Published:Updated:

ஆபரேஷன் லோட்டஸ்... பா.ஜ.க பிடியில் பா.ஜ.க ஆளாத மாநில முதல்வர்கள்!

ஹேமந்த் சோரன்
பிரீமியம் ஸ்டோரி
ஹேமந்த் சோரன்

ஆரம்பகாலம் தொட்டே பா.ஜ.க-வுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்துவருகிறது, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ்.

ஆபரேஷன் லோட்டஸ்... பா.ஜ.க பிடியில் பா.ஜ.க ஆளாத மாநில முதல்வர்கள்!

ஆரம்பகாலம் தொட்டே பா.ஜ.க-வுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்துவருகிறது, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ்.

Published:Updated:
ஹேமந்த் சோரன்
பிரீமியம் ஸ்டோரி
ஹேமந்த் சோரன்

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், மகாராஷ்டிராவில் சிவசேனா, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், தமிழ்நாட்டில் அ.தி.மு.க என்று ‘பகையாளிக் குடியை உறவாடிக் கெடுத்த’ பா.ஜ.க., எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் விசாரணை அமைப்புகள் மற்றும் ஆளுநரை வைத்து குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இந்த நடவடிக்கைக்கு, `ஆபரேஷன் லோட்டஸ்’ என்று பெயர்வைத்து கேலி செய்திருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். “எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலமா... ஏதாச்சும் ஊழல் நடந்திருக்கா, நடக்கலையா... அப்ப நடந்த மாதிரி புகார் கொடுக்க ஏதாச்சும் முகாந்திரம் இருக்குதான்னு பாருங்க... அதைப் பத்தி ஆளுநருக்கு ஒரு மனு கொடுங்க... மற்றதை அமலாக்கத்துறை, சி.பி.ஐ பாத்துக்கும்” என்பதே `ஆபரேஷன் லோட்டஸ்’-ஸுக்கு கெஜ்ரிவால் கொடுக்கும் விளக்கம்.

அப்படி மூன்று மாநிலங்களில் நடந்த ‘ஆபரேஷன்’கள் இங்கே...

ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன்

குவாரி சுரங்க ஊழல்... ஜார்க்கண்ட் முதல்வருக்கு செக்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு, முதல்வர் ஹேமந்த் சோரன் தனது பதவியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக சுரங்க ஒதுக்கீடு உரிமையைப் பெற்றார் என எதிர்க் கட்சியான பா.ஜ.க ஊழல் குற்றச்சாட்டை எழுப்பியது. தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக முதல்வர் செயல்பட்டிருப்பதால், அவரைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று மாநில ஆளுநர் ரமேஷ் பெய்ஸியிடம் மனு அளித்தது. இந்த மனுவைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைத்தார் ஆளுநர். இந்த நிலையில், ஆகஸ்ட் 25-ம் தேதி முதல்வர் தகுதிநீக்கம் தொடர்பான முக்கிய முடிவை சீலிடப்பட்ட உறைக்குள்வைத்து தலைமைத் தேர்தல் ஆணையம் ஜார்க்கண்ட் ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறது. அதில், ஹேமந்த் சோரனின் பதவியைப் பறிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருப்பதாகத் தகவல் கசிய, ஜார்க்கண்ட் ஆட்சி ஆட்டம்கண்டிருக்கிறது.

தொடர்ந்து குழப்பம் நீடித்துவரும் நிலையில், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும்விதமாக, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் குதிரைப் பேரம் நடத்தத் தொடங்கியிருக்கிறது பா.ஜ.க. சுதாரித்துக்கொண்ட முதல்வர் ஹேமந்த் சோரன், பா.ஜ.க-வின் பண வலையிலிருந்து பாதுகாப்ப தற்காக 43 எம்.எல்.ஏ-க்களைத் தனி விமானத்தில் சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள குந்தி பகுதி ரிசார்ட்டுக்கு கொண்டுபோய்விட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ``முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஒதுக்கப்பட்ட குவாரி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டபோதிலும் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க தீவிரமான சதி வேலைகளில் ஈடுபட்டுவருகிறது” என பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறது. ``அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும். ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் முயற்சியில் ஜனநாயக விரோத சக்திகள் இறங்கியுள்ளன. மக்கள் ஆதரவோடு இதை எதிர்த்து எனது கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும்வரை போராடுவேன்” என்று சூளுரைத்திருக்கிறார் முதல்வர் ஹேமந்த் சோரன்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

எஸ்.எஸ்.சி தேர்வு, நிலக்கரி ஊழல்... மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு செக்!

