Published:Updated:

ஹத்ராஸ் படுகொலையைச் செய்தது காங்கிரஸ், கம்யூனிஸ்ட்! - பரபரப்பை ஏற்படுத்திய பா.ஜ.க போஸ்டர்

பா.ஜ.க சார்பில் ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
பா.ஜ.க சார்பில் ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

மனோதங்கராஜ் எம்.எல்.ஏ ``சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது பா.ஜ.க-வினரின் தொழில்போல ஆகிவிட்டது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாங்கள் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்துவோம்” என்றார்

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க மீதும் எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றன. மேலும், மரணமடைந்த பெண்ணின் வீட்டுக்குச் செல்ல முயன்ற ராகுல் காந்தியை போலீஸார் தடுத்த சம்பவமும் பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து எதிர்கட்சிகள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றன. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க சார்பில் மரணமடைந்த இளம் பெண்ணுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அந்த போஸ்டரில், ``உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கயவர்களால் படுகொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கை ஆக்குகிறோம். வருத்தத்துடன் பாரதிய ஜனதா கட்சி, கன்னியாகுமரி மாவட்டம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்த காங்கிரஸ், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்
எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்த காங்கிரஸ், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

இந்த போஸ்டர் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், தி.மு.க எம்.எல்.ஏ மனோதங்கராஜ், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி பெல்லார்மின் உள்ளிட்டோர் நாகர்கோவிலிலுள்ள எஸ்.பி அலுவலகத்தில் போஸ்டர் ஒட்டிய பா.ஜ.க-வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்தனர்.

இது குறித்து மனோதங்கராஜ் எம்.எல்.ஏ கூறுகையில், ``பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், பட்டியலினப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, உடலைக்கூட பெற்றோருக்குக் காட்டாமல் தீவைத்து எரித்த ஆட்சியின் அவலத்தை உலகமே அறியும். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில் காங்கிரஸ் கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் அந்தப் பெண்ணை கொலை செய்துவிட்டார்கள், கண்ணீர் அஞ்சலி என்று அவதூறு போஸ்டரை ஒட்டியிருக்கிறார்கள்.

மனோதங்கராஜ் எம்.எல்.ஏ
மனோதங்கராஜ் எம்.எல்.ஏ

தங்கள் மேலுள்ள கொலைப் பழியை, இந்த வக்கிரச் செயலை திசைதிருப்பி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வேலையை பி.ஜே.பி-யைச் சேர்ந்த சிலர் செய்துகொண்டிருக்கிறார்கள். அது குறித்து கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாங்கள் புகார் அளித்திருக்கிறோம். அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது பி.ஜே.பி-யினரின் தொழில்போல ஆகிவிட்டது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாங்கள் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்துவோம்" என்றார்.

`நான்கு மாதங்களாகத் துன்புறுத்தப்பட்ட இளம்பெண்!’ - ஹத்ராஸ் சம்பவத்தில் நடந்தது என்ன?

இது குறித்து பா.ஜ.க கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் தர்மராஜிடம் பேசினோம். ``அந்தப் பெண்ணைக் கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் என்று காங்கிரஸ்காரர்களும் கம்யூனிஸ்ட்டு கட்சியினரும் அவதூறு பிரசாரம் செய்கிறார்கள். அவரைக் கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வினர் என்று அவர்கள் முதலில் நிரூபிக்கட்டும். அதன் பிறகு இந்த போஸ்டரில் நாங்கள் குறிப்பிட்டிருப்பதை நிரூபிக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு