Published:Updated:

ராமநாதபுரம்:`பானை இங்கே... கரண்டி எங்கே?’- பா.ஜ.க-வின் பொங்கல் விழாவில் பெண்கள் கேள்வி!

பா.ஜ.க விழாவில் குச்சியால் பொங்கல் கிண்டும் பெண்
பா.ஜ.க விழாவில் குச்சியால் பொங்கல் கிண்டும் பெண் ( உ.பாண்டி )

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகேயுள்ள ஓட்டமட காளியம்மன் கோயிலில் போகலூர் ஒன்றிய பா.ஜ.க-வின் சார்பில் 1,101 பானைகளில் பொங்கல் வைக்கும் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ராமநாதபுரத்தில் பா.ஜ.க-வினர் நடத்திய `நம்ம ஊரு பொங்கல் விழா’வில் நூற்றுக்கணக்கானோருக்கு பொங்கல்வைக்கத் தேவையான பொருள்கள், கரண்டி போன்றவை இல்லாமல் பொங்கல் பானை மட்டும் வழங்கியதால் சலசலப்பு உருவானது.

பொங்கல் வைக்கும் பா.ஜ.க தலைவர் முருகன்
பொங்கல் வைக்கும் பா.ஜ.க தலைவர் முருகன்
உ.பாண்டி

தமிழக பா.ஜ.க-வின் சார்பில், மாநிலம் முழுவதும் இன்றும் நாளையும் `நம்ம ஊரு பொங்கல்’ என்ற பெயரில் பொங்கல் விழா நடத்தப்படுகிறது. பா.ஜ.க-வின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்று, விழாவைத் தொடங்கிவைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரத்தில் நடந்த விழாவில் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டு 101 பானைகளில் பொங்கல்வைக்கும் நிகழ்வைத் தொடங்கிவைத்தார். இந்த விழாவில் மாவட்டத் தலைவர் முரளிதரன், தேசியப் பொதுக்குழு உறுப்பினர்கள் குப்புராமு உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகேயுள்ள ஓட்டமட காளியம்மன் கோயிலில் போகலூர் ஒன்றிய பா.ஜ.க-வின் சார்பில் 1,101 பானைகளில் பொங்கல் வைக்கும் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் பங்கேற்று பொங்கல்வைக்க வரும் பெண்களுக்கு பொங்கல் பானை, கரண்டி, அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொங்கல் பானை முன் பெண்கள்.
பொங்கல் பானை முன் பெண்கள்.
உ.பாண்டி

இந்தநிலையில், இன்று காலை சத்திரக்குடி ஓட்டமட காளியம்மன் கோயில் முன் நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டிருந்தனர். ஆனால், இவர்களில் சுமார் 200 பேருக்கு மட்டுமே பொங்கல் வைப்பதற்கான புதுப் பானைகள் வழங்கப்பட்டன. அதிலும், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு பொங்கல் கிண்டுவதற்கான கரண்டி, பொங்கல் வைப்பதற்குத் தேவையான பொருள்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் வெறும் பொங்கல் பானைகளை மட்டும் செங்கல் அடுப்பில் வைத்தபடி காத்திருந்தனர்.

"பா.ஜ.க இல்லையெனில் தமிழக அரசியலே இல்லை!"- எல்.முருகன்... மக்கள் கருத்து? #VikatanPollResults

இதைத் தொடர்ந்து அங்கு வந்த மாநிலத் தலைவர் முருகன் பொங்கல்வைக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். பொங்கல்வைக்கத் தேவையான அனைத்துப் பொருள்களும் கிடைத்தவர்கள் மட்டும் பொங்கல்வைத்தனர். சிலருக்கு பொங்கல் கிண்டுவதற்கான கரண்டிகூட கொடுக்கப்படாததால் அவர்கள், கரும்புத் தட்டை மற்றும் குச்சி போன்றவற்றைக் கொண்டு பொங்கல் கிண்டினர். அதுவும் கிடைக்காதவர்கள் ஆத்திரத்துடன் இது குறித்து மாநிலத் தலைவர் முருகனிடம் முறையிட்டனர். இதை எதிர்பார்க்காத அவர், அவர்களை சமாதானம் செய்தபடி அங்கிருந்து கிளம்பினார்.

பொங்கல் கிண்டும் கரண்டியான கரும்பு.
பொங்கல் கிண்டும் கரண்டியான கரும்பு.
உ.பாண்டி

இதற்கிடையே அனைவருக்கும் பொங்கல்வைக்கத் தேவையான பானை, கரண்டி, பொங்கல் பொருள்கள் என அனைத்தும் வாங்கப்பட்டதாகவும், கரண்டி உள்ளிட்டவற்றை யாரோ எடுத்துச் சென்றுவிட்டார்கள் எனவும் பா.ஜ.க ஒன்றிய கவுன்சிலரான கதிரவன் ஒலி பெருக்கியில் பேசியது விழாவுக்கு வந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

அடுத்த கட்டுரைக்கு