ஆரம்பகாலம் தொட்டே பா.ஜ.க-வுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்துவருகிறது, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ். ஏற்கெனவே சாரதா சிட் ஃபண்ட்ஸ் ஊழலில் முதல்வர் மம்தாவுக்கு எதிராகக் கிடுக்குப்பிடி போட்டுவந்த பா.ஜ.க., தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள்மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி ரெய்டு நடத்திவருகிறது. கடந்த மாதம் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் முறைகேடு செய்ததாக மேற்கு வங்கத்தின் வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி, கல்வித்துறை இணை அமைச்சர் பரேஷ் அதிகாரி, எம்.எல்.ஏ மாணிக் பட்டாச்சார்யா உள்ளிட்ட பலரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில், பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் வீட்டில் 20 கோடி ரூபாய் பணம் சிக்க, அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அதிரடியாகக் கைதுசெய்தது அமலாக்கத்துறை.

கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி கால்நடைகள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிர்பூம் மாவட்டத் தலைவர் அனுப்ரதா மொண்டலைக் கைதுசெய்தது சி.பி.ஐ. இந்த நிலையில், நிலக்கரி ஊழல் வழக்கு சுமத்தப்பட்டிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மம்தா பானர்ஜியின் உறவினருமான எம்.பி அபிஷேக் பானர்ஜியை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருக்கிறது சி.பி.ஐ.

இந்தத் தொடர் நெருக்கடிகள் குறித்து கடுமையாகப் பேசியிருக்கும் மம்தா பானர்ஜி, ``எனக்கு எதிராகவும், கொல்கத்தா மேயர், மாநில அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம், பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி போன்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் அவதூறான பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய அரசுகளை அகற்ற, பா.ஜ.க முறைகேடான வழியில் சம்பாதித்த பணத்துடன், அமலாக்க இயக்குநரகம், சி.பி.ஐ போன்றவற்றையும் தவறாகப் பயன்படுத்துகிறது. பா.ஜ.க-வால் முடிந்தால் என்னைக் கைது செய்யட்டுமே பார்க்கலாம்” என்று சவால் விடுத்திருக்கிறார்.

 அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

மதுபானக் கொள்கை ஊழல்... டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு செக்!

பா.ஜ.க-வுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக வட மாநிலங்களில் வளர்ந்துவருகிறது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. இந்தியாவின் பெரிய பெரிய மாநிலங்களையே கைக்குள் வைத்திருக்கும் தங்களுக்கு, மிகச் சிறிய... அதுவும் தலைநகரான டெல்லியை வெல்ல முடியாதது பா.ஜ.க-வை உறுத்திக்கொண்டே யிருக்கும் விஷயம். இந்த நிலையில், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், குஜராத் என அடுத்தடுத்து ஆம் ஆத்மி கால்பதிக்க, அதிர்ச்சிக்கும் ஆத்திரத்துக் கும் உள்ளான பா.ஜ.க., தனது கடைசி அஸ்திரத்தை ஆம் ஆத்மி மீது வீசியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது, ஆம் ஆத்மியின் புதிய மது விற்பனைக் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா குற்றம்சாட்ட, ஆம் ஆத்மி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மூத்த அதிகாரிகளுக்குத் தொடர்புடைய 31 இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தியது. இந்தக் குற்றச்சாட்டில் 15 பேர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்த சி.பி.ஐ., அதில் முதல் நபராக மணீஷ் சிசோடியாவைச் சேர்த்தது. தொடர்ந்து, மணீஷ் சிசோடியாவின் பேங்க் லாக்கரிலும் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி சோதனை நடத்தி வெறும் கையுடன் திரும்பியது.

இது தொடர்பாகப் பேசிய மணீஷ் சிசோடியா, ``தங்கள் கட்சியில் இணைந் தால் என்மீதுள்ள வழக்குகள் ரத்துசெய்யப் படும் என பா.ஜ.க தனிப்பட்ட முறையில் என்னை அழைத்துப் பேரம் பேசியது” எனக் கூறினார். இந்த நிலையில், ``எதிர்க் கட்சிகள் ஆளும் மாநில அரசைக் கவிழ்க்க பா.ஜ.க இதுவரை ரூ.6,300 கோடி செலவிட் டிருக்கிறது. `ஆபரேஷன் லோட்டஸின்’ ஒரு பகுதியாக, ஆம் ஆத்மியை உடைக்க ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் தலா 20 கோடி ரூபாய் வழங்க பா.ஜ.க முயல்கிறது” என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஒருபக்கம் ஆம் ஆத்மி தலைவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பா.ஜ.க தலைவர்கள், ஆளுநருக்குக் கடிதம் அனுப்பி யிருக்கின்றனர். மறுபக்கம், `டெல்லி ஆளுநர் சக்சேனா, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இருந்தபோது சுமார் 1,400 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டி, ஆளுநரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்’ என எதிர் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறது ஆம் ஆத்மி.

இதற்கிடையே ஆபரேஷன் லோட்டஸ் தோல்வி என்று நிரூபிக்கும் வகையில் தானே முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் கெஜ்ரிவால். அதே சமயம், நான்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காதது கட்சிக்குள் சலசலப்பைக் கிளப்பியுள்ளது.

ஆபரேஷன் சக்சஸ் ஆகுமா... ஆப்பசைத்த குரங்குக் கதையாகுமா என்பது 2024 தேர்தலில் தெரிந்துவிடும்!