா.ஜ.க-வினர் புகார்

போராட்டம் நடத்தவந்த பா.ஜ.க-வினரை காவல்துறையினர் அங்கிருந்து கிளம்பச் சொன்னார்கள். எனினும், அங்கேயே நின்றுகொண்டிருந்த பா.ஜ.க-வினர் சிலருக்கும், குழுமியிருந்த வி.சி.க-வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில் பா.ஜ.க-வினர் தாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. பின்பு அங்கிருந்து அவர்களை காவல்துறையினர் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.

`40 நிமிட உரை; முழுமையாகக் கேட்க வேண்டும்’ - `மனு தர்ம’ நூல் விவகாரத்தில் திருமாவளவன் பதில்

பிறகு பா.ஜ.க-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பியதால், மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. காவல்துறையினர் அவர்களைக் கைதுசெய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 50-க்கும் மேற்பட்ட வி.சி.க-வினரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட வி.சி.க-வினர்
கைதுசெய்யப்பட்ட வி.சி.க-வினர்

இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்குள் மதுரை விரகனூர் ரிங் ரோட்டில் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் பா.ஜ.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காளையார்கோவிலிலுள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்துக்கு மரியாதை செய்வதற்குச் செல்ல அதிகாரிகளிடம் முறையான அனுமதி வாங்காமல் எல்.முருகனும் பா.ஜ.க-வினரும் வாகனங்களில் வந்ததால் காவல்துறையினர் அவர்களை அனுமதிக்க மறுத்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்

இதனால் ஆவேசமான பா.ஜ.க-வினர் முருகன் தலைமையில் காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு காவல்துறையினர் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மருது சகோதரர் நினைவிடம் செல்ல அனுமதியளித்து அனுப்பிவைத்தனர்.

`திருமாவளவன் மன்னிப்புக் கேட்கும்வரை விடப்போவதில்லை!’ - குஷ்பு
அடுத்த கட்டுரைக்கு