Published:Updated:

ஒற்றுமையாக இருப்பதுதான், அ.தி.மு.க-வுக்கு ஆரோக்கியம்! - நயினார் நாகேந்திரன் ‘அட்வைஸ்’

நயினார் நாகேந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
நயினார் நாகேந்திரன்

எதற்கென்றே தெரியாமல் சிலர் போராட்டத்தை ஆரம்பிக்க, அதில் மற்றவர்களும் சேர்ந்திருக்கிறார்கள்

ஒற்றுமையாக இருப்பதுதான், அ.தி.மு.க-வுக்கு ஆரோக்கியம்! - நயினார் நாகேந்திரன் ‘அட்வைஸ்’

எதற்கென்றே தெரியாமல் சிலர் போராட்டத்தை ஆரம்பிக்க, அதில் மற்றவர்களும் சேர்ந்திருக்கிறார்கள்

Published:Updated:
நயினார் நாகேந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
நயினார் நாகேந்திரன்

அ.தி.மு.க உட்கட்சிப் பிரச்னையை பக்கத்து வீட்டுச் சண்டையைப் பார்ப்பதுபோல, தள்ளி நின்று கவனிக்கிறார்கள் பா.ஜ.க தலைவர்களெல்லாம். பழைய பாசமோ... என்னவோ... பா.ஜ.க சட்டமன்றக்குழுத் தலைவரான நயினார் நாகேந்திரன் மட்டும் ஏதாவது சொல்லிக்கொண்டேயிருக்கிறார். பரபரப்பான அரசியல் சூழலில் அவரிடம் போனில் பேசினேன்.

“ ‘அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமைதான் சரி’ என்று சொல்லியிருந்தீர்களே... இப்போது அ.தி.மு.க ஒற்றைத் தலைமையை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறதா அல்லது பிளவை நோக்கியா?

“ஒற்றுமையாக இருப்பதுதான், அ.தி.மு.க-வுக்கு ஆரோக்கியம். அதைத்தான் நான் வலியுறுத்தினேன். ஒற்றைத் தலைமையா, இரட்டைத் தலைமையா என்பதெல்லாம் அவர்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்தது. பேசினால் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு இருக்கிறது. அதை அவர்கள்தான் செய்ய வேண்டும். பா.ஜ.க அடுத்த கட்சியாக இருப்பதால், எல்லாவற்றிலும் தலையிட்டு நான் கருத்து சொல்வது நன்றாக இருக்காது.”

“ `சசிகலா பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தால் முழு மனதோடு வரவேற்போம்’ என்றீர்களே... அதற்கான முயற்சி ஏதும் மேற்கொண்டீர்களா?”

“வரவேற்கிறோம் என்று சொன்னதற்கு அவர்கள் பதில் ஏதும் சொல்லவில்லையே... பொறுத்திருந்து பார்ப்போம்.”

“நீங்கள் தி.மு.க-வில் இணையப்போவதாக சொல்லப்படுவது பற்றி?”

“எல்லோரிடமும் நட்பாக இருப்பது என் இயல்பு. எனவே அ.தி.மு.க காலத்திலிருந்து, இப்படி எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நட்பாக இருப்பது தவறா... நீட் விவகாரம், சி.ஏ.ஏ-வில் தி.மு.க-வின் நிலைப்பாடு, ஆளுநருக்கு எதிரான தீர்மானம் போன்ற பிரச்னைகளில் சட்டமன்றத்தில் தி.மு.க-வை எதிர்த்து நான் பேசியது, சட்டமன்றத்துக்கு வெளியிலும் தி.மு.க அரசுக்கு எதிராகக் களமாடியதெல்லாம் இப்படிச் சொல்பவர்களுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது.”

“ ‘அக்னிபத் திட்டத்தில் ராணுவப் பயிற்சி பெறும் இளைஞர்களை நான்கே ஆண்டுகளில் வெளியே அனுப்புவது, அவர்கள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும்’ என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?”

“இது போலித்தனமான எண்ணம். மக்களை ஏமாற்றும் பிரசாரம். நான்கு வருடங்களில் அந்த இளைஞனை வெறுங்கையுடன் அனுப்பப் போவதில்லையே... 21 வயது இளைஞனின் கையில் பதினைந்து லட்சம் ரூபாயைக் கொடுத்தால், அதைவைத்து அவன் எப்படியோ பிழைத்துக்கொள்ளலாம். பொதுவாக 21 வயதுக்குப் பிறகுதான், வேலை, சுயதொழில் ஆர்வம் வரும். எனவேதான், அக்னிபத் வீரர்களுக்குச் சான்றிதழ் கொடுக்கப்பட்டு, வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. நாட்டுக்குச் சேவை செய்யும் வாய்ப்பும், உடற்பயிற்சி மூலம் தன் உடல்நலனைப் பேணும் அக்கறையையும் பெற்ற ஓர் இளைஞன் எப்படிச் சமூக விரோதியாக மாறுவான்... அந்த அடிப்படையையே புரிந்துகொள்ளாமல், அரசியல் மோசடிக்காகப் போராட்டம், ஆர்ப்பாட்டமெல்லாம் செய்வது மக்களுக்குச் செய்யக்கூடிய துரோகம்.”

ஒற்றுமையாக இருப்பதுதான், அ.தி.மு.க-வுக்கு ஆரோக்கியம்! - நயினார் நாகேந்திரன் ‘அட்வைஸ்’

“இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்தும் போராட்டம்தானே இது...?”

“எதற்கென்றே தெரியாமல் சிலர் போராட்டத்தை ஆரம்பிக்க, அதில் மற்றவர்களும் சேர்ந்திருக்கிறார்கள். இந்திய நிலப்பகுதியில் பதினைந்தாயிரம் கிலோமீட்டர் பரப்பை சீனா ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது. இந்தியாவைத் தாக்க 700 பேர் பாகிஸ்தானில் பயிற்சி எடுக்கிறார்கள் என்கிற செய்தியும் வருகிறது. இப்படி எல்லாப் பக்கத்திலிருந்தும் அச்சுறுத்தல் இருப்பதால், நாட்டைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியிருக்கிறது. அவற்றில் ஒரு திட்டம்தான் அக்னிபத். இளைஞர்கள்தான் புரியாமல் போராடுகிறார்கள் என்றால், காங்கிரஸாரும் சேர்ந்து போராடுவது வெட்கக்கேடானது. ‘நான் வேதனைப்படுகிறேன், வெட்கப்படுகிறேன். என்னால் நாட்டைப் பாதுகாக்க முடியவில்லை’ என்று பாராளுமன்றத்தில் சொன்னவர் காங்கிரஸ் காலத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணி. அவர்களெல்லாம் இன்று போராட்டம் நடத்துவது கேலிக்கூத்து.”

“ராணுவப் பள்ளி தொடங்குவதற்கு ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கு அனுமதி தரப்பட்டிருக்கும் சூழலில், அந்தத் தன்னார்வலர்களையெல்லாம் அக்னிபத் திட்டத்துக்கு அனுப்பி பயிற்சி கொடுக்க வாய்ப்பிருப்பதாகச் சிலர் சொல்கிறார்களே?”

“இதெல்லாம் வதந்தி. எங்கள் ஊர் திருநெல்வேலிப் பக்கமெல்லாம் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறவர்கள், பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் என நிறைய பேர் அக்னிபத்தில் சேர ஆர்வமாக இருக்கிறார்கள். பெண்களும்தான். அவர்களெல்லாம் என்ன ஆர்.எஸ்.எஸ்-ஸா... இது விதண்டாவாதம்.”

“ `தன் கையைக்கொண்டே தன் கண்ணைக் குத்துவதுபோல, இந்தியாவின் 20 கோடிப் பழங்குடியினரை ஒடுக்கவே திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவராக்குகிறது பா.ஜ.க’ என்கிற காட்டமான விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே..?”

“திரௌபதி முர்முவை ஜனாதிபதி யாக்குவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது... பழங்குடியின மக்களில் ஒரு பெண்ணை நாட்டின் முதன்மையான ஸ்தானத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது பா.ஜ.க அரசு. இதை எதிர்ப்பதற்கும் ஒரு காரணத்தைக் கற்பிக்கிறார்கள் என்றால், சொல்வதற்கு எதுவும் இல்லை. தன்னால் எதுவும் செய்ய முடியாத இயலாமை நிலைமைக்குப் போகும்போதுதான் ஒருவர் கோபப்படுவதும், பொய் சொல்வதும் அதிகமாகும். இன்றைக்கு அப்படியான நிலைக்கு வந்திருக்கின்றன காங்கிரஸும், அதன் கூட்டணி கட்சிகளும். பா.ஜ.க-வின் சமூகநீதிப் பார்வையிலான இந்தத் தேர்வு, அவர்களுக்கு நெருக்கடியைத் தந்திருக்கிறது.”