Published:Updated:

பி.ஜே.பி-யின் ‘விருது’ தூண்டில்! - நழுவும் ரஜினி... கலக்கும் கமல்!

rajini, kamal
பிரீமியம் ஸ்டோரி
rajini, kamal

கமலின் திரையுலகப் பயணம் என்பது, ரஜினியின் பயணத்தைவிட முந்தையது.

பி.ஜே.பி-யின் ‘விருது’ தூண்டில்! - நழுவும் ரஜினி... கலக்கும் கமல்!

கமலின் திரையுலகப் பயணம் என்பது, ரஜினியின் பயணத்தைவிட முந்தையது.

Published:Updated:
rajini, kamal
பிரீமியம் ஸ்டோரி
rajini, kamal

“நீங்களும் ரஜினியும் தேசியம் குறித்த ஒரே மாதிரியான கருத்தையே வைத்திருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து பயணிப்பதில் என்ன சிரமம்?’’

“அதை நாங்கள் இருவரும் அல்லவா பேச வேண்டும். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதில் எங்கள் இருவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இருவரும் பேசி முடிவுசெய்ய வேண்டும்.”

ஆனந்த விகடன் பிரத்யேகமாக நடத்திவரும் ‘பிரஸ் மீட்டில்’ கேட்கப்பட்ட கேள்விக்கு, கமல் தந்த பதில் இது.

இதைத் தொடர்ந்து, ‘இனி ரஜினி, கமல் இருவரின் அரசியல் பயணம் இப்படித்தான்’ என்ற பேச்சுகள் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பாகியிருக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“என்னதான் விருதெல்லாம் கொடுத்து தூண்டில் போட்டாலும் பி.ஜே.பி-யிடம் சிக்க மாட்டார் ரஜினி. காரணம், பி.ஜே.பி-யின் பலம், பலவீனம் இரண்டையும் நன்றாகத் தெரிந்தவர் ரஜினி. அதேசமயம், தமிழகத்தின் தேவைக்காக கமலுடன் கைகோக்கவும் தயங்க மாட்டார். இதற்கு முன்னோட்டமாகத்தான் கமல்ஹாசனின் 60 ஆண்டுக்கால திரையுலகப் பயணத்தைக் கொண்டாடவிருக்கும் `கமல்-60’ நிகழ்வு இருக்கக்கூடும்” என்கிறார், கமல், ரஜினி இருவரிடமும் நெருங்கிப் பேசக்கூடிய புத்தம் புதிய தயாரிப்பாளர் ஒருவர்.

கமலுக்கு நெருக்கமான சிலரிடம் நாம் பேச்சுக் கொடுத்தபோது, இதைப் பற்றி விவரமாகவே பேசினார்கள். “ரஜினி, ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், `அரசியலுக்கு வரப்போகிறேன்’ என்று சொன்ன இரண்டாவது மாதத்திலேயே ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியையே தொடங்கிவிட்டவர் கமல். தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் இந்த இருவரையுமே அரசியல் களத்தில் ஓர் அணியாக இணைக்கும் முயற்சியில் சிலர் இறங்கியிருக்கிறார்கள் என்பது உண்மைதான்.

கமலின் திரையுலகப் பயணம் என்பது, ரஜினியின் பயணத்தைவிட முந்தையது. ஆனால், வாழ்நாள் சாதனையாளர் விருதை ரஜினிக்குக் கொடுத்ததைவைத்து சிலர் கமலிடம் வருத்தப்பட்டுள்ளனர். அதற்கு, ‘ரஜினிக்கு விருது கொடுப்பதன் காரணம் எனக்கும் தெரியும் ரஜினிக்கும் தெரியும்’ எனச் சிரித்துக்கொண்டே பதில் சொல்லிவிட்டார் கமல். தனக்கும் ரஜினிக்கும் இடையே எந்த மனக்கசப்பும் வந்துவிடக் கூடாது என்பதில் கமல் தெளிவாக இருக்கிறார். எல்லாம் எதிர்கால அரசியல் களத்தை மனதில்வைத்துதான்.

‘சிஸ்டம் சரியில்லை’ என்பதுதான் ரஜினியின் குற்றச்சாட்டு. ‘அரசியலில் மாற்றம் வேண்டும்’ என்பது கமலின் எதிர்பார்ப்பு. ஆக, இருவரின் அரசியல் அடிப்படையுமே ஒரே நோக்கத்தைக் கொண்டதாக இருக்கிறது. அரசியல் தலைமை மாறவேண்டும் என இருவருமே நினைக்கிறார்கள். அதனால், ‘நீங்கள் இருவரும் அரசியல்களத்தில் சேர்ந்து பயணித்தால் மட்டுமே ஆட்சி மாற்றம் சாத்தியம். இரண்டு திராவிடக் கட்சிகளையும் வீழ்த்தவேண்டுமென்றால், இருவரும் இணையவேண்டும்’ என்றும் சிலர் அவர்களிடம் அறிவுறுத்தியிருக்கின்றனர். சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும்போது யாருடன் கைகோப்பது என்ற குழப்பம் ரஜினியிடம் இருக்கிறது. பி.ஜே.பி-யுடன் சேர்ந்தால், சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஏற்பட்ட நிலை தனக்கும் வரலாம் என்பது அவருக்கு நன்றாகவே தெரிகிறது.

அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் முதல்வர் பதவியை ரஜினி எதிர்பார்க்க முடியாது. இத்தகைய சூழலில், ‘கமல்தான் உங்களுக்கு உகந்த சாய்ஸ்’ என்று ரஜினியிடம் சொல்லியிருக்கிறார்கள், இருவருக்கும் பொதுவான நண்பர்கள். கமலிடமும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.

ஆத்திகம், நாத்திகம் என கொள்கைரீதியாகவும் ரஜினி, கமல் இருவருக்கும் சரிப்பட்டுவராது என்பது போன்ற பொதுவான பேச்சு உலாவுகிறது. ஆனால், தன் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, நல்லாட்சி அமைய வேண்டும் என்றே கமல் நினைக்கிறார். அதைத்தான் ரஜினியும் வெளிப்படையாகவே சொல்கிறார். இந்த மையப்புள்ளிதான் மக்கள் நீதி மய்யம் கட்சி ரஜினியின் பக்கம் மையம்கொள்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது” என்றவர்கள், கடந்த அக்டோபர் 15-ம் தேதி ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சூசகமாக கமல் பேசிய ஒரு விஷயம் குறித்தும் சொன்னார்கள்.

“கமல்ஹாசன், ‘இந்த மேடை எதிர்காலத்தில் அரசியல் மாற்றத்துக்கான மேடையாக இருக்கும்’ என்று ‘பொடி’வைத்து அங்கே பேசினார். அதற்கு முன்பு பேசிய ஐசரி கணேஷ், ‘கமலின் திரையுலக 60 ஆண்டு விழாவில் ரஜினி பங்கேற்பார். அந்தப் பொறுப்பை நான் ஏற்கிறேன்’ என்றார். இதெல்லாம் எதிர்கால அரசியல் கூட்டணிக்கான கருவாகவே பார்க்கப்படுகிறது.

`கமல்-60’ நிகழ்வுக்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்தபோது, ‘உடனடியாக வருகிறேன்’ என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். 9-ம் தேதி, சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நிகழ்ச்சி நடைபெறுவதாக முதலில் முடிவுசெய்யப்பட்டது. ஆனால், அடிக்கடி மழைபெய்வதால் நேரு உள்விளையாட்டு அரங்குக்கு நிகழ்ச்சியை மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனால், 17-ம் தேதிக்கு நிகழ்ச்சியைத் தள்ளிவைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டு ரஜினியிடம் தெரிவிக்கப் பட்டது. ‘அதனால் என்ன... எங்கு நடந்தாலும் எப்போதும் நடந்தாலும் கட்டாயம் வருகிறேன்’ என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்லியிருக்கிறார் ரஜினி. இதையெல்லாம் பார்க்கும்போது, இருவரும் இணைந்து பயணிப்பதில் சிக்கல்கள் இருக்காது என்றே தோன்றுகிறது” என்று சொன்னார்கள்.

ரஜினி, கமல்
ரஜினி, கமல்

“கமல் கட்சிக்கு, நகரங்களில் இருக்குமளவுக்கு கிராமங்களில் வாக்குவங்கி இல்லை. அதனால், தனித்து களம் இறங்குவதைவிட ரஜினியுடன் கைகோத்து இறங்குவது புத்திசாலித்தனம் என முடிவுசெய்த பிறகே அரசியல் மாற்றத்துக்கான மேடையாக தனக்கான பாராட்டு விழா மேடையை கமல் மாற்ற முடிவுசெய்துள்ளார். முதல்வர் பதவியில்கூட இருவருக்குமிடையே முரண்பாடுகள் வராது. தேவைப்பட்டால், ரஜினியை முன்னிலைப்படுத்தி பின்னால் நிற்கக்கூட தயங்க மாட்டார் கமல்” என்றும் சொல்கிறார்கள் இருதரப்பு பற்றியும் நன்கு அறிந்துவைத்திருக்கும் அரசியல்வாதிகள் சிலர்.

ரஜினியும் கடந்த சில மாதங்களாகவே தனக்கு நெருக்கமானவர்களிடம் அரசியல் தொடர்பான தரவுகளைப் பெற்றுவருகிறார். சமீபத்தில் தன்னைச் சந்தித்த இரண்டு தொழிலதிபர்களிடம், “கமலுடன் சேர்ந்து அரசியல் செய்தால் எப்படி இருக்கும்?” என்று கேட்க, அவர்கள் ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள்.

இதைப் பற்றி ரஜினி மன்றப் பொறுப்பாளர்கள் சிலர் நம்மிடம், “எங்கள் தலைவர் கட்சி ஆரம்பித்தால் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைப்பார் என்ற கருத்து, தமிழகம் முழுவதும் பரவலாக இருக்கிறது. உண்மையில் பி.ஜே.பி மீது தலைவருக்கு அவ்வளவு அபிப்பிராயம் கிடையாது. கமல், திரையுலக நண்பர் என்பதைத் தாண்டி, தமிழகத்தில் அரசியல் மாற்றம் என்பதில் இருவரிடமுமே ஒருமித்த சிந்தனை உள்ளது. எனவே, தனித்து நின்று வாக்குகளைச் சிதறடிப்பதைவிட இணைந்து செயல்படுவது நல்லது என்பதுதான் தலைவரின் எண்ணம். கூடவே சில கட்சிகளையும் ஈர்த்து வலுவான கூட்டணியை அமைக்கும் திட்டமும் இருக்கிறது. கமல், ரஜினி இருவரின் நோக்கம், அ.தி.மு.க - தி.மு.க இல்லாத அரசு அமையவேண்டும்... அது, ஊழலற்ற அரசாக இருக்க வேண்டும் என்பதே.

2014-ம் ஆண்டில் இந்திய சினிமா நூற்றாண்டு விருது, 2016-ம் ஆண்டில் பத்ம விபூஷண் விருது, தற்போது வாழ்நாள் சாதனையாளர் விருது என மூன்று விருதுகளுமே பி.ஜே.பி ஆட்சியில்தான் தரப்பட்டுள்ளன. வீடு தேடி வந்து தலைவரைப் பார்த்தார் மோடி. ஆனால், தமிழகத்துக்கு பி.ஜே.பி தேவையா என்ற கேள்வி, இன்னமும் தலைவரிடம் இருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தில் வாக்குவங்கி 2 சதவிகிதத்தைக்கூட தாண்ட முடியாமல் இருப்பதை அவர் கவனிக்காமல் இல்லை. தேவைப்பட்டால், தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சியை உடைத்து வெளியே கொண்டுவரும் பிளான்கூட இருக்கிறது. எனவே, விருதுகளெல்லாம் அவருக்கு தூசு” என்று சொல்லி அசரவைத்தார்கள்.

ரஜினி, கமல் இருவரும் இணைந்து கூட்டணி அமைப்பார்கள் என்பது உறுதியாகாத சூழலில், இருவரையும் இணைக்கும் முயற்சியில் சுறுசுறுப்பாக இருக்கும் சில புள்ளிகளுக்கு வெளியிலிருந்து மறைமுகமாக அழுத்தங்கள் கொடுக்கவும் சிலர் ஆரம்பித்திருக்கின்றனர். “இதுவே எங்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி” என்று பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறாராம் அந்தப் புதுத் தயாரிப்பாளர்.

ரஜினியும் கமலும் திரையில் கடைசியாக இணைந்து மிரட்டிய படம் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’. அதேபோன்று நிஜத்திலும் இணைந்து அரசியல் அற்புத விளக்கைத் தேய்ப்பார்களா?

காத்திருப்போம், தேர்தல் தேதி நெருங்கும் வரை!

“ஆத்திரத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றனர்!” - தகிக்கும்

அப்பாவு

ராதாபுரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு. இவரின் மகன் திருமண வரவேற்பு, 3-ம் தேதி பணகுடியில் நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, அங்கு வந்த போலீஸாரும் வருவாய்த் துறையினரும் மண்டபத்தின் முன்பாக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனரை அதிரடியாக அகற்றியதுடன், அப்பாவுமீது வழக்கும் பதிவுசெய்தனர். இந்தச் சம்பவம் திருநெல்வேலி தி.மு.க-வில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பி.ஜே.பி-யின் ‘விருது’ தூண்டில்! - நழுவும் ரஜினி... கலக்கும் கமல்!

இதுகுறித்துப் பேசிய அப்பாவு, “என் மகனுடைய வரவேற்பு நிகழ்ச்சிக்கு இரு தினங்களுக்கு முன்பு பணகுடியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். அப்போதும் ஃபிளெக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர். அதைக் கண்டுகொள்ளாத போலீஸார் என்மீது வழக்கு பதிவுசெய்திருப்பது பழிவாங்கும் செயல். இத்தனைக்கும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய உதவுமாறு காவல்துறை அதிகாரிகளிடம் முன்பே நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். அப்போதெல்லாம் ஃபிளெக்ஸ் பேனரை அகற்றச் சொல்லவில்லை. நிகழ்ச்சியில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே கடைசி நேரத்தில் வந்து பேனரை அகற்றியதுடன் வழக்கும் பதிந்திருக்கின்றனர்.

நான் அ.தி.மு.க அரசின் ஊழல்களை அம்பலப்படுத்திவருவதாலும், ராதாபுரம் தொகுதியில் வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த சட்டப் போராட்டம் நடத்தி வென்றதாலும் ஆளுங்கட்சியினர் ஆத்திரத்தில் இருக்கின்றனர். எம்.எல்.ஏ இன்பதுரையின் தூண்டுதலில் என்மீது வழக்கு தொடர்ந்திருக்கலாம். அதை, சட்டப்படி சந்திப்பேன்” என்றார்.