Published:Updated:

எல்.முருகனுக்கு தனி அறை என்பதெல்லாம் பில்டப்! - கரு.நாகராஜன் பளிச்

கரு.நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
கரு.நாகராஜன்

முருகன் ஜி எப்போது சென்னைக்கு வந்தாலும் கமலாலயத்துக்கு வராமல் போக மாட்டார். தேர்தல் நெருங்க நெருங்கக் கட்சி வளர்ச்சிக்கான பணிகள் அதிகம் இருக்கின்றன

எல்.முருகனுக்கு தனி அறை என்பதெல்லாம் பில்டப்! - கரு.நாகராஜன் பளிச்

முருகன் ஜி எப்போது சென்னைக்கு வந்தாலும் கமலாலயத்துக்கு வராமல் போக மாட்டார். தேர்தல் நெருங்க நெருங்கக் கட்சி வளர்ச்சிக்கான பணிகள் அதிகம் இருக்கின்றன

Published:Updated:
கரு.நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
கரு.நாகராஜன்

இந்து மதம் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தி.மு.க துணைச் செயலாளர் ஆ.ராசா எம்.பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அளவில் கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன். அது குறித்தும், ‘எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதில் சாதனை படைக்கிறது... பாலியல் புகாரில் புதிய உச்சம் தொட்டிருக்கிறது... அண்ணாமலையின் அதிகாரம் குறைக்கப்பட்டிருக்கிறது...’ என்று பா.ஜ.க பற்றி வருகிற செய்திகள் குறித்தும் கரு.நாகராஜனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ஆ.ராசா மட்டுமின்றி திருமாவளவன் போன்றோர் இந்தக் கருத்தை இதற்கு முன்பு பல மேடைகளில் பேசியிருக்கிறார்கள். ஆனால், இப்போது மட்டும் ஏன் வலுவான எதிர்ப்பு?”

“அந்தந்த நேரங்களில் கண்டனம் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். பெரும்பான்மை மக்களை, அவர்கள் தொடர்ந்து தலைகுனிவுக்கு ஆளாக்கிவருவதால் எங்கள் குரலும் இப்போது உரக்கத் தொடங்கியிருக்கிறது. இதை கி.வீரமணியோ, அவரின் தொண்டர்களோ பேசியிருந்தால் மக்களும், ‘அவர்கள் அப்படித்தான்’ என்று விட்டிருப்பார்கள். ஆனால், ‘90% இந்துக்கள் உள்ள கட்சி எங்களுடையது’ என்று மார்தட்டிக்கொள்ளும் தி.மு.க-வின் முக்கியத் தலைவர் பேசும்போது, அதை அம்பலப்படுத்தவேண்டியிருக்கிறது.”

“இந்துக்களின் புனிதநூலாகக் கருதப்படும் மனுஸ்மிருதியில் இருப்பதைத்தானே ஆ.ராசா குறிப்பிட்டிருக்கிறார்?”

“நாம் இப்போது மனுஸ்மிருதிப்படியா வாழ்ந்துகொண்டிருக்கிறோம்... இந்திய அரசியலமைப்புச் சட்டப்படிதானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... அல்லது அந்த நூல் பாடத்திட்டங்களில் ஏதும் இருக்கிறதா... அன்று இருந்த சூழலுக்கு ஏற்ப பல திட்டங்களை வகுத்து, பெரியவர்கள் ஏதாவது சொல்லி இருந்திருப்பார்கள். அன்றைக்கு அது பொருந்தக்கூடியதாக இருந்திருக்கும். அதையே இன்றைக்கு வரைக்கும் சொல்லி ஏன் மக்கள் உணர்ச்சியையும், இந்துக்களிடையே பிரிவினையையும் தூண்ட வேண்டும்?”

“ஆனால், ‘மதத்தைச் சொல்லி மக்களிடையே பிரிவினைவாதத்தைத் தூண்டுவது பா.ஜ.க-தான்’ என்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டுவருகிறதே?”

“இந்து மதத்தை, இந்து மக்களை, இந்து சமூகத்தை பற்றி பா.ஜ.க-வும் பேசும், மற்றவர்களும் பேசலாம். அது தவறு கிடையாது. ஆனால், சிறுபான்மையினரைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி இந்து மதத்துக்கு எதிராக, அர்த்தமற்ற இழிவான வாதங்களை முன்வைப்பதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.”

“பா.ஜ.க நிர்வாகிகள்மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் வருகின்றன. சமீபத்தில்கூட பா.ஜ.க பெண் நிர்வாகியிடம், மாநில நிர்வாகியே அத்துமீறும் வீடியோ வைரலாகிவருகிறதே?”

“இதெல்லாம் ‘செட்டப் வீடியோ’ என்பது உலகத்துக்கே தெரியும். வேண்டுமென்றே இருவர் மீதும் களங்கத்தை ஏற்படுத்துவதற்காக ‘ஜிம்மிக்ஸ்’ செய்து போட்டிருக்கிறார்கள். எங்கள் கட்சியைச் சேர்ந்த சகோதரி இதுவரை புகார் சொல்லவில்லை. ஒருவேளை எங்காவது தவறு நடந்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. அப்படி நடக்கக் கூடாது என்று விரும்புபவன் நான்.”

எல்.முருகனுக்கு தனி அறை என்பதெல்லாம் பில்டப்! - கரு.நாகராஜன் பளிச்

“கமலாலயத்தில் எல்.முருகனுக்குத் தனி அறை ஒதுக்கியது, அண்ணாமலையின் அதிகாரத்தைப் பறிப்பதற்காகவே என்கிறார்களே?”

“தனி அறை... பிரத்யேகமான அறை என்பதெல்லாம் பில்டப். அப்படியெல்லாம் ஏதுமில்லை. முருகன் ஜி எப்போது சென்னைக்கு வந்தாலும் கமலாலயத்துக்கு வராமல் போக மாட்டார். தேர்தல் நெருங்க நெருங்கக் கட்சி வளர்ச்சிக்கான பணிகள் அதிகம் இருக்கின்றன. அவரும் கூடுதல் கவனம் எடுத்துச் செய்வதற்காக சிறப்பு அறை ஏற்பாடு செய்தார்கள். பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருக்கும்போது அவருக்கும் ஓர் அறை இருந்தது. அதுதான் இப்போதும் தொடர்கிறது.”

“பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் பெயர்களே தெரியவில்லை. ஆனால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மட்டும் அடிக்கடி அவர்கள் பேசுபொருளாகிறார்களே?”

“தெலங்கானா முதல்வருக்கு மத்திய அரசைப் பிடிக்காது. தமிழ்நாட்டு முதல்வருக்கு ‘மத்திய அரசு’ என்று சொல்லவே பிடிக்காது. பிடிக்காத தன்மையோடு ஆளுநர்களைப் பார்க்கும்போது அப்படித்தான் இருக்கும்.”

“ராகுல் காந்தியின் நடைப்பயணத்தைப் பார்த்து அஞ்சித்தான் பா.ஜ.க சில விமர்சனங்களை முன்வைக்கிறது என்கிறார்களே?”

“அவருடன் நடந்தவர்கள் மொத்தமே 500 பேர்தான் இருப்பார்கள். அவர்களைப் பார்த்து எங்களுக்கு என்ன பயம்... அவர் நடக்கத் தொடங்கியவுடனே, கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் வந்து இணைந்திருக்கிறார்கள். கட்சியையே ஒன்றுபடுத்த முடியாத ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்துகிறார்!”

“அந்த எம்.எல்.ஏ-க்கள் அவர்களாகவே இணைந்தார்களா அல்லது ‘மாற்றுக் கட்சியினரை ஹைஜாக் செய்யும் பா.ஜ.க’-வின் வழக்கமான ஆபரேஷனால் இணைந்தார்களா?”

“செந்தில் பாலாஜி, முத்துசாமி, ரகுபதியெல்லாம் இப்போது தி.மு.க அமைச்சர்கள். இவர்களெல்லாம் எந்தக் கட்சியில் இருந்தவர்கள்... செந்தில் பாலாஜியை எவ்வளவு குற்றம்சாட்டிப் பேச முடியுமோ அவ்வளவு பேசிய ஸ்டாலின், இன்று அவரை மேடையில் உட்காரவைத்துப் பாராட்டிக்கொண்டிருக்கிறார். எனவே, இதெல்லாம் அரசியலில் இருக்கும் யதார்த்தம்.”

“அ.தி.மு.க பிரச்னையில், நீங்கள் இ.பி.ஸ் பக்கமா, ஓ.பி.எஸ் பக்கமா?”

“ ‘உட்கட்சி விவகாரங்களில் தலையிடுவதில்லை’ என்று எங்கள் தலைவர் ஏற்கெனவே பலமுறை சொல்லியிருக்கிறார். நாங்கள் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். அடுத்த கட்சி விஷயத்தில் தலையிட எங்களுக்கு நேரமில்லை.”