Published:Updated:

`அமைச்சர்களின் சொத்துப் பட்டியல்; ஆளுங்கட்சிக்கு செக்?!‍'- சட்டசபைத் தேர்தலைக் குறிவைக்கும் பா.ஜ.க

ஓ.பன்னீர்செல்வம், மோடி, எடப்பாடி பழனிசாமி
News
ஓ.பன்னீர்செல்வம், மோடி, எடப்பாடி பழனிசாமி ( விகடன் )

அ.தி.மு.க- பா.ஜ.க நடுவே வார்த்தை மோதல்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அத்தோடு நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா போட்டிகளும் இருவருக்குள் எழத்தொடங்கியுள்ளன.

அ.தி.மு.க - பா.ஜ.க நடுவே நாளுக்கு நாள் கருத்து மோதல்கள் முற்றத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசிய பேச்சால் அ.தி.மு.கவினர் திகைத்துப்போய் நிற்கிறார்கள். இந்தநிலையில் ஆளுங்கட்சியினருக்கு செக் வைக்கும் விதமாக அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் எடுக்கத் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். அத்தோடு சட்டமன்றத் தேர்தலுக்குப் போட்டியிடுவோர் தங்களது விருப்ப மனுக்களை 31-க்குள் அளிக்குமாறு பா.ஜ.கவின் டெல்லி தலைமை அறிவுறுத்தியிருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடி - எடப்பாடி
மோடி - எடப்பாடி

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் அவகாசம் உள்ள நிலையில் பா.ஜ.கவின் சார்பில், வரும் 31-ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை அளிக்குமாறு அக்கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு பா.ஜ.க தரப்பில் இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளதாகச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் கமலாய வட்டாரத்தினர். ஆனால், இது அ.தி.மு.க அரசுக்கு மறைமுக எச்சரிக்கை என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள். இவர்கள் எச்சரிக்கை விடுக்க அப்படி என்னதான் நடக்கிறது அவர்கள் கூட்டணிக்குள் என்று விசாரிக்கத் தொடங்கினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், பா.ஜ.க-வோடு நெருக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறது தமிழக அரசு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இணைந்தது. இன்று வரையிலும் கூட்டணியைத் தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்ந்தது. கூட்டணி தொடர்ந்தாலும், மத்திய பா.ஜ.க அரசு எடுக்கும் சில நடவடிக்கைகள், அ.தி.மு.க-வுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக அன்வர்ராஜா உள்ளிட்ட அ.தி.மு.க சீனியர்கள் பலரும் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.

மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா
மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடைச் சட்டம், குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றை அ.தி.மு.க ஆதரித்தது. இதற்கு, சிறுபான்மையின மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் காரணமாக, `கூட்டணியில், பா.ஜ.க இருந்தாலும், இடைத்தேர்தல் பிரசாரத்துக்குக்கூட அ.தி.மு.க-வினர் பா.ஜ.க-வினரை அழைக்கவில்லை' எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும், இரு கட்சிகளின் தொண்டர்களும் தனித்தனியே பிரசாரம் செய்தனர். சமீபத்தில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், பிரசாரம் செய்தபோது, `பா.ஜ.க கூட்டணியில் நாங்கள் இல்லை' எனச் சொல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. அடுத்ததாக முன்னாள் எம்.பி அன்வர்ராஜா, `சிஏஏவை ஆதரித்ததால்தான் இஸ்லாமியர்கள் அ.தி.மு.க வுக்கு வாக்களிக்கவில்லை’ என்று வெளிப்படையாகவே பேசினார். மேலும், சில ஊடகங்களில் மறைமுகமாக மத்திய அரசை விமர்சனம் செய்தும் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கூட்டணியில் இருப்பதையே கூறுவதற்குக் கூச்சப்படுவோருடன், நாம் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்' என்ற கேள்வியை பா.ஜ.க தரப்பில் எழுப்பியதோடு, பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், ``அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட தொகுதிகள் குறைவுதான். ஆனால், மனவருத்தங்கள் நிறைய இருக்கின்றன” என்று அ.தி.மு.க மீது வருத்தங்கள் இருப்பதை வெளிக்கொண்டு வந்தார். அத்தோடு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் ``நாங்கள் தனித்துப் போட்டியிட்டிருந்தால் அதிக இடங்களைப் பிடித்திருப்போம்" என்று அ.தி.மு.க அரசு உள்ளடி வேலைகளைச் செய்துவிட்டது என்று அ.தி.மு.க அரசின் குறைகளை விமர்சனம் செய்து பேசினார். அதற்குப் பொன்.ராதாகிருஷ்ணனைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்தார் ஜெயக்குமார்.

ஓ.பன்னீர்செல்வம், மோடி, எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், மோடி, எடப்பாடி பழனிசாமி
விகடன்

இந்த நிலையில், ``எனக்கு ஜெயக்குமார் சர்ட்டிஃபிகேட் தர வேண்டிய அவசியம் இல்லை. என் செயல்பாட்டை ஜெயலலிதா இரண்டு முறை பாராட்டி இருக்கிறார். கூட்டணி தர்மத்தால் நான் அமைதியாக இருக்கிறேன். முதல்வர், துணை முதல்வர் மீதும் நல்ல மரியாதை வைத்திருக்கிறோம். இப்போது நாடு முழுவதும் கைது செய்யப்படும் பயங்கரவாதிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகள் பற்றி ஏற்கெனவே நான் சொன்னேன். இப்போது கூட்டணி தர்மம் என்பதால் பேசாமல் இருக்கிறேன்" எனத் தடாலடியாகப் பேசினார். இதுபோன்று வார்த்தை மோதல்கள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா போட்டிகளும் இருவருக்குள் எழத்தொடங்கியுள்ளன.

பா.ஜ.க கூட்டணியில் இருப்பதால் ஆளும் கட்சியினர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் செல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த முறை டெல்லி சென்ற முதல்வரிடம் பா.ஜ.க தலைமை, `உங்களது அமைச்சர்களைப் பார்த்துப் பேசச்சொல்லுங்கள்' என்று பேசியதோடு அவர்களது எதிர்ப்பைப் பதிவு செய்து அனுப்பியிருக்கிறார்கள். இன்று வரையில் வார்த்தை மோதல்கள் நின்றபாடில்லை. இதனால், அ.தி.மு.க அரசுக்குப் பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர்களின் சொத்து விவரங்களையும், எடுக்கத் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். அத்தோடு இந்த மாதம் 31ம் தேதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது. இதன் பின்னணியில் டெல்லி வட்டாரம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பா.ஜ.க அலுவலகம்
பா.ஜ.க அலுவலகம்

என்ன நடக்கிறது என்று கமலாய வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ``இதில் எந்த அரசியலும் இல்லை. அ.தி.மு.க - பா.ஜ.கவினிடையே கருத்து மோதல்கள் இருப்பது உண்மைதான். ஆனால் ஆட்சியைக் கலைக்க எந்தவித முயற்சிகளும் நடக்கவில்லை. எங்களது கட்சி ஊரக உள்ளாட்சி பகுதிகளில், ரொம்ப வீக்காக இருக்கிறது. அதைப் பலப்படுத்தவேண்டும் என்பதன் நோக்கத்திற்காகத்தான், இப்போதே வேலையைத் தொடங்கியிருக்கிறோம். இப்போதே உழைக்கத் தொடங்கினால் வெற்றியைப் பெறமுடியும். அதற்காகத்தான் இப்போதே வேலை தொடங்கியிருக்கிறோம்" என்று முடித்துக்கொண்டார்கள்.