Published:Updated:

“ஒரே ஒரு பாடலில் முன்னேறுவது போன்றதல்ல அரசியல்!” - கமலுக்கு வானதி அட்வைஸ்

வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
வானதி சீனிவாசன்

நான் பதவியேற்ற நாள், சந்தோஷமும் துக்கமும் கலந்த ஒரு நாள். என்னுடைய உடன்பிறவா தம்பியாக இருந்த யுவராஜ், பதவியேற்ற அதே காலை நேரத்தில் இறந்துவிட்டான்.

சட்டசபைத் தேர்தலில், கடைசிவரை விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது கோவை தெற்குத் தொகுதிதான். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பி.ஜே.பி தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் என மும்முனைப் போட்டியால், தேர்தல் பிரசாரமே அதிரிபுதிரியாக இருந்தது. வாக்கு எண்ணும்போதுகூட மூன்று பேரும் மாறி மாறி முன்னிலை வகித்துவந்தனர். கடைசியில் சின்ன வித்தியாசத்தில் கமல்ஹாசனைத் தோற்கடித்து, தாமரையை மலரவைத்து சட்டசபைக்குள் அடியெடுத்துவைத்திருக்கும் வானதி சீனிவாசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
 “ஒரே ஒரு பாடலில் முன்னேறுவது போன்றதல்ல அரசியல்!” - கமலுக்கு வானதி அட்வைஸ்

‘‘கோவை உளியம்பாளையம் கிராமம் டு சட்டசபைப் பயணம்... எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்ற அந்த நொடி எப்படியிருந்தது?’’

‘‘நான் பதவியேற்ற நாள், சந்தோஷமும் துக்கமும் கலந்த ஒரு நாள். என்னுடைய உடன்பிறவா தம்பியாக இருந்த யுவராஜ், பதவியேற்ற அதே காலை நேரத்தில் இறந்துவிட்டான். அந்த துக்கத்தால், பதவியேற்ற நொடியைப் பெரிதாக நினைக்க முடியவில்லை. பி.ஜே.பி நீண்டகாலத்துக்குப் பிறகு சட்டசபைக்குள் நுழைந்ததில் சந்தோஷமாக இருந்தாலும், மனம் முழுவதும் அவனுடைய இழப்பால் ஏற்பட்ட துக்கம்தான் நிறைந்திருந்தது.’’

‘‘வாக்குப்பதிவு மையத்தில் நீங்களும் கமல்ஹாசனும் என்ன பேசிக்கொண்டீர்கள்?’’

‘‘நான் எங்கள் கட்சிப் பிரமுகர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். கமல் பெரிதாக யாருடனும் பேசாமல் மிகவும் அமைதியாக இருந்தார். கடைசியாக நான், ‘இவ்வளவு வாக்குகளைப் பெற்றுள்ளீர்கள்... பெரிய விஷயம். வாழ்த்துகள்’ எனச் சொன்னேன். என்னைப்போல அவரும் எனக்கு வாழ்த்து சொல்வார் என எதிர்பார்த்தேன். தோல்வி விரக்தியோ என்னவோ, அவர் வாழ்த்து சொல்லவில்லை.’’

‘‘கோவையில் அ.தி.மு.க கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற்றதால், மற்ற பகுதியினர் கோவை மக்களைக் கடுமையாக விமர்சித்துவருகிறார்களே?’’

‘‘மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதுதான் ஜனநாயகப் பண்பு. கோவை மக்கள் தாமரையை ஜெயிக்கவைத்துவிட்டார்கள் என்பதால், அவர்கள் மனதில் பி.ஜே.பி மீதிருக்கும் வன்மத்தை வெளிப்படுத்த கோவையைக் கேவலமாகப் பேசினார்கள். அதற்கு இங்கிருக்கும் மக்களும் பதிலளித்தனர். நம் சமுதாயத்தில் தாங்க முடியாத வெறுப்பு இருக்கிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. நான் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த வேலையை யாரும் பேசவில்லை. அதற்காகத்தான் மக்கள் இந்த அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.’’

‘‘தி.மு.க அரசில் நேர்மையான அதிகாரிகளுக்கு முக்கியப் பதவிகள் கொடுப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘நீண்ட காலமாக தனது அப்பழுக்கற்ற சேவையின் மூலமாக நல்ல பெயரை எடுத்திருக்கும் இறையன்புவைத் தலைமைச் செயலாளராக நியமித்ததை நான் மனதார வரவேற்கிறேன். அதேபோல, சென்னை மாநகராட்சி கமிஷனராக ககன்தீப் சிங் பேடியின் நியமனத்தையும் வரவேற்கிறேன். இது நல்ல சமிக்ஞைகளை அனுப்பியிருக்கிறது. இதே மாதிரி எல்லா நிலையிலும் தொடர வேண்டும். ஏற்கெனவே அ.தி.மு.க அரசில் இருந்த எல்லா அதிகாரிகளும் ஊழல்வாதிகள் இல்லை. அரசாங்கம் அந்தக் கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது. நல்ல அதிகாரிகளைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.’’

 “ஒரே ஒரு பாடலில் முன்னேறுவது போன்றதல்ல அரசியல்!” - கமலுக்கு வானதி அட்வைஸ்

‘‘ ‘நீட் தேர்வை ரத்துசெய்வது குறித்து ஆலோசனை செய்வோம்; புதிய கல்விக் கொள்கையை இங்கு அனுமதிக்க மாட்டோம்’ என்று தி.மு.க அரசு சொல்லியிருக்கிறதே?”

‘‘மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் கல்வித்துறையில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அது முழுவதுமாக மத்திய அரசுக்கும் போகாது; மாநில அரசுக்கும் வராது. அதனால், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.’’

‘‘கொரோனா தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை, பீகாரில் கங்கை ஆற்றில் கொரோனா சடலங்கள் மிதப்பது என்று கொரோனா குறித்த செய்திகள் பயமுறுத்துகின்றன. இந்தநேரத்தில் ஆயிரக்கணக்கான கோடி செலவு செய்து புதிய நாடாளுமன்றம் கட்டுவது அவசியமா?’’

‘‘எல்லாமே அவசியமாகத்தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் அவசியமா என்று கேட்டதன் விளைவால், தற்போது எந்த மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் இல்லை. 100 பேர் கொண்ட மருத்துவமனைக்கு 1.5 கோடி ரூபாய் செலவு செய்தால் போதும். எல்லாவற்றுக்கும் அந்தந்தக் காலத்தில் தேவை ஏற்படத்தான் செய்யும். தமிழ்நாடு அரசு இவ்வளவு நஷ்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது... இது தேவையா அது தேவையா என்று யாரும் கேட்கவில்லையே? எவ்வளவு கடன் இருந்தாலும் எல்லா அரசாங்கமும் மற்ற விஷயங்களைச் செய்துகொண்டுதானே இருக்கின்றன? எல்லாவற்றையும் தனித்தனியாக அணுக வேண்டும். புதிய நாடாளுமன்றம் கட்டுவது என்பது ஏற்கெனவே நாடாளுமன்ற பட்ஜெட்டில் ஒதுக்கிய திட்டம்.

ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கான மூலப்பொருள் நம் நாட்டில் இல்லை. அதை வெளிநாட்டிலிருந்துதான் கொண்டு வர வேண்டும். ‘வெளிநாட்டுக்கு அதைக் கொடுத்தீர்களே... இதைக் கொடுத்தீர்களே’ என்று கேள்வி எழுப்புபவர்களுக்குச் சொல்கிறேன்... இப்போது அந்த நல்லுறவை வைத்துத்தான் மூலப்பொருள்களை வாங்கி வருகிறோம். ஆரம்ப கட்டத்திலேயே அறிகுறி தெரிந்தவுடன் மக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும். நோயின் தடுப்பு, ஆரம்பகட்ட சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், இந்த அசாதாரண சூழ்நிலையிலிருந்து மீண்டு வர முடியும்.’’

“இப்போதும் நீங்கள் அ.தி.மு.க துணையால்தான் வென்றதாக விமர்சனம் வைக்கிறார்கள். மேற்கு வங்கத்தைப்போல முக்கியக் கட்சிகளை ஓரங்கட்டி, தமிழகத்திலும் வலுவான எதிர்க்கட்சியாக முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?”

‘‘நிச்சயமாக நாங்கள் அ.தி.மு.க கூட்டணி பலத்தால்தான் வெற்றிபெற்றோம். எல்லா கட்சியும் அரசியல் வளர்ச்சியை நோக்கித்தான் வேலை செய்வார்கள். கட்சியின் வளர்ச்சிக்கு இந்த நான்கு எம்.எல்.ஏ-க்களிலிருந்து அதிகப்படியான எம்.எல்.ஏ-க்களை உருவாக்க நாங்கள் உழைப்போம். தாமரை இப்போது சட்டசபையில் மலர்ந்துவிட்டது. உழைப்பின் காரணமாக தமிழகத்தில் தாமரை எண்ணிக்கை அதிகரிக்கும்.’’

‘‘ ‘கோவை தெற்குத் தொகுதியில், பணம் கொடுக்காமலேயே 33 சதவிகித மக்கள் நமக்கு வாக்களித்துள்ளனர்’ என கமல்ஹாசன் கூறியிருக்கிறார். பணபலம்தான் வெற்றியை முடிவு செய்கிறதா?’’

‘‘கமலின் பேச்சு அவர் சூப்பர்ஸ்டார் மனநிலையில் இருப்பதை வெளிப்படுத்துகிறது. அவரின் சமூக வலைதள புரொமோஷன், விளம்பரத்துக்குச் செலவு செய்த தொகை, பிரசார வாகனங்கள் தொடங்கி அனைத்தையும் பார்த்தாலே அவர் எந்த அளவுக்குப் பண பலத்தைப் பயன்படுத்தினார் என்பது தெரியும். திரைமோகத்தைக் கடந்து எங்களின் வேலையால் நாங்கள் வெற்றிபெற்றிருக்கிறோம். வீட்டுக்கு வீடு அறிமுகமான சினிமா பிரபலம் கமல்ஹாசன். கிராமத்திலிருந்து உழைப்பாலும் மக்கள் சேவையாலும் அறிமுகமானவள் நான். இந்த இரண்டையும் ஒப்பிட்டாலே அவர் சொல்லும் பணபலம் காணாமல் போய்விடும். தனது நடிப்பால் புகழ் பெற்ற நபர், தன் தோல்விக்குப் பணபலத்தைக் காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல.’’

 “ஒரே ஒரு பாடலில் முன்னேறுவது போன்றதல்ல அரசியல்!” - கமலுக்கு வானதி அட்வைஸ்

‘‘இப்போது கமல்ஹாசனுக்கு ஒரு மெசேஜ் சொல்லுங்களேன்?’’

‘‘தோல்வியை மனதார ஏற்றுக்கொண்டு, அவர் சென்னையிலேயே இருந்தாலும் கோவை தெற்கு மக்களுக்காக உழைக்க வேண்டும். சினிமாவில் இரண்டரை மணி நேரத்தில் ஒரு ஹீரோ எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆனால், ஒரே ஒரு பாடலில் முன்னேறுவது போன்றதல்ல அரசியல். கள யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அவர் அரசியலை அணுக வேண்டும். வெற்றி தோல்வியைக் கடந்து மக்கள் பணிதான் அரசியல் என்று புரிந்துகொண்டு செயலாற்றுங்கள். அரசியலில் அவர் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். எந்த அளவுக்குத் தியாகம் மற்றும் உழைப்பின் மூலம் மக்களை அணுகுகிறீர்களோ, அந்த அளவுக்கு மக்கள் வாய்ப்பளிப்பார்கள்.’’