Published:Updated:

பா.ஜ.க-வில் சீனியர் ஜூனியரெல்லாம் கிடையாது! - சமாளிக்கும் நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
நாராயணன் திருப்பதி

ஒரு கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது, எங்கு நடத்தப்படுகிறது, கூட்டத்தின் நோக்கம் என்ன, பார்வையாளர்கள் யார் யார்... போன்றவற்றின் அடிப்படையில்தான் பேச முடியும்

பா.ஜ.க-வில் சீனியர் ஜூனியரெல்லாம் கிடையாது! - சமாளிக்கும் நாராயணன் திருப்பதி

ஒரு கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது, எங்கு நடத்தப்படுகிறது, கூட்டத்தின் நோக்கம் என்ன, பார்வையாளர்கள் யார் யார்... போன்றவற்றின் அடிப்படையில்தான் பேச முடியும்

Published:Updated:
நாராயணன் திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
நாராயணன் திருப்பதி

டெல்லியில் நேஷனல் ஹெரால்டு வழக்கை எதிர்த்து போராட்டம் செய்த காங்கிரஸார்மீது போலீஸாரின் தள்ளு முள்ளு, உ.பி-யில் யோகியின் புல்டோசர் அரசியல், தமிழகத்தில் அண்ணாமலை பட்டியலிடும் தமிழக அரசுக்கெதிரான ஊழல் புகார்கள் உள்ளிட்ட கேள்விகளோடு பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியைச் சந்தித்தேன்...

“நேஷனல் ஹெரால்டு பத்திரிகை, காங்கிரஸின் வரலாற்றுப் பின்னணிகொண்ட பத்திரிகை என்கிறார்களே?”

“அது காங்கிரஸ் இயக்கம். கட்சி கிடையாது. சுதந்திரத்துக்குப் பின்பிருந்த காங்கிரஸ்கூட காமராஜருடன் போய்விட்டது. இப்போது இருப்பவர்கள் ‘நாங்கள்தான் காங்கிரஸ்’ என்று சொல்வது தவறு. இது இந்திரா காங்கிரஸ். பழைய காங்கிரஸ் இயக்கத்தில் எங்களுடைய ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவர்கூட இருந்திருக்கிறார். அதேபோல கம்யூனிஸ்ட்டுகளும் காங்கிரஸிலிருந்துதானே வந்தார்கள்... எனவே அதை அவர்கள் மட்டும் சொந்தம் கொண்டாடுவது தவறு. அது மக்களுக்கான பத்திரிகை!”

“நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக 2015-ல் விசாரணை செய்த அமலாக்கத்துறை, வழக்குக்கான முகாந்திரம் ஒன்றும் இல்லை என முடிவுசெய்யப்பட்டு அதை நிறுத்தியிருக்கிறது. அதை மீண்டும் 2022-ல் எடுத்து நடத்துவது அரசியல் பழிவாங்கல்தானே?”

“இதிலென்ன பழிவாங்கல் இருக்கிறது... நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்பேரில்தான் இந்த வழக்கு நடக்கிறது. குற்றமற்றவர்கள் என நிரூபித்துவிட்டு வெளிவரட்டும். அதை விட்டு விட்டு சாலையில் உட்கார்ந்து, `என்னை அடித்துவிட்டார்கள்’ என ஒப்பாரி வைக்கிறார்கள். இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்.”

பா.ஜ.க-வில் சீனியர் ஜூனியரெல்லாம் கிடையாது! - சமாளிக்கும் நாராயணன் திருப்பதி

“சட்டம், நீதிமன்றம் என்று பேசுகிற நீங்கள், எந்த விசாரணையுமின்றி உ.பி-யில் பா.ஜ.க செய்யும் புல்டோசர் இடிப்புகள் குறித்து என்ன சொல்கிறீர்கள்?”

“விமர்சனம் செய்தால் விமர்சனம் மூலமாக பதில் சொல்லலாம். ஜனநாயகரீதியாகப் போராட்டம் செய்திருந்தால்கூட ஏற்றுக்கொள்ளலாம். மக்களை பாதிக்கும் வகையில் வன்முறை செய்தால், வன்முறையாளர்கள்மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டியது ஓர் அரசின் கடமை மட்டுமல்ல, அவசியமானதும்கூட. அதைத்தான் உ.பி அரசு செய்துவருகிறது.’’

“கட்டடங்களை இடிப்பதுதான் உரிய நடவடிக்கையா?”

“அத்துமீறி வீடு கட்டியிருந்தால் என்ன செய்வது?”

“அத்துமீறிக் கட்டப்பட்டது என்பது, அந்தப் பெண் போராட்டக் களத்துக்கு வந்த பிறகுதான் அரசுக்குத் தெரிந்ததா?”

“ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி அரசாங்கம் நடந்திருக்கிறது. எனவே, இது சட்டரீதியான நடவடிக்கைதான்.”

“அத்து மீறி கட்டப்பட்டிருக்கும் எல்லாக் கட்டடங்களும் உ.பி-யில் இடிக்கப்பட்டுவிட்டனவா... அப்படிக் கட்டியிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது உ.பி அரசு நடவடிக்கை எடுக்குமா?”

“யாராக இருந்தாலும் உ.பி அரசு நடவடிக்கை எடுக்கும். அது என்ன தமிழ்நாடு அரசா... ஆனாலும், சாதாரண பொதுமக்கள் ஆக்கிரமிப்பு - கார்ப்பரேட் ஆக்கிரமிப்பின் மீதான நடவடிக்கைகளில் வேறுபாடுகள் இருப்பது உண்மைதான். அதைச் சரிசெய்ய வேண்டும்”

“அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஆளுநர் ஒருவர், ‘சனாதன தர்மத்தால் உருவாக்கப்பட்டதே இந்த பாரதம்’ என்று பேசுவது ஏற்புடையதா?”

“ஒரு கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது, எங்கு நடத்தப்படுகிறது, கூட்டத்தின் நோக்கம் என்ன, பார்வையாளர்கள் யார் யார்... போன்றவற்றின் அடிப்படையில்தான் பேச முடியும். அவர் கலந்துகொண்ட நிகழ்வு அந்த மாதிரியானது. சனாதன தர்மம் என்பது இந்த நாட்டின் பண்பாட்டில் ஊறிப்போன விஷயம். அதைத்தான் ‘இந்து’ என்கிறோம். அது மதம் இல்லை. வாழும் முறை. அதைப் பற்றிப் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது... திருமாவளவன், திருநாவுக்கரசர், இடதுசாரித் தலைவர்கள், முதல்வர் ஸ்டாலின் எல்லோரும் ‘சனாதன தர்மத்தை ஒழிப்போம்’ என்கிறார்கள். எந்தவொரு புரிதலும் இல்லாமல், அரைவேக்காடான அரசியல் தலைவர்கள் தமிழ்நாட்டில் வெறும் அரசியல் லாபத்துக்காக ஆங்கிலேயர்கள் எழுதியதைப் படித்துவிட்டு இன்று தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்!”

“அண்ணாமலை, மாதா மாதம் ‘ஊழல் அமைச்சர்கள் குறித்து வெளியிடுவேன்’ என்கிறார். ஆதாரம் இருந்தால் மக்கள் முன் வெளியிட்டு சட்ட நடவடிக்கை கோர வேண்டியதுதானே... அதை விட்டுவிட்டு இப்படிச் சொல்லிக்கொண்டேயிருப்பது, மிரட்டல் அரசியல்தானே?”

“தி.மு.க என்றாலே ஊழல்தானே... தொடர்ந்து ஊழல் செய்வதுதானே அவர்கள் வழக்கம். மத்திய அரசின் திட்டங்களில்கூட ஊழல் செய்துவருகிறது இந்த அரசு. சமீபத்தில் நாங்கள் சொன்ன பிறகுதான், ஊட்டச்சத்துப் பெட்டக டெண்டரில் மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். நாங்கள் சொல்லாமல் இருந்திருந்தால் அரசுக்கு இழப்பும், மக்களுக்கு பாதிப்பும் ஏற்பட்டிருக்கும். அவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகத்தான் முன்கூட்டியே சொல்கிறோம்!”

“உங்கள் செயல்பாடுகளுக்குக் கூட்டணியிலுள்ள அ.தி.மு.க-விலிருந்தே எதிர்ப்புகள் வருகின்றனவே?”

“அப்படி பா.ஜ.க-வை விமர்சிப்பது குறித்து, எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மிகச் சரியாக விளக்கிவிட்டார்கள். அதெல்லாம் முடிந்துபோன விஷயம். கட்சித் தலைமையை மீறி மற்றவர்கள் பேசுவதற்கெல்லாம் கருத்து சொல்ல முடியாது!”

“தமிழக பா.ஜ.க-வில் மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்குத்தான் முன்னுரிமை; சீனியர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்ற கருத்து நிலவுகிறதே?”

“இந்தியாவிலுள்ள கட்சிகளில் கம்யூனிஸ்டைத் தவிர, பிற கட்சிகள் ஒரு குடும்பத்தைச் சார்ந்தோ அல்லது ஒற்றைத் தலைமையிலோதான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. பா.ஜ.க-வில் அப்படி கிடையாது. தலைமை மாறிக்கொண்டே இருக்கும். தலைமை சொல்படிதான் கட்சி இயங்கும். இதில் சீனியர், ஜூனியரெல்லாம் கிடையாது!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism