Published:Updated:

கோவை விவகாரம்: ``பாஜக மலிவான அரசியல் செய்கிறது!" - சொல்கிறார் துரை வைகோ

துரை வைகோ

``இந்தியை வளர்ப்பது என்பது 70 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இதை நாங்கள் அப்போதும் எதிர்த்தோம். இப்போதும் எதிர்க்கிறோம். எப்போதும் எதிர்ப்போம்.” - துரை வைகோ

கோவை விவகாரம்: ``பாஜக மலிவான அரசியல் செய்கிறது!" - சொல்கிறார் துரை வைகோ

``இந்தியை வளர்ப்பது என்பது 70 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இதை நாங்கள் அப்போதும் எதிர்த்தோம். இப்போதும் எதிர்க்கிறோம். எப்போதும் எதிர்ப்போம்.” - துரை வைகோ

Published:Updated:
துரை வைகோ

புதுக்கோட்டையில் கட்சியினர் இல்லத் திருமணவிழாவில் கலந்துகொண்ட பின்பு, மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.  "தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துவந்தாலும், குற்றம் நடைபெற்ற 48 மணி நேரத்துக்குள் குற்றவாளிகள், இந்த ஆட்சியில் கைதுசெய்யப்பட்டுவருகின்றனர். 

கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் உட்பட பல்வேறு சம்பவங்களில், அழுத்தங்கள் காரணமாகத்தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. இந்த ஆட்சியிலும் பிரச்னைகள் நடந்துவருகின்றன. ஆனால், நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

கோவைச் சம்பவத்தில், சம்பவம் நடைபெற்று 12 மணி நேரத்துக்குள்ளேயே ஐந்து நபர்கள் கைதுசெய்யப்படுகின்றனர். நேற்றும் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். காவல்துறை துரித நடவடிக்கைகளை எடுத்துவருகிறது

துரை வைகோ
துரை வைகோ

காவல்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக சொல்லும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சம்பவம் தொடர்பாக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில்கூட தொடர்பு இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையிலேயேதான் தமிழக முதல்வர் விசாரணையை என்.ஐ.ஏ-வுக்கு மாற்றியிருக்கிறார்.

இது தொடர்பாக, தமிழக அரசு, முதல்வர் சரியான நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் பா.ஜ.க சார்பில் வரும் 31-ம் தேதி பந்த் நடைபெறுவதாக அறிவித்திருப்பது தேவையற்றது. இதைவைத்து பா.ஜ.க மலிவான அரசியலைச் செய்துவருகிறது.

இந்தியை இரண்டாவது மொழியாக ஆக்கிவிட்டு, ஆங்கிலத்தை பின்னடைவு செய்ய வேண்டும் என்று நினைத்துத்தான், அமித் ஷா ஒருசில நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். 

உலகம் முழுவதும், ஆங்கிலம் என்பது பொதுமொழியாக இருக்கிற சூழலில் ஆங்கிலத்தைப் பின்னுக்குத் தள்ளி இந்தியை வளர்ப்பது என்பது கண்டிக்கத்தக்கது.

இந்தியை வளர்ப்பது என்பது  70 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இதை நாங்கள் அப்போதும் எதிர்த்தோம். இப்போதும் எதிர்க்கிறோம். எப்போதும் எதிர்ப்போம். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியாவில் பேசப்படும் 22 மொழிகளும் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தி தெரியாது என்று கூறிய மீனவர்கள், இந்திய கடற்படையால் சித்திரவதை செய்யப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன.

இந்தி படிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தி படித்தால்தான் அரசு வேலை கிடைக்கும் என்று இந்தியைத் திணிப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். 

கோவை விவகாரம்: ``பாஜக மலிவான அரசியல் செய்கிறது!" - சொல்கிறார் துரை வைகோ

ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு கொள்கை, கோட்பாடுகள் இருக்கும். மதம், மொழியை வைத்து அரசியல் செய்யும் பாஜக-வை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தற்போது தேர்தல் கூட்டணி அமைத்திருக்கின்றன. தேர்தல் அரசியல் என்பதைவிட தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் பாஜக-வை எதிர்த்து தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையைப் பொறுத்தவரை ஆணையம் நான்கு நபர்களைச் சுட்டிக்காட்டி அவர்களை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. அந்த விசாரணை முடிவடைந்து ஆணையம் கூறியிருக்கும் நான்கு பேரையும் குற்றவாளிகள் என்று முடிவு செய்தால் மட்டுமே இது குறித்து கருத்து கூற முடியும்" என்றார்.