Published:Updated:

ஐந்து அவசியம் பி.ஜே.பி... பி.ஜே.பி அவசியம் அ.தி.மு.க..! #TwistyTale

Modi, Pannerselvam, Edappadai Palanisamy
Modi, Pannerselvam, Edappadai Palanisamy

ரஜினி பயத்தால் எங்களைக் கழற்றிவிடக்கூடாது என்று அ.தி.மு.க கருதுகிறது. அதை நாங்கள் பயன்படுத்திக்கொள்கிறோம்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு, கூட்டணிக் கட்சியான தங்களை அழைக்கவில்லை என பி.ஜே.பி கொதிப்பில் இருந்தது. கடந்த அக்.5-ம் தேதி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை பி.ஜே.பி தலைமை அலுவலகத்தில் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பிரசாரத்துக்கு வருமாறு அழைத்தார். அ.தி.மு.க-வின் திடீர் பல்டியின் பின்னணியில், அமைச்சர் வேலுமணியின் காய்நகர்த்தல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கூட்டணியிலிருந்து பி.ஜே.பி-யைக் கழற்றிவிட்டால், மற்ற கூட்டணிக் கட்சிகளும் அ.தி.மு.க கூடாரத்திலிருந்து கழன்று கொள்ளும் ஆபத்து இருக்கிறது.
அமைச்சர் வேலுமணி
அமைச்சர் வேலுமணி

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க சீனியர்கள், “2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பி.ஜே.பி, தே.மு.தி.க, பா.ம.க, த.மா.கா ஆகிய கட்சிகளை ரஜினியுடன் இணைத்துப் புதிய வியூகம் வகுக்க, தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் காய்நகர்த்தி வருகிறார். டெல்லியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து சில ஆலோசனைகளை அவர் வழங்கியிருந்தாலும், இன்னும் அ.தி.மு.க-வுடன் அவர் கைகோக்கவில்லை. ரஜினியின் அரசியல் வருகைக்காகப் பலரும் காத்திருப்பதுபோல, பிரசாந்த் கிஷோரும் காத்திருக்கிறார்.

பிரசாந்த் கிஷோரின் கூட்டணிக் கணக்கு குறித்து முதல்வருடன் சில மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, ‘கூட்டணியில் இருந்து பி.ஜே.பி-யைக் கழற்றிவிட்டால், மற்ற கூட்டணிக் கட்சிகளும் அ.தி.மு.க கூடாரத்திலிருந்து கழன்று கொள்ளும் ஆபத்து இருக்கிறது. பி.ஜே.பி-யால் நமக்குப் பெரிய வாக்குவங்கி உயர்வு ஏற்படாது என்றாலும், உள்ளாட்சித் தேர்தலிலும் அவர்களைத் தக்கவைத்துக்கொண்டால், மற்ற கட்சிகளும் நம்முடனேயே பயணிக்கும். குறிப்பாக, வடக்கு மாவட்டங்களில் பா.ம.க, தே.மு.தி.க-வின் வாக்குகள் நமக்கு மிக முக்கியம். டெல்டாவில் தினகரனை வீழ்த்துவதற்கு ஜி.கே.வாசன் அவசியம். இதனால், பி.ஜே.பி-யை உடன் வைத்துக்கொள்வது தான் புத்திசாலித்தனம்’ என்று அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

அதற்கு, ‘பி.ஜே.பி என்ன எதிர்பார்க்கிறது?’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்க, ‘அவர்கள் ஐந்து மாநகராட்சிகளை எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக, சென்னையை எதிர்பார்க்கிறார்கள். அவ்வளவு கொடுக்க முடியாது என்றாலும், ஒன்றாவது கொடுத்து நாம் தக்கவைத்துக்கொள்ளலாம். உள்ளாட்சித் தேர்தலில் நாம் 60 சதவிகித இடங்களைப் பிடித்துவிட்டால், தி.மு.க-வையும், ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரையும் நம்மால் சமாளிக்க முடியும்’ என்று வியூகத்தைக் கூறியுள்ளார்.

தென்சென்னைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன், சென்னை மேயர் பதவியைக் குறிவைத்திருக்கிறார். ஜெயக்குமாரை சமாதானப்படுத்திய அமைச்சர் வேலுமணி, அவரையும் உடன் அழைத்துக்கொண்டு அக்.4-ம் தேதி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை டெல்லியில் சந்தித்தார். அப்போது, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாநகராட்சிகளைக் கொடுத்தால், கூட்டணியில் தொடரலாம் என நேரடியாகவே பியூஷ் கோயல் தெரிவித்துவிட்டாராம்.

சென்னையில் பி.ஜே.பி போட்டியிடும்பட்சத்தில், தேசிய அளவில் கவனம் கிடைக்கும். தி.மு.க VS பி.ஜே.பி என்கிற தோற்றம் உண்டாகும். தோற்றாலும் இதன் மூலமாகக் கிடைக்கும் விளம்பரம், கட்சியைத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டுசெல்லும்.
பியூஷ் கோயலுடன், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் சந்திப்பு
பியூஷ் கோயலுடன், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் சந்திப்பு

‘சென்னையை மட்டும் கேட்காதீங்க, அது என் பையனுக்காக தேர்வு செஞ்சிருக்கோம்’ என ஜெயக்குமார் கூற, ‘எந்தெந்த மாநகராட்சிகள்ங்கறத பின்னாடி பேசிக்குவோம். பட், எண்ணிக்கையை குறைக்க முடியாது ’ என்று அமைச்சர்களை பியூஷ் வழியனுப்பியுள்ளார். பி.ஜே.பி.யின் இந்த நெருக்குதல், அ.தி.மு.க.விற்குள்ளும் பல விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது” என்றனர்.

தமிழகத்திலுள்ள மொத்த வாக்குவங்கியில், வெறும் 3.66 சதவிகிதம் மட்டுமே வைத்திருக்கும் பி.ஜே.பி, ஐந்து மாநகராட்சிகளை எதிர்பார்ப்பதில் என்ன ‘லாஜிக்’ இருக்கிறது? கேள்விகளுடன் பி.ஜே.பி-யின் மாநில நிர்வாகிகளிடம் பேசினோம்.

“கட்சியை வளர்ப்பதற்கு உள்ளாட்சித் தேர்தலை விட்டால் வேறு வழி இல்லை. அ.தி.மு.க கூட்டணியில் ஐந்து மாநகராட்சிகளில் போட்டியிடும் பட்சத்தில், இரண்டு மாநகராட்சிகளையாவது கைப்பற்ற முடியும். மாவட்டத்துக்கு பதினைந்து ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் வீதம் ஜெயித்தாலே, கட்சியை நிலைநிறுத்திவிடலாம்.

ப்ருத்வி
ப்ருத்வி

குறிப்பாக, சென்னையில் பி.ஜே.பி போட்டியிடும்பட்சத்தில், தேசிய அளவில் கவனம் கிடைக்கும். தி.மு.க VS பி.ஜே.பி என்கிற தோற்றம் உண்டாகும். தோற்றாலும், இதன் மூலமாகக் கிடைக்கும் விளம்பரம், கட்சியைத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டுசெல்லும்.

கனரக தொழில்துறை மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வாலின் உதவியாளர் ப்ருத்வி என்பவரைத்தான் சென்னை மேயர் தேர்தலுக்கு நிறுத்த டெல்லி மேலிடம் ஆலோசித்துவருகிறது. தி.மு.க-வின் உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயருக்கு நிற்கும் பட்சத்தில், அவரை எதிர்த்து அமித்ஷாவுக்கு நெருக்கமான ப்ருத்வி போட்டியிட்டால், கட்சியின் இமேஜ் உயரும் என மேலிடம் கருதுகிறது. இதற்கு அ.தி.மு.க-வின் தயவு அவசியம். ரஜினி பயத்தால், எங்களைக் கழற்றிவிடக்கூடாது என்று அ.தி.மு.க கருதுகிறது. அதை நாங்கள் பயன்படுத்திக்கொள்கிறோம்” என்றனர்.

நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் வர வாய்ப்பிருப்பதாகத் தமிழகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ள சூழலில், பி.ஜே.பி, அ.தி.மு.க-வின் இந்தக் கூட்டணிக் கணக்குகள் எந்த அளவுக்கு அவர்களுக்கு லாபம் அளிக்கப்போகின்றன என்பது போகப்போகத்தான் தெரியும்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு