திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள்மீது தாக்குதல்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. அதையடுத்து தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்க்குகளில் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவங்களில் தொடர்புடையவர்களை போலீஸார் கைதுசெய்து வருகின்றனர்.

அதில் திண்டுக்கல் குடைபாறைபட்டியைச் சேர்ந்த பா.ஜ.க கிழக்கு மாவட்ட மாநகர் மேற்கு மண்டலத் தலைவரான செந்தில் பால்ராஜூக்குச் சொந்தமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வரும் செந்தில் பால்ராஜ் திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் குடைப்பாறைபட்டியில் அமைந்துள்ள தனக்குச் சொந்தமான இடத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தார். அந்த வாகனங்களை செப்டம்பர் 24-ம் தேதி கார் செட்டுடன் சேர்த்து மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திவிட்டுத் தப்பினர்.
இந்த நிலையில், சம்பவம் நடந்த இடத்தினை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று நேரில் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``பா.ஜ.க மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. திண்டுக்கல்லில் நடந்த தீ வைப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஒரு நபரை போலீஸார் கைதுசெய்திருப்பதாகக் கூறியிருக்கின்றனர்.

இதில் தொடர்புடைய மற்ற நபர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். பா.ஜ.க-வினரின் தொடர் போராட்டங்கள் காரணமாக ஆங்காங்கே நடைபெற்ற தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன" என்றார்.