Election bannerElection banner
Published:Updated:

`இலங்கை, நேபாளத்திலும் பா.ஜ.க ஆட்சி; அமித் ஷா திட்டம்' - திரிபுரா முதல்வர் பேச்சால் சர்ச்சை

பிப்லப் குமார் தேப்
பிப்லப் குமார் தேப் ( the north east today )

அண்டை நாடுகளிலும் பா.ஜ.க ஆட்சியமைப்பது குறித்த யோசனையை அமித் ஷா பகிர்ந்துகொண்டதாக திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

``நேபாளம், இலங்கையில் பா.ஜ.க அரசுகளை நிறுவ அமித் ஷா திட்டமிட்டிருக்கிறார். கடந்த சனிக்கிழமையன்று திரிபுராவுக்கு வந்த அமித் ஷா, ​​ரவீந்திர சதாபர்ஷிகி பவனில் (Rabindra Satabarshiki Bhavan) நடந்த கட்சிக் கூட்டத்தில், `இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் வென்ற பிறகு கட்சியை நிறுவி, அண்டை நாடுகளில் ஆட்சியமைக்க பா.ஜ.க விரும்புகிறது’ என்று அமித் ஷா கூறியதாக திரிபுரா முதல்வர் பிப்லப் தெரிவித்திருக்கிறார்.

அமித் ஷா வின் இந்தத் திட்டம் குறித்து பேசிய திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ், ``மாநில விருந்தினர் மாளிகையில் அமித் ஷாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது, `இந்தியாவின் பல மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியமைத்திருக்கிறது’ என்று கட்சியின் வடகிழக்கு மண்டலச் செயலாளர் அஜய் ஜாம்வால் (Ajay Jamwal) கூறினார். அதற்கு பதிலளித்த அமித் ஷா, `இப்போது இலங்கையும் நேபாளமும் மீதமிருக்கின்றன. இலங்கையிலும் நேபாளத்திலும் கட்சியை விரிவுபடுத்தி, ஆட்சியமைக்க வேண்டும்’ என்று கூறியதாக பிப்லப் தேவ் தெரிவித்திருக்கிறார்.

அமித் ஷா
அமித் ஷா

மேலும், பா.ஜ.க-வில் அமித் ஷாவின் தலைமையைப் பாராட்டிய தேவ், உலகளாவிய கட்சி என்று சொல்லப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை உடைப்பதன் மூலம், பா.ஜ.க உலகின் மிகப்பெரிய கட்சியாக மாறிவிட்டது. இதற்கு அமித் ஷாவின் தலைமையே காரணம் என்றார்.

தொடர்ந்து பேசிய திரிபுரா முதல்வர்,``கேரளாவில், ஆட்சியைப் பிடிப்பதற்கும், தற்போதைய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும் பா.ஜ.க பணியாற்றிவருகிறது. இதேபோல், வரவிருக்கும் தேர்தல்களில் மேற்குவங்க மக்கள், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு விடை கொடுப்பார்கள். தமிழகம் உட்பட நாடு முழுவதும் தாமரை மலரும் என்றும் தெரிவித்தார்.

திரிபுரா முதலமைச்சரின் இந்தச் சர்ச்சைப் பேச்சு குறித்து பா.ஜ.க தலைமை தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

பிப்லப் குமார் தேப்
பிப்லப் குமார் தேப்

முதல்வரின் சர்ச்சைப் பேச்சு குறித்துப் பேசிய சி.பி.ஐ (எம்) கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ஜிதேந்திர சௌத்ரி (Jitendra Chaudhary), ``முதலமைச்சருக்கு அரசியலமைப்பு, ஜனநாயகம் குறித்து எந்தப் புரிதலும் இல்லை. தேவ் கூறிய அமித் ஷாவின் கருத்துகள், வெளிநாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியாவின் தலையீட்டைக் குறிக்கிறது.

இந்திய உள்துறை அமைச்சர் நேபாளத்துக்கு எதிரான அரச சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். திரிபுரா மாநிலத்தில் அரசியலமைப்புப் பதவியை வகிக்கும் ஒருவரால் அவரது இந்தப் பேச்சுக்கு சாட்சியங்களை வழங்க முடியவில்லை’’ என்று குற்றம் சாட்டினார். இருந்தாலும், `பிப்லப் தேப் பேசுவதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ.க உயர்மட்டத் தலைவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்’’ என்று ஜிதேந்திர சௌத்ரி கூறினார்.

திரிபுரா காங்கிரஸின் துணைத் தலைவர் தபஸ் டே (Tapas Dey), ``அமித் ஷாவின் இத்தகைய பேச்சுகள் ஏகாதிபத்தியத்தை நினைவூட்டுகின்றன. இதை எதிர்த்துப் பல ஆண்டுகளாக இந்தியா போராடிவருகிறது. நேபாளம், இலங்கையின் இறையாண்மை விவகாரங்களில் இந்தியா தலையிட முடியாது’’ என்று விமர்சித்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு