Published:Updated:

வேல் யாத்திரை: அ.தி.மு.க அரசின் அனுமதி மறுப்பு... அரசியல் பின்னணி என்ன?

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்
தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்

தடையை மீறி வேல் யாத்திரையை பா.ஜ.க தொடங்கியிருக்கிறது. வேல் யாத்திரை மற்றும் அதற்காகன தடை ஆகியவற்றுக்குப் பின்னால் பல்வேறு அரசியல் கணக்குகள் ஒளிந்திருக்கின்றன. இந்த விவகாரம் பற்றி ஓர் அலசல்...

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை பல மாநிலங்களில் விவசாயிகள் தீவிரமாக முன்னெடுத்துவரும் நேரத்தில், அரசின் தடையை மீறி வேல் யாத்திரை நடத்துவதில் தமிழக பா.ஜ.க முனைப்புக் காட்டி வருகிறது. `எங்களுக்கு முருகப் பெருமான் அனுமதி கொடுத்துவிட்டார்’ என்று சொல்லி, தடையை மீறி வேல் யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், பெண்களுக்கு எதிரான கருத்துகள் மனுஸ்மிருதியில் இருப்பதாக இணையதள நிகழ்ச்சி ஒன்றில் பேசியதைத் தொடர்ந்து, திருமாவளவனை பா.ஜ.க-வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பா.ஜ.க சார்பில் வேல் யாத்திரை நடத்தப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது. திருத்தணியில் நவம்பர் 6-ம் தொடங்கி, திருச்செந்தூரில் டிசம்பர் 6-ம் தேதி வேல் யாத்திரையை முடிக்கவிருப்பதாக பா.ஜ.க அறிவித்தது. இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்களிடையே மத உணர்வைத் தூண்டி சமூகத்தில் வன்முறைக்கு வித்திட பா.ஜ.க முயற்சி செய்வதாகவும், எனவே வேல் யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வி.சி.க., சி.பி.எம் உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தன.

எல்.முருகன்
எல்.முருகன்

இந்தநிலையில், வேல் யாத்திரை அனுமதி தொடர்பாக தமிழக முதல்வர், தமிழக ஆளுநர் ஆகியோரை பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் சந்தித்தார். காவல்துறை உயர் அதிகாரிகளை பா.ஜ.க தலைவர்கள் சந்தித்தனர். அந்தந்த பகுதிகளில் வேல் யாத்திரைக்கு அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள் என்று பா.ஜ.க-வினரிடம் காவல்துறை கூறியதாகச் சொல்லப்பட்டது. எனவே, ஜனநாயக ரீதியில் வேல் யாத்திரையைத் தமிழக அரசு அனுமதித்துள்ளது என்று பா.ஜ.க-வினர் கூறிவந்தனர்.

வேல் யாத்திரை இன்று (நவ.6) காலை தொடங்கவிருந்த நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (நவ.5) விசாரணைக்கு வந்தது. அப்போது, வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. அரசின் இந்த முடிவு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசின் முடிவை எதிர்க் கட்சிகள் வரவேற்றன.`கொரோனா காரணமாகவே, வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. வேல் யாத்திரையை பா.ஜ.க கைவிடுவது நல்லது’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

`வேல் யாத்திரையைக் கைவிடுவதுதான் பா.ஜ.க-வுக்கு நல்லது!’ - அமைச்சர் ஜெயக்குமார்

கொரோனாவைக் காரணம் காட்டினாலும், அரசின் முடிவின் பின்னணியில் அரசியல் இருப்பதாகப் பல தரப்பினரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.`யாத்திரை தொடங்குவதற்கு முந்தைய நாள் அனுமதி மறுத்தால்தான், பா.ஜ.க-வால் நீதிமன்றத்துக்குச் சென்றுகூட அனுமதி வாங்க முடியாது’ என்ற கணக்குடன் அ.தி.மு.க அரசு காய்நகர்த்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் சிலரால் எழுப்பப்படுகிறது.

`வேல் யாத்திரைக்குப் பிறகு பா.ஜ.க-வின் செல்வாக்கு அதிகரிக்கும். சட்டமன்றத்தில் பா.ஜ.க அதிக இடங்களைப் பெறும்’ என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசிவந்ததும் தமிழக அரசின் இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

கமலாலயம்
கமலாலயம்

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருப்பது துரதிருஷ்டவசமானது. தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க உள்பட அனைத்துக் கட்சிகளும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு இருக்கும்போது, வேல் யாத்திரைக்கு மட்டும் அனுமதி மறுத்திருப்பது கண்டனத்துக்குரியது. அதுவும், கொரோனாவைக் காரணம் காட்டி அனுமதி மறுத்திருப்பது மிகவும் தவறானது.

இந்து மதத்தையும் இந்துப் பெண்களையும் சிலர் தொடர்ந்து தாக்கிவருகிறார்கள். தவறானப் புத்தகங்களைக் காண்பித்து இந்துப் பெண்கள் மீது தவறான, ஆபாசமான கருத்துகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பரப்பி வருகிறது. அந்தத் தவறான கருத்துக்கு ஆதரவாக பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் அவர்கள் நடத்துகிறார்கள். அதற்கெல்லாம் அனுமதி அளித்துவிட்டு, வேல் யாத்திரைக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்?... இட ஒதுக்கீடு விவகாரத்துக்காக கவர்னர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கானோரைத் திரட்டி தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தியது. அங்கு கொரோனா பரவாதா?... கோயம்புத்தூரில் தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி பங்கேற்ற கூட்டத்துக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டார்கள். அங்கு கொரோனா பரவாதா?

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

அரசு நிகழ்ச்சிகளும் ஆளும் கட்சி நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அங்கு கொரோனா பரவாதா?... பா.ஜ.க-வின் வேல் யாத்திரை நிகழ்ச்சிக்கு மட்டும் கொரோனாவைக் காட்டி அனுமதி மறுப்பது நியாயமற்ற செயல். வேல் யாத்திரை நடத்தப்போகிறோம் என்று அறிவித்து 15 நாள்களாகின்றன. கடைசிவரை அமைதியாக இருந்துவிட்டு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முந்தைய நாளில் அனுமதி மறுப்பதாக நீதிமன்றத்தில் அரசு சொல்வது மிகவும் தவறான செயல்” என்று கொந்தளித்தார் நாராயணன் திருப்பதி.

அவரிடம் `சட்டம் ஒழுங்கு பிரச்னை வருமே?’ என்று கேட்டதற்கு, ``எங்கள் உரிமையை நாங்கள் நிலைநாட்ட வேண்டாமா, இந்துக்களுக்காக நாங்கள் குரல் கொடுக்க வேண்டாமா?” என்றார் நாராயணன் திருப்பதி.

வேல் யாத்திரை: தடையை மீறும் தமிழக பா.ஜ.க... விழிபிதுங்கும் காவல்துறை!

இந்த விவகாரம் கருத்துத் தெரிவித்த அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, ``கொரோனாவின் அச்சுறுத்தல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. எனவேதான்,`கொரோனாவை நாம் தொடர்ந்து எதிர்த்துப் போராட வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி தன் பிறந்த நாளில் பேசினார். அப்போது,`மக்கள் கூட்டம் கூடுவதையும், ஊர்வலமாகப் போவதையும் தவிர்க்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.

புகழேந்தி
புகழேந்தி

பா.ஜ.க ஆளும் எந்த மாநிலங்களிலும் ஊர்வலங்களுக்கு இதுவரை அனுமதி தரப்படவில்லை. கொரோனா பரவல் இன்னும் முழுமையாகக் குறையவில்லை. இந்தச் சூழலில், ஊர்வலம் செல்வதற்கு அனுமதி கேட்பதை அரசு ஏற்காது. நவம்பர் 15-ம் தேதிவரை எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை என்று அரசாணை இருக்கிறது. அரசாணையை எப்படி மீற முடியும்?” என்றார்.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வனிடம் பேசினோம். ``பா.ஜ.க-வின் வேல் யாத்திரைக்குத் தடைவிதிப்பது என்கிற தமிழக அரசின் நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம். மத நம்பிக்கைளுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரி கிடையாது. ஆனால், மதத்தின் பெயரால் சமூகத்தில் வன்முறையைத் தூண்ட பா.ஜ.க தொடர்ந்து முயற்சி எடுத்துவருகிறது. அதை ஒருபோதும் ஏற்க முடியாது.

`இந்துக்களின் மனது புண்படுகிறது’ என்கிற ஒரு சொல்லாடலை பா.ஜ.க தற்போது புதிய அரசியல் சொல்லாடலாகக் கையாண்டுவருகிறது. அதை வைத்து தமிழகத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் மாரியம்மன் கோயில் இடிக்கப்படுகிறது. விநாயகர் சிலை உடைக்கப்படுகிறது. அப்போது மட்டும் இந்துக்கள் மனம் ஏன் புண்படவில்லை? அது பற்றி பா.ஜ.க-வினர் எந்தக் காலத்திலும் கண்டுகொண்டது கிடையாதே. அது ஏன்?

சிந்தனைச் செல்வன்
சிந்தனைச் செல்வன்

பா.ஜ.க-வின் இந்த அரசியல் தமிழகத்தின் பொதுவான தன்மைக்கு முற்றிலும் எதிரானது. ஓர் அரசியல் கட்சி, மக்களின மத உணர்வுகளைத் தன் அரசியலுக்குப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது. ஏற்கெனவே, விநாயகர் சதுர்த்தியை அரசியலாக மாற்றிவிட்டார்கள். நான் சிறுவனாக இருந்தபோது விநாயகர் சதுர்த்தி ஒரு சமூக நல்லிணக்கத்துடன் இயல்பாகக் கொண்டாடப்பட்டது. அந்த இயல்புத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சியை சமூகரீதியாகச் செய்ய வேண்டிய கடமை, நல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையையும் நல்ல அரசியலையும் விரும்புகிற அனைவரின் கடமையாக இருக்கிறது” என்றார் அவர்.

வேல் யாத்திரை: எம்.ஜி.ஆர் புகைப்பட சர்ச்சை... முற்றுகிறதா பா.ஜ.க Vs அ.தி.மு.க மோதல்?

``வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருப்பதன் பின்னணியில் அரசியல் இருக்கிறதா?” என்ற கேள்வியை அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி முன்பாக வைத்தோம். ``வேல் யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தமிழக அரசை வலியுறுத்தின. அதன் மூலம் ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டது. தன் அரசியல் எதிரியான தி.மு.க கூட்டணியால் உருவாக்கப்பட்ட அந்தப் பொதுக் கருத்தின் அடிப்படையில்தான், வேல் யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்ற முடிவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்திருக்கிறார். தமிழக அரசின் இந்த முடிவு யாருக்குச் சாதகமாக இருக்கும், யாருக்குப் பாதகமாக இருக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது. அதே நேரத்தில், இந்தத் தடையை தங்களுக்கு சாதகமானது என்று பா.ஜ.க-வினர் பார்ப்பார்கள். ஏனெனில், இந்தத் தடையால் பா.ஜ.க-வுக்கு ஒரு விளம்பரம் கிடைக்கும்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. இந்த ஒரு புள்ளியில் அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தேர்தலில் பா.ஜ.க தனியாக நின்றால், தாம் இழந்த கிறிஸ்தவ, முஸ்லிம் வாக்குகளை மீண்டும் பெற முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கலாம். அதற்காக, பா.ஜ.க எதிர்ப்பு நிலையை அவர் எடுக்கலாம். அல்லது, பா.ஜ.க தனியாகப் போட்டியிடத் தயங்கினால், அவர்களுக்கு குறைந்த இடங்களைக் கொடுத்து அ.தி.மு.க கூட்டணியில் சேர்த்துக்கொள்ளலாம். வேல் யாத்திரை தடையின் பின்னால் இப்படி பல அரசியல் கணக்குகள் இருக்கின்றன” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு