Published:Updated:

``இந்தி தெரியாதுன்னு தெரிஞ்சும்தான தேசிய தலைவராக்கியிருக்காங்க?" - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

பி.ஜே.பி தேசிய மகளிரணி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் வானதி சீனிவாசன் நேர்காணல்

தமிழகத்தில் தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்களை மட்டுமே சந்தித்து வரும் பி.ஜே.பி, கடந்த சில மாதங்களாகக் கவனம் ஈர்க்கும் வகையில் சில விஷயங்களைச் செய்து வருகிறது. அப்படித்தான், தமிழக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசனை, தேசிய மகளிரணி தலைவராக்கி டெல்லிக்கு அழைத்துள்ளது பி.ஜே.பி தலைமை. சில கேள்விகளுடன் வானதி சீனிவாசனை தொடர்பு கொண்டோம்.

``இந்த அறிவிப்பு வந்த அந்தத் தருணம் எப்படி இருந்தது?''

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

``இது எதிர்பார்க்காத அறிவிப்பு. சர்வதேச அளவில் ஒரு பெரிய கட்சி. அரசியல் ரீதியாகத் தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை. அப்படி இருக்கும்போது, இங்கு பணியாற்றிக்கொண்டிருந்த என்னை, தேசிய அரசியலுக்குக் கொண்டு வர வேண்டும் என நினைப்பது வேறு கட்சிகளில் நடக்குமா எனத் தெரியவில்லை. என்னுடைய கவனம் எல்லாம், தமிழகத்தில் பி.ஜே.பி-யை வளர்ப்பதில்தான் இருந்தது. பெண்களுக்கு அரசியல் குறித்து பயத்துடன் ஒரு கனவு இருக்கும். அந்தக் கனவுகளை அடையும் வாய்ப்பை, எல்லா கட்சிகளும் வழங்காது. ஆனால், பெண்களுக்கு எல்லா விதத்திலும் அங்கீகாரம் கொடுக்கும் கட்சியாக பி.ஜே.பி இருக்கிறது. ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து, நடுத்தர குடும்பத்தில் மனைவியாக, அம்மாவாக, அக்காவாக, வழக்கறிஞர் பணி செய்து கொண்டே அரசியலிலும் முன்னேற முடியும் என்பதை உணர்கிறேன்."

``ஏ.பி.வி.பி-யிலிருந்து மகளிரணி தேசிய தலைவர் பதவி... பயணம் எப்படி இருக்கிறது?"

``1987-ம் ஆண்டு ஏ.பி.வி.பி-ல் இணைந்தேன். மாநகர செயலாளரானேன். 1990-ம் ஆண்டு, முதல் அரசியல் கொலையைப் பார்த்தேன். சமீபத்தில் இந்து முன்னணி சசிகுமார் கொலை நடந்துள்ளது. தமிழகம் பிரிவினைவாதிகளின் மையமாக மாறி வருகிறது என்று நீண்ட நாள்களாகச் சொல்லி வருகிறோம். காரணம், எங்களுடைய நூற்றுக்கணக்கான சகோதரர்களை இழந்திருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பின்போது, என் கணவர் அங்குதான் தங்கியிருந்தார். மயிரிழையில் அவர் உயிர் தப்பினார். இதனுடைய ஆபத்தை தமிழக அரசு உணரவில்லை. என்.ஐ.ஏ நடவடிக்கை எடுக்கத் தொடங்கிய பிறகுதான் அது சற்று மாறியிருக்கிறது. இயக்கங்கள் எதுவாக இருந்தாலும், நம்முடைய லட்சியம் மக்கள் பணியாகத்தான் இருக்க வேண்டுமென ஆர்.எஸ்.எஸ் கற்றுக் கொடுத்திருக்கிறது."

``மாநிலத் தலைவர் பதவிக்கு உங்கள் பெயர் அடிபட்டது. ஆனால், 10 துணைத் தலைவர்களில் ஒருவராகத்தான் நீங்கள் இருந்தீர்கள். குஷ்பு போன்ற சினிமா பிரபலங்களின் வருகையால் உங்களது வளர்ச்சி அவ்வளவுதான் என்றெல்லாம் பேசினார்கள். அப்போது என்ன நினைத்தீர்கள்?"

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

``கடந்த 15 ஆண்டுகளாகவே அரசியலில் ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு டீம் இருக்கிது. நான் வழக்கறிஞராகத் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, முழுநேர அரசியலுக்கு வருவது குறித்து யோசித்தேன். பொன்.ராதாகிருஷ்ணன் என்மேல் நம்பிக்கை வைத்து நிறைய வாய்ப்புகள் கொடுத்தார். பத்தோடு பதினொன்றாகத்தான் துணைத் தலைவராக இருந்தேன். ஆனால், இந்தக் கட்சியில் இன்னும் 100 பேருக்கு வாய்ப்பு இருக்கிறது. எல்லோருக்கும் ஒரு ரோல் இருக்கிறது. புதிய டீம் வர வேண்டும். அவர்களுக்கு நான் துணையாக இருக்க வேண்டும் என நினைத்தேன். நான் மட்டுமே பொறுப்பில் இருக்க வேண்டும் என எப்போதும் நினைக்க மாட்டேன். என்னை பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்த எடுத்த பிறகு, `அக்காகூட இருந்தால் நமக்கு அரசியல் எதிர்காலம் இருக்குமா?' என்று என்னுடன் இருந்தவர்கள் யோசித்தார்கள். அரசியலில் இது எல்லாமே இயல்புதான். எந்தச் சூழ்நிலையிலும் மக்கள் பணிகளை நான் விடவில்லை."

