அலசல்
சமூகம்
Published:Updated:

‘நீ செஞ்சா தப்பு... நான் சொன்னா ரைட்டு...’

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்; உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி.

இலவசத் திட்டம்... இரட்டை வேடம் போடுகிறதா பா.ஜ.க?

`தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் இலவசத் திட்டங்களால்தான் நாடு சீரழிகிறது எனப் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் நரம்பு புடைக்கப் பேசுகிறார்கள். அதே பா.ஜ.க, தேர்தல்களையொட்டி பல்வேறு இலவசத் திட்டங்களை அள்ளி வீசிவருகிறது. அந்த அறிவிப்புகளும், இந்த விவகாரத்தில் பா.ஜ.க தலைவர்கள் அடித்த ஸ்டன்ட்டுகளும் இங்கே...

பா.ஜ.க அறிவித்த இலவசத் திட்டங்கள்...

குஜராத், இமாச்சலப் பிரதேசம் தேர்தலையொட்டி (2022) வெளியிட்ட இலவச அறிவிப்புகள்...

குஜராத்:

4,000 கிராமங்களுக்கு இலவச வைஃபை (Wi-Fi).

கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு மாதம்தோறும் ஒரு கிலோ பருப்பு, 2 லிட்டர் சமையல் எண்ணெய் இலவசம்.

பல்நோக்குப் பயன்பாட்டுக்காக விவசாயிகளுக்கு ஒரு டிரம், இரண்டு பிளாஸ்டிக் பக்கெட்டுகள் இலவசம்.

குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள்.

இமாச்சலப் பிரதேசம்:

125 யூனிட் வரை இலவச மின்சாரம்.

இல்லத்தரசிகளுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள்.

6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்; உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி.

பெண்களுக்கான பேருந்துக் கட்டணத்தில் 50% சலுகை.

கிராமங்களில் தண்ணீர் வரி ரத்து.

பெண்களின் திருமண நிதி உதவி ரூ.31,000-லிருந்து ரூ.51,000-ஆக உயர்வு.

 ‘நீ செஞ்சா தப்பு... நான் சொன்னா ரைட்டு...’

ஹரியானாவில் ஆளும் பா.ஜ.க அரசு ஜூன் 2022-ல் வெளியிட்ட மானிய அறிவிப்பு:

ஐந்து ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளுக்கு நாட்டு மாடுகள் வாங்க ரூபாய் 25,000 மானியம்.

உ.பி., பஞ்சாப், கோவா சட்டமன்றத் தேர்தலையொட்டி பிப்ரவரி, 2022-ல் பா.ஜ.க அரசு வெளியிட்ட இலவச வாக்குறுதிகள்...

உத்தரப்பிரதேசம்:

பாசனத்துக்கு இலவச மின்சாரம்.

கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி.

2 கோடி மாணவர்களுக்கு இலவச டேப்லெட்டுகள் & ஸ்மார்ட்போன்கள்.

ஹோலி மற்றும் தீபாவளிப் பண்டிகையின்போது இலவசமாக 2 எரிவாயு சிலிண்டர்கள்.

60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பொதுப் போக்குவரத்து பயணம்.

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி.

பஞ்சாப்:

300 யூனிட் இலவச மின்சாரம்.

ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலமுள்ள விவசாயிகளின் விவசாயக் கடன்கள் தள்ளுபடி.

கோவா:

குடும்பங்களுக்கு ஆண்டுக்கு

3 இலவச எரிவாயு சிலிண்டர்கள்.

முதியோருக்கு பென்ஷன் தொகை மாதம் 3,000 ரூபாயாக உயர்வு.

2021-ல் நடந்த புதுச்சேரி, மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல்களுக்காக பா.ஜ.க அரசு வெளியிட்ட இலவச வாக்குறுதிகள்...

புதுச்சேரி:

வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 1,000 உதவித்தொகை, உயர்கல்வி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி, அனைத்துப் பெண்களுக்கும் இலவச பொதுப் போக்குவரத்துப் பயணம்.

மணிப்பூர்:

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப், கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட & பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்களுக்கு ரூபாய் 25,000 கல்வி ஊக்கத்தொகை, உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு 2 இலவச எரிவாயு சிலிண்டர்கள்.

இதேபோல மேற்கு வங்கத் தேர்தலையொட்டி இலவச கொரோனா தடுப்பூசி, உத்தரகாண்ட் தேர்தலையொட்டி பள்ளி மாணவிகளுக்கு இலவசப் பேருந்துப் பயணம், அஸ்ஸாம் பட்ஜெட்டில் மாணவிகளுக்கு, பெண்களுக்கு இலவச எலெக்ட்ரிக் பைக், பெண்கள் திருமணத்துக்கு 10 கிராம் இலவசத் தங்கம், கர்நாடகாவில் தாலிக்குத் தங்கம், இலவச ஸ்மார்ட்போன் எனப் பல திட்டங்களை அறிவித்திருக்கிறது பாஜக.

இலவசங்களுக்கு எதிரான பா.ஜ.க தலைவர்களின் முழக்கம்!

``நமது நாட்டில், தேர்தல் நேரத்தில் இலவச அறிவிப்புகளை அள்ளி வீசும் ஒரு புதிய கலாசாரம் உருவாகியிருக்கிறது. இந்த இலவசத் திட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானவை.

இலவசத் திட்டங்களை அறிவித்து, மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் என்று சிலர் கருதுகின்றனர். இந்தக் குறுக்குவழியை பா.ஜக பின்பற்றவில்லை.’’ - பிரதமர் மோடி (ஜூலை 16, 2022)

``சுயநலம்கொண்ட இலவச அறிவிப்புகள், நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழிக்கும். நேர்மையாக வரி செலுத்துவோருக்கு சுமையை அதிகரிக்கும்!” - பிரதமர் மோடி (ஆகஸ்ட் 10, 2022)

``இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளித்து மக்கள் வரிப்பணத்தை முறையற்ற வகையில் செலவழிக்கிறார்கள். தேர்தலின்போது இலவசங்களை அறிவிக்க கட்சிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும். அந்தக் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும்!” - பா.ஜ.க-வின் அஸ்வினி உபாத்யாயா இலவசங்களுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு

``தேர்தலின்போது வெளியிடும் இலவச வாக்குறுதிக்கான நிதி ஆதாரம் குறித்த விவரங்களைக் கட்சிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற முன்மொழிவை வரவேற்கிறோம். இலவசத் திட்டங்கள் ஓர் ஏமாற்று வேலை. தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் தேவையற்றவை. வளர்ச்சித் திட்டங்களே அவசியமானவை என்பதே பா.ஜ.க-வின் நிலைப்பாடு.” - தேர்தல் ஆணையத்துக்கு பா.ஜ.க கடிதம்