Election bannerElection banner
Published:Updated:

இந்தி, ஆங்கிலத்தில் வேட்பாளர் பட்டியல்! - குற்றச்சாட்டும் பா.ஜ.க-வின் மறுப்பும்

பா.ஜ.க
பா.ஜ.க

`கட்சியின் தேசியத் தலைமையிலிருந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்போது எப்போதுமே இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருப்பதுதான் வழக்கம். மற்ற மாநிலங்களின் வேட்பாளர் பட்டியலும் இவ்வாறுதான் வெளியிடப்பட்டுவருகிறது’ - வானதி

தமிழ்நாட்டில் பாரதி ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. டில்லியிலுள்ள இக்கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், வேட்பாளர்களின் பெயர், தொகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. எந்த ஓர் இடத்திலும் தமிழ் இல்லை. இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

வேட்பாளர் பட்டியல்
வேட்பாளர் பட்டியல்

பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரைச் சொன்னாலே, அது தமிழ்மொழியையும் தமிழர் பண்பாட்டையும் புறக்கணிக்கக்கூடிய கட்சி என்ற விமர்சனம் இங்கு நீண்டகாலமாகவே இருந்துவருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள இந்தக் கட்சியின் தலைவர்களோ, இந்தக் கருத்தை திட்டவட்டமாக மறுத்துவந்தார்கள். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழியையும், தமிழர்களின் பண்பாட்டு உணர்வையும் மிகவும் மதிக்கக்கூடியவர் என்றும், தங்களது கட்சியின் மற்ற தலைவர்களும்கூட, ஒருபோதும் தமிழை புறக்கணிக்க நினைத்ததில்லை என வாதிட்டு வந்தார்கள். இந்தநிலையில்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடவிருக்கும் 20 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை, டெல்லியிலுள்ள இக்கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டது. அதில் பா.ஜ.க தேசியப் பொதுச்செயலாளர் அருண் சிங் கையெழுத்திட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் மற்றும் தொகுதிகளின் விவரங்களை ஏன் இந்தியில் வெளியிட வேண்டும் எனப் பலரும் பெரும் கேள்வி எழுப்பிவருகிறார்கள். குறிப்பாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நீங்கள் போட்டியிடுவது தமிழ்நாட்டில்... வடமாநிலங்களில் அல்ல. தமிழர்கள்தான் வாக்கு செலுத்தப்போகிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் போட்டியிடப்போவதும் தமிழர்கள்தான். இவர்கள் தமிழில் பேசித்தானே வாக்கு கேட்கப் போகிறார்கள்... ஆனால் வேட்பாளர் பட்டியல் மட்டும் இந்தி மற்றும் ஆங்கிலத்திலா? ஒருவேளை, இவர்கள் தங்களது கட்சியின் தலைமைக்கு பயந்து இந்தி அல்லது ஆங்கிலத்தில் வாக்கு கேட்கப்போகிறார்களோ’’ என சமூக வலைதளங்களில் பலரும் பெரும் ஆதங்கத்தோடு நக்கலடித்துவருகிறார்கள்.

பெ.மணியரசன்
பெ.மணியரசன்

தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் இது குறித்து நம்மிடம் பேசியபோது, ``பா.ஜ.க. இப்படிச் செய்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைய வேண்டியதில்லை. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்தி மற்றும் சம்ஸ்கிருதம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற இருமொழிக் கொள்கைதான் அவர்களது குறிக்கோள். தமிழ்நாட்டில் இக்கட்சியின் இருமொழிக் கொள்கையை ஏற்றுகொண்டவர்கள்தான் இதில் இணைந்திருக்கிறார்களா எனச் சந்தேகமாக உள்ளது.

தமிழ்நாட்டு மக்களும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மையோடுதான் வேட்பாளர் பட்டியலை, இந்தியில் வெளியிட்டிருக்கிறது, பா.ஜ.க தலைமை. இந்தி புரியவில்லை எனச் சொல்பவர்களுக்காக, ஜனநாயகப் பிச்சையாக, ஆங்கிலத்திலும் விவரங்களை வெளியிட்டுள்ளார்கள். தமிழின் பெருமையையும் தொன்மையையும் பிரதமர் மோடி பேசுவது, அவரின் இதயத்திலிருந்து வரும் வார்த்தை அல்ல. தமிழர்களை அரவணைத்து, தமிழை காலி செய்யும் யுக்தியே. இதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு, நம்முடைய மொழி, இனம், ஜனநாயகத்தைப் பாதுகாக்கப் போராட வேண்டும்’’ என்றார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இது தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வானதி சீனிவாசனிடம் பேசியபோது ``பா.ஜ.க-வின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை. தமிழைப் புறக்கணிக்க வேண்டும் என்பது எங்கள் கட்சியின் நோக்கம் அல்ல. எங்கள் கட்சியின் தேசியத் தலைமையிலிருந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்போது எப்போதுமே இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருப்பதுதான் வழக்கம். மற்ற மாநிலங்களின் வேட்பாளர் பட்டியலும் இவ்வாறுதான் வெளியிடப்பட்டுவருகின்றன. பா.ஜ.க தேசியத் தலைமை அலுவலகத்திலிருந்து இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலை, உடனடியாக தமிழக பா.ஜ.க தலைமை தமிழில் வெளியிட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு