Published:Updated:

பெண்கள் படையைக் களமிறக்கும் பா.ஜ.க! - லிஸ்ட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்..?

பெண்கள் படையைக் களமிறக்கும் பா.ஜ.க!
பெண்கள் படையைக் களமிறக்கும் பா.ஜ.க!

10-க்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க பா.ஜ.க மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும், இதன் மூலம் தேர்தலில் பெண்களுக்கு பா.ஜ.க. அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்ற பிம்பத்தை உருவாக்கி தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டிருக்கிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனுக்களை விநியோகிக்கும் அதேவேளையில் அ.தி.மு.க., தி.மு.க தங்கள் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு மற்றும் எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவிருக்கின்றன என்பதையும் இறுதிசெய்யும் முனைப்பிலும் இருக்கின்றன. தி.மு.க-வைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்த கூட்டணியே தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என்பதும், புதிதாக எந்தக் கட்சிக்கும் கூட்டணியில் இடம் இல்லை என்பதும் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அதேநேரம் அ.தி.மு.க-வில் பா.ம.க., பா.ஜ.க கட்சிகளுடனான கூட்டணியில் மட்டும் முடிவு எட்டப்பட்டிருக்கிறது எனவும் தே.மு.தி.க உள்ளிட்ட சில கட்சிகளுடன் இன்னும் தொகுதிப் பேரம் முடியவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு

தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து கட்சி சார்பில் யாரெல்லாம் போட்டியிட வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பா.ஜ.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

``அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு குறைந்தது 30 இடங்கள் ஒதுக்கப்பட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. டெல்லியில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க அலுவலகத் திறப்புவிழாவுக்குச் செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்கள், தொகுதிகள் குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவித்து அங்கேயே கூட்டணி உடன்படிக்கை ஒப்பந்தத்தை இறுதி செய்ய வாய்ப்பிருக்கிறது” என்ற அவர்கள்,

எல்.முருகன்
எல்.முருகன்

தொடர்ந்து பேசுகையில், ``தொகுதி எண்ணிக்கை முடிவாகியிருக்கும் நிலையில், அதில் 40% முதல் 50% இடங்களில் பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்க பா.ஜ.க மேலிடம் திட்டமிட்டிருக்கிறது. அதாவது 10-க்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க பா.ஜ.க மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும், இதன் மூலம் தேர்தலில் பெண்களுக்கு பா.ஜ.க அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்ற பிம்பத்தை உருவாக்கி தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது” எனவும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

Vikatan

``கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், மதுரை மேற்கு தொகுதியில் தமிழக பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் மஹாலட்சுமி ஆகியோர் பட்டியலில் இருக்கிறார்கள். ராஜூஸ் சமூகத்தினர் அதிகம் இருப்பதால் அந்தச் சமூகத்தை சேர்ந்த நடிகை கௌதமி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதனால் அந்தத் தொகுதியை அவருக்கு ஒதுக்க வாய்ப்பு அதிகமிருக்கிறது.

பிரதமர் மோடியை சந்தித்த நடிகை கௌதமி
பிரதமர் மோடியை சந்தித்த நடிகை கௌதமி

இது தவிர திருவல்லிக்கேணியில் நடிகை குஷ்பு, மயிலாப்பூரில் நடிகை காயத்ரி ரகுராம், கன்னியாகுமரியில் மீனா தேவ் போட்டியிட வாய்ப்பிருக்கிறது. இவர்கள் தவிர தமிழக பா.ஜ.க மாநிலச் செயலாளர் கார்த்திகாயினி உள்ளிட்ட நான்கு பேருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவிருக்கிறது” என்ற தகவலையும் பா.ஜ.க வட்டாரத்தினர் பகிர்ந்துகொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு