Published:Updated:

`ஸ்டாலின் காரை மறித்த பா.ஜ.க -வினர்; கொந்தளித்த தி.மு.க!’ - மதுரையில் என்ன நடந்தது?

சம்பந்தப்பட்ட பி.ஜே.பி-யினர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் ( என்.ஜி.மணிகண்டன் )

கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மதுரை மாநகர காவல்துறை அலட்சியம் காட்டியதாகத் தி.மு.க-வினர் புகார் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
என்.ஜி.மணிகண்டன்

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் இனிகோ இருதயராஜ் ஏற்பாடு செய்த சமத்துவ கிறிஸ்துவ திருவிழா நேற்று மாலை மதுரையில் நடந்தது. இதில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவர் விமான நிலையத்திலிருந்து வரும்போது, வில்லாபுரத்தில் எஸ்ஸார் கோபி ஆதரவாளர்கள் மாவட்டச் செயலாளர்கள் மீது புகார் தெரிவித்தார்கள். அவர்களை சமாதானப்படுத்தி, அங்கிருந்து மறைந்த தலைமைக்கழகப் பேச்சாளர் சலீம் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறி ஐந்து லட்சம் நிதி அளித்துவிட்டு, தங்கும் விடுதிக்குச் சென்றவர் மாலை 5 மணிக்கு புதூர் சி.எஸ்.ஐ மைதானத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு கிளம்பினார்.

செல்கின்ற வழியில் கற்பக நகரில் பி.ஜே.பி இளைஞர் அணிச் செயலாளர் சங்கர் பாண்டி தலைமையில் பி.ஜே.பி நிர்வாகிகள் சிலர் தி.மு.க-வுக்கு எதிராகக் கோஷமிட்டபடி காரை மறிக்க முயன்றபோது காவல்துறையினர் அவர்களைத் தடுத்தனர்.

பி.ஜே.பி நிர்வாகிகள்
பி.ஜே.பி நிர்வாகிகள்
என்.ஜி.மணிகண்டன்

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குப் பின் அங்கிருந்து கிளம்பி விழாவுக்குச் சென்றார். ஆனால், சம்பந்தப்பட்ட பி.ஜே.பி-யினர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு விஷயத்தில் மதுரை மாநகர காவல்துறை அலட்சியம் காட்டியதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க நிர்வாகிகள் புகார் கூறியுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் நிதி உதவி
மு.க.ஸ்டாலின் நிதி உதவி
என்.ஜி.மணிகண்டன்

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள், ''தலைவர் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் காவல்துறையினர், சி.ஐ.டி பிரிவினர் கண்காணித்த நிலையில் பி.ஜே.பி-யினர் கையில் கொடியோடு சாலையோரம் தயாராக நின்றதைக் கண்டும் காணாமல் நின்றது ஏன். அவர்களை அப்போதே அப்புறப்படுத்தியிருக்கலாமே. தலைவரின் பாதுகாப்பில் காவல்துறை அலட்சியமாக நடந்துள்ளது. இது சம்பந்தமாக டி.ஜி.பி-யிடம் புகார் செய்வோம்'' என்றார்கள்.