Published:Updated:

"இது ஆரம்பம்தான்" - கோவையில் சஸ்பென்ஸ் வைத்த அண்ணாமலை!

அண்ணாமலை
அண்ணாமலை

பா.ஜ.க மாநிலத் தலைவராக பொறுப்பேற்கவிருக்கும் அண்ணாமலை, அதற்காக கோவை - சென்னை யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார்.

பா.ஜ.க மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன் கடந்த வாரம் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பா.ஜ.க மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், அண்ணாமலை நாளை மறுநாள் சென்னை கமலாலயத்தில் பொறுப்பேற்கவிருக்கிறார்.

பாஜக அதைச் செய்யாமல் ஓயாது - அண்ணாமலை|உடம்ப பார்த்துக்கோங்க - சன்னி லியோனின் அட்வைஸ்|#Quicklook

இதற்காக கோவை முதல் சென்னை வரை சாலையில் யாத்திரையாக இரண்டு நாள்கள் பயணம் மேற்கொள்கிறார். கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் பா.ஜ.க-வினருடன் சேர்ந்து அண்ணாமலை இன்று காலை சாமி தரிசனம் செய்து, யாத்திரையைத் தொடங்கினார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ``சென்னை செல்லும் வழியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களைச் சந்திக்கவிருக்கிறேன். தமிழகத்தில், பா.ஜ.க வளர்ச்சிக்காகச் சிறப்பாகச் செயல்படுவேன். அதற்காகப் பல்வேறு திட்டங்கள் உள்ளன. அனுபவமும் இளமையும் சேர்ந்து கூட்டு முயற்சியாக பா.ஜ.க-வை இங்கு மிகப்பெரிய கட்சியாக வளர்த்துவோம்.

அண்ணாமலை
அண்ணாமலை

வயது என்பது முக்கியம் கிடையாது. பா.ஜ.க-வில் அனுபவம் இருப்பவர்களுக்குப் பதவி கொடுப்பார்கள். ஒருபக்கம் தமிழகத்தைச் சேர்ந்த அனுபவமிக்கவர்கள் பா.ஜ.க-வில் தேசிய அளவிலான பொறுப்பில் உள்ளனர்.

மறுபுறம் இளைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகிறது. மற்ற கட்சிகளில் ஒரு தலைவர், ஒரு குடும்பம் என்று இருப்பார்கள், பா.ஜ.க-வில் அப்படி இல்லாமல், மாநிலத் தலைவர் என்ற பொறுப்பை அனைவரையும் ஒன்றாக இணைத்துச் செல்லப் பயன்படுத்துவோம். கூட்டு முயற்சியாக கட்சி வழிநடத்தப்படும். பா.ஜ.க தனிமனிதக் கட்சி இல்லை.

அண்ணாமலைக்கு வரவேற்பு.
அண்ணாமலைக்கு வரவேற்பு.

உங்களது எல்லாக் கேள்விகளுக்கும் 16-ம் தேதி பதில் அளிக்கிறேன்” என்றார். பிறகு கட்சியினரிடம் பேசிய அண்ணாமலை, ``உங்களுக்கு சேவை செய்ய சென்னை செல்கிறேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க முக்கிய மாற்று சக்தியாக இருக்கும். அதிக எம்.பி-க்கள் இங்கிருந்து செல்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது ஆரம்பம்தான். கடுமையாக உழைத்து கட்சியை வளர்ப்போம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு