Published:Updated:

`கட்சியிலிருந்து திடீரென நீக்கப்பட்ட நிர்வாகிகள்!' - தஞ்சை பி.ஜே.பி சலசலப்பு

அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியிடும் பகுதிகளில் பி.ஜே.பி தலைமையின் அனுமதியின்றி அ.தி.மு.கவினரை எதிர்த்து போட்டியிடுகின்றனர். இதை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மூலம் அ.தி.மு.கவினர் பி.ஜே.பியின் தலைமைக்குக் கொண்டு சென்றனர்.

கருப்பு.முருகானந்தம்
கருப்பு.முருகானந்தம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரங்கள் அனல் பறக்க நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி பி.ஜேயின் மாவட்ட நிர்வாகிகள் சிலர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அக்கட்சியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

`நான் ஆல்ரெடி பி.ஜே.பி-யில் சேர்ந்திட்டேன்; நானாக எதையும் சொல்லக் கூடாது!’- ஜீவஜோதி #Video

பி.ஜே.பியின் பொதுச்செயலாளரான கருப்பு.முருகானந்தம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதுடன், கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்ட காரணத்தால் தஞ்சை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் நீலகண்டன், திருவோணம் ஒன்றியச் செயலாளர் செல்வம், மதுக்கூர் இளைஞரணித் தலைவர் மணிகண்டன், திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியச் செயலாளர் பூங்கொடி செல்வம், வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் காளிதாஸ் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து பி.ஜே.பி வட்டாரத்தில் விசாரித்தோம். ``கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளவர்கள் எங்க கூட்டணியில் உள்ள அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியிடும் பகுதிகளில் பி.ஜே.பியினர் அனுமதியின்றி அவர்களை எதிர்த்து போட்டியிடுகின்றனர். இதை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மூலம் அ.தி.மு.கவினர் பி.ஜே.பியின் தலைமைக்குக் கொண்டு சென்றனர். `எல்லோரும் வாபஸ் வாங்க வேண்டும் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுபவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்' என பி.ஜே.பியின் மாநில தலைமையிலிருந்து உத்தரவிட்டனர். ஆனால் நிர்வாகிகள் யாரும் கேட்கவில்லை. இதனால் கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.

 வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

இதேபோல் தி.மு.க கூட்டணியிலும் சீட் ஒதுக்குவதில் ஏற்பட்ட பிரச்னையால் பல இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள் தி.மு.கவை எதிர்த்துப் போட்டியிடுகின்றனர். இதை மற்ற கட்சிகளின் தலைமையும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், பி.ஜே.பியில் தேர்தலில் போட்டியிடும் நிர்வாகிகளை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளனர். தற்போது மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களை பி.ஜே.பியில் சேர்ப்பதற்கான பணிகள் சத்தமில்லாமல் நடைபெற்றுகொண்டிருக்கின்றன.

தி.மு.க உள்ளிட்ட கட்சிகளில் விரக்தியோடு இருக்கும் நிர்வாகிகள் சிலரை பி.ஜே.பிக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அவர்களும் பி.ஜே.பிக்கு வருவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். இப்படிதான் தஞ்சை தி.மு.கவின் மேற்கு ஒன்றியச் செயலாளர் முரளிதரன் பி.ஜே.பிக்குக் கொண்டு வரப்பட்டார்.

`வேட்புமனுக்கள் நிராகரிப்பு; மற்ற கட்சிகள் வாபஸ்!’- அ.தி.மு.கவால் கலங்கும் தஞ்சை தி.மு.க

இன்னும் பல பேருடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. புதிதாக கட்சிக்கு வருபவர்களுக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்படும் என்றும் உத்தரவாதம் கொடுக்கப்படுகிறது. அதனாலும் கட்சியில் செயல்படாமலும், கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்களைக் கட்சியிலிருந்து நீக்கத் தொடங்கியுள்ளார்கள்'' என்றனர்.