Published:Updated:

`எதிர்கால நண்பர்களே..!' - உத்தவ் தாக்கரே பேச்சால் கூட்டணியில் சர்ச்சை

காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டு, `பாஜக அமைச்சர்கள் எதிர்கால நண்பர்கள்’ என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருக்கிறது. ஆனால் அடிக்கடி சிவசேனா, பாஜக தங்களது பழைய நண்பன் என்பதை நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறது. டெல்லி சென்று பிரதமர் மோடியைவ் சந்தித்தபோதும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, மோடியை வெகுவாகப் பாராட்டினார். பிரதமர் மோடியின் பிறந்தநாளில் மோடிக்கு நிகராக யாரையும் ஒப்பிட முடியாது என்று சிவசேனா வாழ்த்து தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் மீண்டும் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் கட்சியை வெறுப்பேற்றும்விதமாகப் பேசியிருக்கிறார். அவுரங்காபாத் நகரில் நடந்த அரசு விழாவில் மத்திய ரயில்வே இணையமைச்சர் ராவ்சாஹேப் தன்வே, மத்திய அமைச்சர் பகவத் கராட் ஆகியோருடன் முதல்வர் உத்தவ் தாக்கரேயும் கலந்துகொண்டார். இதில் பேசிய உத்தவ் தாக்கரே, ஆரம்பத்தில் ``எனது இன்னாள், முன்னாள் எதிர்காலத்தில் கூட்டணி சேர்ந்தால் வரக்கூடிய எதிர்கால நண்பர்களே...” என்று ஆரம்பித்தார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

`எதிர்கால நண்பர்களே...’ என்று சொன்னபோது மேடையில் அமர்ந்திருந்த பாஜக அமைச்சர் ராவ்சாஹேப் தன்வேயை பார்த்து உத்தவ் தாக்கரே பேசினார். உத்தவ் தாக்கரே இவ்வாறு பேசியது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பாஜக-வுடன் எதிர்காலத்தில் கூட்டணி சேரலாம் என்ற எண்ணம் உத்தவ் தாக்கரே மனதில் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.

`மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை அடிப்பேன்!' - என்ற மத்திய அமைச்சர் கைது!

இது குறித்து நிகழ்ச்சி முடிந்த பிறகு உத்தவ் தாக்கரேவிடம் கேட்டதற்கு, ``காலம்தான் பதில் சொல்லும். என்னைப் பொறுத்தவரை அரசியல் வக்கிரமானதாக இருக்கக் கூடாது. மகாராஷ்டிராவில் மஹாவிலாஸ் அகாடி ஆட்சியில் இருக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. ஆனால் நாங்கள் அனைவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். நமது பதவிகளை மாநிலத்தின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரேயின் இந்தக் கருத்து குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ``ஒவ்வாத கூட்டணி மாநிலத்துக்கு பாதகத்தையே விளைவிக்கும் என்பதை உத்தவ் தாக்கரே உணர்ந்திருக்கிறார். அதனால்தான் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அரசியலில் எதுவும் நடக்கலாம். ஆனால் இப்போது எந்த மாற்றத்துக்கும் வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்தார். உத்தவ் தாக்கரேவின் இந்தக் கருத்து காங்கிரஸ் கட்சித் தலைவர்களை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு