Published:Updated:

750 ஆன்லைன் பொதுக்கூட்டங்கள்; மோடி கடிதம்..10 கோடி பிரதிகள்! முதலாமாண்டு நிறைவைக் கொண்டாடும் பா.ஜ.க

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்லைன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டிருக்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க, 2019ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று கடந்த மே மாதம் 30ம் தேதி இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இந்தநிலையில், ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடையும் நிலையில், இதைக் கொண்டாட பல்வேறு திட்டங்களை அக்கட்சி கையில் எடுத்திருக்கிறது. இதுதொடர்பாக மாநிலக் கிளைகள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங், கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

பா.ஜ.க
பா.ஜ.க

அதில், பெரிய மாநிலங்களில் ஆன்லைன் வழியாக மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைந்தது இரண்டு பொதுக்கூட்டங்களும் சிறிய மாநிலங்களில் குறைந்தது ஒரு பொதுக்கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதில், ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் 750 பேருக்குக் குறையாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேபோல், இணையத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் 1,000-த்துக்கும் மேற்பட்ட கலந்துரையாடல் கூட்டங்களையும் நடத்த இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு நிறைவடைவதை ஒட்டி ஆன்லைன் வழியாக இதுபோன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய பா.ஜ.க தலைமை திட்டமிட்டிருக்கிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த இந்த ஓராண்டை வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டு என்று குறிப்பிட்டுள்ள பா.ஜ.க, சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது, முத்தலாக் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம் என சாதனைகளாக சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளது. மேலும், அயோத்தி வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பால் ராமர் கோயில் கட்ட வழி ஏற்பட்டுள்ளதையும் அந்தப் பட்டியலில் பா.ஜ.க தலைமை சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்தச் சாதனைகள் அனைத்தும் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை எனவும் பா.ஜ.க தலைமை குறிப்பிட்டிருக்கிறது.

உலகின் பிரபலமான அரசியல் தலைவர் என பிரதமர் மோடியை அடையாளப்படுத்தியுள்ள பா.ஜ.க தலைமை, பல தசாப்தங்களாக மக்கள் கனவுகண்டு கொண்டிருந்த திட்டங்களை இந்த முதல் ஆண்டில் மத்திய அரசு நிறைவேற்றியிருப்பதாகவும் கூறியிருக்கிறது. இந்தக் கூட்டங்கள் மே 30ம் தேதி தொடங்கி ஒருமாதக் காலத்துக்கு நடக்கும் என்று தெரிகிறது.

மோடி, ஜே.பி நட்டா, அமித் ஷா
மோடி, ஜே.பி நட்டா, அமித் ஷா

நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, ஃபேஸ்புக் லைவில் பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசின் சாதனைகள் மற்றும் கொரோனா வைரஸை எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் மோடி கைப்பட எழுதிய கடிதத்தை நாடு முழுவதும் சுமார் 10 கோடி இல்லங்களுக்குக் கொண்டுசேர்க்கவும் பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது.

அதேபோல், வாட்ஸ் அப் குரூப்கள் அளவில் பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் கொரோனாவுக்கு எதிராக எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள் பற்றி மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், நாடு முழுவதும் அமைச்சர்கள் உட்பட மூத்த நிர்வாகிகள் பலரும் 150க்கும் மேற்பட்ட செய்தியாளர் சந்திப்பில் பேச இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையான ‘சுயச்சார்பு இந்தியா!’

சுயசார்பு தொடர்பான நடவடிக்கைகளை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு முன்னெடுத்து வரும் நிலையில், அதுதொடர்பாக மக்களுக்குத் தகவல்களை முறையான சமூக இடைவெளியைப் பின்பற்றிக் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் அக்கட்சித் தலைமை தொண்டர்களை அறிவுறுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு