Published:Updated:

`இது அ.தி.மு.க வரலாற்றில் அழிக்க முடியாத கறை!’ - சேலத்தில் திருமாவளவன் குற்றச்சாட்டு

``மதத்தின் பெயரில் பிளவுபடுத்துவதற்காகவே திட்டமிட்டு இந்தச் சட்டம் கட்டமைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது'' என்று சேலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசினார்.

திருமா
திருமா ( எம். விஜயகுமார் )

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ''மோடி அரசு நல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையிலேயே குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வந்திருக்கிறார்கள். இது ஏதோ இஸ்லாம் மதத்துக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் எதிரானதாகப் பார்க்க முடியாது. ஒட்டு மொத்த இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கே எதிரானது.

பேரணி
பேரணி

இந்திய அரசியலமைப்புச் சட்டம் சாதி, மதம், இனம் பாகுபாடு இன்றி நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. ஆனால், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அரசியல் அமைப்புச் சட்டத்தை சிதைக்கும் வகையில் செயல்படுகிறார்கள். மதத்தின் பெயரில் பிளவுபடுத்துவதற்காகவே திட்டமிட்டு இந்தச் சட்டம் கட்டமைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்கள் மதச்சார்பற்ற இந்திய தேசத்தை இந்து ராஸ்டிரமாகவும் இந்து நாடாகவும் உருவாக்கத் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ்ஸும் பி.ஜே.பி-யும் சேர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

இதை நாடு முழுவதும் அரசியல் கட்சியைத் தாண்டி ஜனநாயக சக்திகள் எதிர்த்து வருகிறார்கள். அதன் சான்றாக உச்ச நீதிமன்றத்தில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்தச் சட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவ வேண்டும்.

திருமாவளவன்
திருமாவளவன்
எம். விஜயகுமார்

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.கவின் அனைத்து திட்டங்களையும் ஆதரிக்கின்ற அ.தி.மு.க-வை மக்கள் தோற்கடிப்பார்கள். ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு பா.ஜ.க-வுக்கு நல்ல பாடம் புகட்டி இருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தி.மு.க தோழமைக் கட்சிகள் நடத்திய பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டார்கள். இப்பேரணி டெல்லியை அதிர வைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்து வாக்களித்த அ.தி.மு.க வரலாற்றில் அழிக்க முடியாத கறை படிந்துவிட்டது'' என்றார்.