தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், கோவில்பட்டி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சி பகுதிகளில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை. அப்போது பேசிய அவர், ``பா.ஜ.க ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் `முத்ரா திட்டம்’, `ஜல்சக்தி குடிநீர் திட்டம்’ ஆகியவை மூலம் தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர. கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மக்களுக்குத் தந்துள்ளது.

ஆனால், முந்தைய காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கென எந்த சிறப்புத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அதேபோல, தமிழகத்தில் தி.மு.க-வின் கடந்த 8 மாத ஆட்சியில் எல்லாவற்றிலும் கமிஷன்தான். தி.மு.க எப்போது தமிழகத்தை விட்டுப் போகிறதோ அன்றுதான் நல்லாட்சி பிறக்கும். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தி.மு.க கொடுத்த 517 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதில், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முக்கியமாகச் சொன்னார் முதல்வர் ஸ்டாலின். நேரடியாகப் பிரசாரம் செய்தால் நகைக்கடன் தள்ளுபடி குறித்து மக்கள் கேட்பார்கள் என்பதால் தான் அவர், காணொலி காட்சி மூலமாக பிரசாரம் செய்கிறார். ஏழை எளிய மக்கள் நீட் தேர்வினால் அதிக எண்ணிக்கையில் பயன்பெற்றுள்ளனர். தமிழகம் தேசிய பார்வையை நோக்கி பயணிக்கிறது.

தேசியம் என்றால் அது பா.ஜ.க தான். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தான் தமிழக மீனவர்கள் இலங்கை அரசினால் கைது செய்யப்படுகின்றனர். இதில் சதி உள்ளது. தி.மு.க ஒரு நாடக கம்பெனி. அதனை உடைப்போம் உள்ளாட்சியில் விழும் வாக்குகள் பிரதமர் மோடி நல்லாட்சிக்கு விழும் வாக்குகள்" என்றார்.