``பி.ஜே.பி-க்கு இப்போதும் நெகட்டிவ் விமர்சனங்கள்தானே வருகின்றன?"

``தமிழகத்தில் மாற்றம் தேவை என்று எப்போதும் 15 சதவிகிதம் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. தேர்தலில் முதல்கட்ட பிரசாரத்தின்போது, `உங்களை மாதிரி படித்தவர்கள் வர வேண்டும்' என்கிறார்கள். அதன் பிறகு , `உங்களுக்கு வாக்களித்தால், எங்களுடைய வாக்கு வீணாகிவிடுமா?' என்று கேட்கிறார்கள். மூன்றாவது கட்டமாக, யார் வரக்கூடாது என்ற மனநிலைக்கு வந்து, அதை நோக்கிச் சென்றுவிடுகின்றனர். இதுதான் தமிழக அரசியல் களத்தின் நிலை. இப்போது, இரு தலைவர்களின் மறைவு, இரு திராவிட கட்சிகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு காலத்தில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு நிகழ்வுக்கு 15 பேரை அழைக்க நாங்கள் கஷ்டப்பட்டோம். இன்று கமலாலயத்தில் தினமும் 1,000 பேர் இணைகிறார்கள். ஒரு தொகுதிக்குள்ளேயே நூற்றுக்கணக்கான பெண்கள் வருகின்றனர். கிராமப்புறங்களில் இருந்து நிறைய பெண்கள் வருகிறார்கள்."

``பெண்களுக்காக என்ன விஷயங்களைச் செய்யப் போகிறீர்கள்?"

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

``மத்திய அரசாங்கமே பெண்களை மையப்படுத்திதான் இருக்கிறது. பெண்களிடம் அதைக் கொண்டு சென்று, நாடு முழுவதும் உள்ள பெண்களை பி.ஜே.பி-க்கு அழைத்து வர முயற்சி செய்வேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு குணம், சவால் இருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பணியாற்றுவேன்."

``குடும்பத்தில் என்ன சொன்னார்கள்?"

``என் கணவர் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறார். இருவரும் இயக்கத்துடனேயே இணைந்து வாழ்ந்து வருகிறோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு சீட் கிடைக்கவில்லை என்பதால் என்னுடைய ஆதரவாளர்கள் வருத்தத்தில் இருந்தனர். `பவருக்காகவும் பணத்துக்காகவும் அரசியலில் இருந்தால் நீங்கள் அப்செட் ஆகலாம். மக்களுக்குச் சேவை செய்தால் அப்செட் ஆகமாட்டீர்கள்' என என் மகன் சொன்னான். அது என்னை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தது. என் பெற்றோர் பல்வேறு கடினமான சூழ்நிலைக்கு மத்தியில் என்னைப் படிக்க வைத்தனர். கொரோனாவில் இருந்து மீண்டு ஓய்வில் இருந்தபோதுதான் அந்த அறிவிப்பு வந்தது. இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரத்தைக் கண்டு என் பெற்றோர் பூரித்துப் போயிருக்கிறார்கள்."

``மனுதர்ம கருத்துகளுக்கும் பி.ஜே.பி-க்கும் என்ன சம்பந்தம்?" - வானதி சீனிவாசன்

``மறக்க முடியாத வாழ்த்து?"

``இந்த அறிவிப்பு வந்தவுடன் பி.ஜே.பி மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் இந்தியில் வாழ்த்து தெரித்தனர். என் மகன், `அம்மா உங்களுக்கு இந்தி தெரியாதுனு உங்கக் கட்சிக்கு தெரியுமா?' எனக் கேட்டான். ஆம், எனக்கு இந்தி தெரியாது. பி.ஜே.பி இந்தியைத் திணிக்கிறது என்று தானே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தி தெரியாத ஒரு பெண்ணை தேசிய தலைவராக்கியிருக்கின்றனர். ஸ்மிருதி இரானி, `நீ இந்தி கற்றுக் கொள்ளாமல் இருக்கிறாய்' என என்னுடன் சண்டை போட்டார். ஆனாலும், நான் அமேதியில் அவருக்கு பிரசாரம் செய்தேன். அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளராக இருந்த ராம்லால், `நீ இந்தி கற்றுக் கொண்டால், உன்னை தேசிய தலைவராக்குவேன்' என்றார். நான் அப்போது சிரித்துக்கொண்டு வந்துவிட்டேன். அகில இந்திய மாநாட்டுக்குச் செல்லும்போது எலலாம் இந்தி கற்க வேண்டும் என நினைப்பேன். சரி நமக்கு அது எதற்கு என்றிருந்தேன். ஆனால், இப்போது இந்தி மட்டுமல்லாமல், மராட்டி, ஒரியா, குஜராத்தி என்று பல்வேறு மொழிகளைக் கற்றுக் கொள்ள பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பி.ஜே.பி இதிலும் வித்தியாசமான கட்சி என்பதை நிரூபித்துள்ளது. இந்த வாய்ப்பின் மூலம், தமிழக அரசியல் ஆழத்தை டெல்லிக்கு சரியான விதத்தில் புரிய வைப்பேன். மொழி மீதும், இனம் மீதும் பெரிய பற்று வைத்து, இம்மாநிலம் தேசிய ஒற்றுமைக்குப் பங்களித்துள்ளது என்பதை டெல்லியில் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது."

அடுத்த கட்டுரைக்கு