Published:Updated:

தஞ்சாவூர்: ஃபேஸ்புக் மூலம் ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ-வுக்குக் கொலை மிரட்டல் - பாஜக நிர்வாகி கைது

கைதுசெய்யப்பட்ட பி.ஜே.பி நிர்வாகி அன்பரசன்
கைதுசெய்யப்பட்ட பி.ஜே.பி நிர்வாகி அன்பரசன் ( ம.அரவிந்த் )

ஆளூர் ஷாநவாஸுக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க நிர்வாகி அன்பரசன் மீது கலவரத்தை துாண்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாகப்பட்டினம் எம்.எல்.ஏ-வும்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஆளூர் ஷாநவாஸுக்கு ஃபேஸ்புக் மூலம் கொலை மிரட்டல் விடுத்த பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர் மீது போலீஸார் ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ததுடன், அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆளூர் ஷாநவாஸ்
ஆளூர் ஷாநவாஸ்

தஞ்சாவூர் மாவட்டம், தம்பிக்கோட்டை மேலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன் (40). இவர் பா.ஜ.க-வில் தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணிச் செயலாளராக இருக்கிறார்.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க நான்கு இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து அன்பரசன், பா.ஜ.க இளைஞரணி தஞ்சை தெற்கு என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், `` மே 2, 2021 வரலாற்றின், பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய பொன்னாள். அக்கா திருமதி தமிழிசை அவர்கள் மந்திரமாய் முழங்கிய தாமரை மலர்ந்தே தீரும் என்பதற்கு இணங்க இன்று தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது.

பி.ஜே.பி நிர்வாகியின் ஃபேஸ்புக் பதிவு
பி.ஜே.பி நிர்வாகியின் ஃபேஸ்புக் பதிவு

இந்தக் களத்தில் பணியாற்றிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும், கட்சியின் உண்மைத் தொண்டர்களுக்கும், கூட்டணி நிர்வாகிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் வெற்றிப் பரிசாக ஆளூர் ஷாநவாஸ் மரணச் செய்தி விரைவில் வரும் என நினைக்கிறேன்" எனப் பதிவிட்டிருந்தனர்.

கெத்து காட்டிய திருமா!

இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவியது. இதையடுத்து பட்டுக்கோட்டை இஸ்லாமிய சமுதாய நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான முஹம்மது யஹ்யா, பட்டுக்கோட்டை போலீஸில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அன்பரசன் மீது கலவரத்தைத் துாண்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஏழு பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு