Published:Updated:

`சைலன்ட் மூவ்... அதிமுக-வுக்கு குறி' - ஐ.பி மூலம் ஆட்டத்தை நடத்துகிறதா பாஜக?!

அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்துக்கொண்டே அ.தி.மு.க-வை கரைக்கும் யுக்தியை பா.ஜ.க கையிலெடுத்திருக்கிறது

``2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-வுக்கு மாற்றாக பா.ஜ.க-வே தேர்தல் களத்தில் நிற்கும்” என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தும், அதை எதிர்க்கவேண்டிய அ.தி.மு.க அமைதியாக வேடிக்கை பார்த்துவருகிறது. அ.தி.மு.க-வின் அமைதியை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் வேலையில் இறங்கியிருக்கிறது பா.ஜ.க தலைமை.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

தி.மு.க அரசின் மீதான ஊழல் புகார்களைத் தொடர்ந்து பொதுவெளியில் எதிர்த்துவருகிறார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை. குறிப்பாகத் தமிழக அரசியல் என்பது அ.தி.மு.க - தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளைச் சுற்றி மட்டுமே நடந்துவந்த நிலையில், இப்போது அ.தி.மு.க-வுக்கு மாற்றாக பா.ஜ.க தன்னை முன்னிலைப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறது. ஆனால், இதை வலிமையாக எதிர்க்க வேண்டிய அ.தி.மு.க அமைதியாக வேடிக்கை பார்த்துவருகிறது.

இந்த நிலையில், அடுத்து நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் முடிவில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. ஆனால், அதையே தங்களுக்குச் சாதகமாக மாற்றவும் பா.ஜ.க திட்டமிடுகிறது. அதற்காகவே, தேர்தலுக்கு முன்பாக அனைத்து முன்னேற்பாடுகளையும் அக்கட்சி வேகமாக மேற்கொண்டு வருகிறது.

விருப்ப மனு பெறுவதில் தொடங்கி, எந்தெந்த பகுதிகளில் பா.ஜ.க-வுக்கு செல்வாக்கு இருக்கிறது, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது வரை பா.ஜ.க பலமான திட்டங்களைத் தயார் செய்துவருகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க பெறும் வெற்றி என்பது, அந்த கட்சிக்குத் தமிழகத்தில் பலமான அடித்தளத்தை ஏற்படுத்தும் என்கிற எதார்த்த நிலையைத் தமிழக பா.ஜ.க உணர்ந்திருக்கிறது. இதற்கு ஏற்றார் போல் அ.தி.மு.க-வும் பலவீனமான ஒருநிலையில் இருக்கிறது. இந்த பலவீனமான அ.தி.மு.க-வை முகமூடியாக வைத்துக்கொண்டே பா.ஜ.க உள்ளாட்சித் தேர்தலில் தனது அரசியலை மேற்கொள்ளப்போகிறது. குறிப்பாக தற்போது அ.தி.மு.க-வில் உள்ள தலைமைகளுக்கிடையேயான பிரச்னைகளையும், சசிகலாவின் நடவடிக்கைகளையும் பா.ஜ.க மௌனமாக ரசிக்கிறது. அந்த கட்சிக்கு அடுத்தடுத்து ஏற்படும் சிக்கல்களையும் சத்தமில்லாமல் வேடிக்கை பார்க்கப் போகிறது.

எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

குறிப்பாக, அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் காலத்து ஆள்களையும், தற்போதைய கட்சியின் தலைமையினால் புறக்கணிக்கப்பட்டவர்களையும், சத்தமில்லாமல் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை ஒருபுறம் பா.ஜ.க தலைமை செய்ய ஆரம்பித்திருக்கிறது.

அதோடு அ.தி.மு.க தலைமைக்குள் நடக்கும் விவகாரங்களில் முரண்பாடுகளைக் கொண்டுள்ளவர்கள் யார் என்கிற விவரங்களையும் சத்தமில்லாமல் மத்திய உளவுத்துறையான ஐ.பி மூலம், அக்கட்சி அலசி ஆராய்ந்து வருகிறது. கடந்த வாரம் மத்திய அரசுக்கு நெருக்கமான இரண்டு பேர் தமிழகம் வந்தனர். தமிழகத்தில் அ.தி.மு.க-வில் மட்டுமின்றி பிற கட்சிகளிலும், மனவருத்தத்தில் இருப்பவர்களை பா.ஜ.க பக்கம் கொண்டுவரவும், உள்ளாட்சித் தேர்தலில் வகுக்க வேண்டிய வியூகங்கள் குறித்தும் சில ஐடியாக்களை கொடுத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குக் கட்சி செலவு செய்யுமா? என்கிற எண்ணம் அந்த கட்சியினரிடையே உள்ளது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்குத் தேவைப்படும் நிதியை டெல்லியிருந்து திரட்ட தமிழக பா.ஜ.க மேலிடத்தில் பேசியிருக்கிறது. அதே போல் அ.தி.மு.க மட்டுமல்லாமல், தி.மு.க கூட்டணியிலிருக்கும் ம.தி.மு.க விலிருந்தும், தமிழக காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களும் யார் என்கிற விவரங்களையும் பா.ஜ.க தரப்பு உளவுத்துறை மூலம் கேட்டிருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

`தமிழக அரசியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அ.தி.மு.க-வை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை நாம் பிடித்துவிட்டால். எதிர்காலத்தில் தி.மு.க-வையும் வீழ்த்திவிடலாம்' என்ற கணக்கின் படி, சைல்ன்ட் மூவ்களை பா.ஜ.க தரப்பு மேற்கொண்டு வருகிறது. அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்துகொண்டே அ.தி.மு.க-வை கரைக்கும் இந்த யுக்திக்கு மத்திய அரசின் இயந்திரங்களும் உடனாக இருப்பதால் தி.மு.க தரப்பும், பா.ஜ.க மீது ஒரு கண் வைத்திருக்கிறது!

`நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி!' - முட்டிமோதும் அதிமுக - பாஜக
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு