Published:Updated:

``மகாராஷ்ட்ராவில் அதிகாரப் பசியில் பா.ஜ.க'' - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

``பா.ஜ.க ஒரு குடும்பத்துக்குள் நுழைந்து அரசியல் செய்து, அதன் மூலமாக அதிகாரப் பசியைப் போக்கிக்கொள்ள முயன்றிருக்கிறது” எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

k.s.alagiri
k.s.alagiri

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரேதான் முதல்வர் ஆவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அம்மாநில அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பத்தால் பட்னாவிஸ் முதல்வராகவும் அஜித் பவார் துணை முதல்வராகவும் ஆகியுள்ளனர். இந்த அரசியல் நிகழ்வு பரபரப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

k.s.alagiri
k.s.alagiri

பல கட்சித் தலைவர்களும் கருத்துகளைக் கூறி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார். பின்னர், மகாராஷ்ட்ரா மாநில விவகாரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ``மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதிலும், அதிகாரத்தோடு சமரசம் செய்துகொள்வதிலும் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் காரணமாக நிகழ்ந்துள்ளன. பா.ஜ.க தன்னுடைய கோர முகத்தை மீண்டும் ஒருமுறை மகராஷ்ட்ரா மாநிலத்தில் அரங்கேற்றியுள்ளது.

k.s.alagiri
k.s.alagiri

தற்போதைய நிகழ்வுகளைப் பார்த்தால் தேசியவாத காங்கிரஸை பா.ஜ.க உடைத்துள்ளது. ஒரு குடும்பத்துக்குள் நுழைந்து அரசியல் செய்து பா.ஜ.க அதன் மூலமாக அதிகாரப் பசியைப் போக்கிக்கொள்ள முயன்றிருக்கிறது. வேண்டுமானால் அவர்கள் ஆளுநரின் துணையுடன் அரசாங்கத்தை அமைக்கலாம்.

ஆனால், அந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதோ, அந்த அரசுக்கு நல்ல பெயர் வாங்கித்தரவோ பா.ஜ.க-வால் முடியாது. அமித்ஷாவின் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளது. சரத்பவாரின் முதுகில் குத்திய ரத்தக்கறை அவரைவிட்டு அகலாது. எனவே, இது தவறான முன் உதாரணம். தமிழக காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க-வின் ஜனநாயக விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறது. இது ஏற்புடைய செயல் அல்ல. கொல்லைப்புறமாக ஒரு அதிகாரத்தைப் பெற முயல்வது மிகவும் கீழ்மையானது.

k.s.alagiri
k.s.alagiri

பொதுமக்களின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்க வேண்டுமே தவிர, ஒரு அரசியல் கட்சியை உடைத்து, அதுவும் ஒரு குடும்பத்துக்குள் நுழைந்து அதை உடைத்து அதன் மூலமாக அதிகாரத்தை அடைய பா.ஜ.க எடுத்துக்கொள்ளும் முயற்சியை இந்திய மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர். ஒரு நாகரிகமான சமூகம் இதை ஏற்றுக்கொள்ளாது" என்றார்.