Published:Updated:

`இடைத்தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டி!'- கடிதம் மூலம் அமித் ஷாவுக்குப் பட்டியலிட்ட சசிகலா புஷ்பா

தமிழகத்தில் நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிட வேண்டும். அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ஜ.க வெளியே வர வேண்டும் என அக்கட்சித் தலைவரான அமித் ஷாவுக்கு சசிகலா புஷ்பா எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Sasikala Pushpa MP
Sasikala Pushpa MP

மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் அக்டோபர் 21-ம் தேதி தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் நேற்று (21-ம் தேதி) அறிவித்தது. அதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் பணிகள் தமிழகத்தில் விறுவிறுப்படைந்துள்ளன.

`புதிய கல்விக் கொள்கை குறித்து ஸ்டாலின், சூர்யாவுடன் நேரடியாக விவாதிக்கத் தயார்!' - சசிகலா புஷ்பா

தி.மு.க கூட்டணியில் நாங்குநேரி மற்றும் பாண்டிச்சேரி தொகுதியில் காங்கிரஸும் விக்கிரவாண்டியில் தி.மு.க-வும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆளும் அ.தி.மு.க மற்றும் தி.மு.க சார்பாக இந்தத் தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறி நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா தனியாக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். இதை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்குக் கடிதமாகவும் எழுதியுள்ளார்.

Sasikala Pushpa MP
Sasikala Pushpa MP

சசிகலா புஷ்பா எழுதியுள்ள கடிதத்தில், ``தமிழகத்தில் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் தொடர்ந்து குறிப்பிட்ட சமூகங்களை புறக்கணிக்கின்றன. ஆனால், பிரதமர் மோடியும் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Vikatan

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ’பிரிக்ஸ்’ அமைப்பின் ஆசியப் பிராந்தியத் தலைவர் மற்றும் முக்கியத்துவம் மிகுந்த டி.ஆர்.டி.ஓ தலைவர் போன்ற பதவிகளில் மதம் கடந்து திறமைக்கு மரியாதை கொடுக்கும் வகையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை மத்திய அரசு நியமித்திருக்கிறது.

இரு சிறுபான்மை சமூகத்தவர்களை மத்திய அரசு, உயர்ந்த பொறுப்புகளில் நியமித்துக் கௌரவப்படுத்தி இருக்கிறது. இது மதம் கடந்து திறமைக்குக் கொடுத்திருக்கும் மரியாதை.
சசிகலா புஷ்பா எம்.பி

தமிழகத்தின் 60 ஆண்டுக்கால வரலாற்றில் தற்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வின் தற்போதைய ஆட்சியில்தான் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் அமைச்சரவையில் இடமின்றி புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சி சார்ந்த பதவிகளிலும், மாநிலங்களவை உறுப்பினர் தேர்வுகளிலும் அந்தச் சமூகத்தினருக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.

அதனால் மத்திய அரசும் பாரதிய ஜனதா கட்சியும் செய்திருக்கும் உதவிகளைக் கண்டு, குறிப்பிட்ட சில சமுதாயத்தினர் அவர்களின் பின்னால் அணிதிரளுவதற்கான வாய்ப்பு தற்போது உருவாகியிருக்கிறது. அதனால், நாங்குநேரி இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் அந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை வேட்பாளரை நிறுத்தினால், அ.தி.மு.க-வின் செயல்பாடுகள் மூலமாகப் பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவைச் சரி செய்துவிட முடியும்'' எனத் தெரிவித்துள்ளார்.

`வைகோ பதவிப் பிரமாணம் ஏற்பதை அனுமதிக்கக் கூடாது!'  - வெங்கைய நாயுடுவுக்கு சசிகலா புஷ்பா கடிதம்
அ.தி.மு.க-வின் செயல்பாடுகள் மூலமாகப் பாரதிய ஜனதா கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. தனித்துப் போட்டியிடுவதன் மூலம் அந்தப் பின்னடைவைச் சரி செய்துவிட முடியும்.
சசிகலா புஷ்பா எம்.பி

``தமிழகத்தில் தாங்கள் இரண்டு திராவிட கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்டதால் வெறுப்பில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள், பா.ஜ.க-வுக்கு பேராதரவு கொடுத்து, இரு திராவிடக் கட்சிகளுக்கும் பாடம் புகட்டுவார்கள். அதே போல், விக்கிரவாண்டி தொகுதியிலும் அப்பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும்'' எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

``நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டால், திராவிடக் கட்சிகள் மீது அதிருப்தியில் இருக்கும் குறிப்பிட்ட சில சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள், தேன்கூட்டில் தேனீக்கள் கூடுவது போல் பாரதிய ஜனதாவின் பின்னால் அணிதிரளுவார்கள். அத்துடன், உண்மையான சமூகநீதி பா.ஜ.க-வில்தான் இருக்கிறது என்கிற நம்பிக்கை அனைத்து சமுதாயங்களையும் சேர்ந்த மக்கள் மனதில் ஏற்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.

Sasikala Pushpa MP
Sasikala Pushpa MP

மேலும் அவர் குறிப்பிடுகையில், ``இப்படிச் செய்தால் அது போலித் திராவிடக் கட்சிகளுக்குச் சாவு மணி அடிக்கும். வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். ’ஒரு வித்தகனுக்குப் பின்னால் ஓராயிரம் வித்தகர்கள்’ என்கிற பழமொழிக்கு ஏற்ற வகையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்'' என அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.