டெல்லி பா.ஜ.க-வுக்குள் உட்கட்சிப்பூசல் அதிகரித்துவருவதாகக் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லி காந்தி நகர் சட்டமன்ற உறுப்பினர் அனில் பாஜ்பாய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டத் தலைவர் ஷஹ்தரா ராம் கிஷோர் ஷர்மா, டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக வெளியான தகவலில், "கிழக்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் கம்பீருக்கு எதிராக, காந்தி நகர் சட்டமன்ற உறுப்பினர் அனில் பாஜ்பாய் ஊடகங்களுக்குத் தவறான அறிக்கைகளை வெளியிட்டுவருகிறார்.
கடந்த மே 25 அன்று டெல்லி காந்தி நகர் சட்டமன்ற உறுப்பினர் அனில் பாஜ்பாய், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் குப்தா ஆகிய இருவர் கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான ஐபிஎல் போட்டியைக் காணச் சென்றுள்ளனர். கவுதம் கம்பீர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் ஆலோசகராக இருக்கிறார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அப்போது அவர்கள் இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் கம்பீர் தங்கியிருந்த அதே ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து அவரைச் சந்திக்கச் சென்றுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் கம்பீர் அவர்கள் இருவரையும் தூரமாக இருந்து சந்தித்ததாகவும், அவர் எப்போதும் தூரத்தில்தான் சந்திப்பார் என்றும், ஒருவேளை அவர்களை அருகில் சந்தித்துவிட்டால் அந்த சந்திப்புக்குப் பிறகு சானிடைசரைப் பயன்படுத்துவார் என டெல்லி காந்தி நகர் சட்டமன்ற உறுப்பினர் அனில் பாஜ்பாய் ஊடகங்களிடம் கூறியதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் கம்பீரின் உதவியாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் கம்பீர் ஐபிஎல் போட்டிகளுக்கான தனிமைப்படுத்துதலில் இருந்ததால், அவர் டெல்லி காந்தி நகர் சட்டமன்ற உறுப்பினர் அனில் பாஜ்பாய் மற்றும் முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் குப்தா இருவரையும் தொலைவிலிருந்து சந்தித்தார் எனக் கூறியுள்ளார். எனவே கிழக்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் கம்பீருக்கு எதிராக ஊடகங்களுக்குத் தவறான அறிக்கைகளை வழங்கிவரும் அனில் பாஜ்பாய் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கு பதிலளித்த டெல்லி காந்தி நகர் சட்டமன்ற உறுப்பினர் அனில் பாஜ்பாய்," நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் கம்பீருக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் இதுவரை நான் பேசியதில்லை. அவர்மீது எனக்கு எந்தத் தீய எண்ணமும் இல்லை. நான் ஒருபோதும் கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதில்லை. ஆனால், ஷஹ்தரா ராம் கிஷோர் ஷர்மாதான் இப்படி ஒரு கடிதம் எழுதி, கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்'' என விளக்கமளித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கிழக்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் கம்பீர், "இது போன்ற விஷயங்கள் நீண்ட காலமாக நடந்துவருகின்றன. இந்த விவகாரம் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மாநிலத் தலைமை முடிவு செய்யட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.