Published:Updated:

போரிஸ் என்னும் புதிய ரட்சகர்!

போரிஸ் ஜான்சன்
பிரீமியம் ஸ்டோரி
News
போரிஸ் ஜான்சன்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிக இக்கட்டான சூழலில் இருக்கிறது பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிவதாக பிரிட்டன் 2016-ம் ஆண்டு முடிவெடுத்தது, அக்டோபர் 31, 2019-ல் அதற்கான காலக்கெடுவும் முடிவடைகிறது.

பிரிட்டன் விரும்பும் ஒப்பந்தத்தை ஐரோப்பா யூனியன் தர மறுக்கிறது, ஐரோப்பா யூனியன் ஒப்புக்கொள்ளும் ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் எதிர்க்கிறது. இந்த இழுபறியின் விளைவாக, இரண்டாண்டுப் போராட்டத்திற்குப் பிறகு பதவி விலகியிருக்கிறார் தெரசா மே. இந்த இக்கட்டான சூழலில் பிரிட்டனை ரட்சிக்க அந்நாட்டு அமைச்சர்கள் தேர்வு செய்திருக்கும் நபர் போரிஸ் ஜான்சன். பிரிட்டனின் சர்ச்சை நாயகன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

Alexander Boris de Pfeffel Johnson என்பது அவரது முழுப்பெயர், பிரிட்டன் மக்கள் அவரைச் செல்லமாக bojo என அழைக்கிறார்கள்; பொதுவெளியில் அவர் போரிஸ். ஜனரஞ்சகமான அவரது பேச்சுக்கு ரசிகர்கள் ஏராளம், அவரது நகைச்சுவை உணர்வும், யதார்த்தமான பேச்சும், அவரை மக்கள் ரசிப்பதற்கான காரணங்கள். கன்சர்வேட்டிவ் கட்சியினர், கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் போரிஸைத் தேர்வு செய்துவிட்டு, சூதாட்டப் பந்தயத்தில், மொத்தப் பணத்தையும் ஒரு குதிரையின் மீது கட்டிவிட்ட பரிதவிப்போடு இருக்கிறார்கள்.

தன்னுடைய எழுத்தாலும் கருத்துகளாலும் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாவது போரிஸின் வழக்கம்தான். ‘முஸ்லிம் பெண்களின் புர்கா அணிந்த முகங்கள் தபால் பெட்டிகளைப் போல இருக்கின்றன’ என்றது, அரசு நிகழ்ச்சியொன்றில் தொழிலதிபர்களைப் பற்றித் தகாத வார்த்தை பேசியது, சீக்கிய ஆலயத்தில் மதுவைப் பற்றிப் பேசியது, ரக்பி விளையாட்டில் பத்து வயதுச் சிறுவனைத் தள்ளி விட்டது என, இவர் நின்றால், நடந்தால், பேசினால் கண்டனங்கள் எழாமல் இருப்பதில்லை. அப்படி ஒரு பிரதமரைத்தான் ஆபத்திற்குப் பாவமில்லை என்று தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் கன்சர்வேட்டிவ் கட்சியினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எந்த அடையாளத்துக்குள்ளும் அடங்காமல், யூகிக்க முடியாத ஒரு நபராக இருப்பதே போரிஸினுடைய தனி அடையாளம். சில சமயம் சமத்துவத்தை விரும்பும் அகதிகளின் நண்பனாகவும், சில சமயம் பாரம்பர்யத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற பழைமைவாதியாகவும் பேசும் அவரது மனநிலை முரண்களின் இருப்பிடம்.

போரிஸ் என்னும் புதிய ரட்சகர்!

அமெரிக்காவில், பணக்கார பிரிட்டன் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த போரிஸ், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையையும் வைத்திருக்கிறார். ஜெர்மன், பிரெஞ்சு, துருக்கி எனப் பல நாடுகளும், இஸ்லாம், யூத மதம், கிறித்துவம் எனப் பல மதங்களும் கொண்ட கலவையான வம்சாவளியைச் சார்ந்தவர் அவர். அமெரிக்காவில் பத்திரிகைத் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றியவர், தெரிந்தே போலியான செய்தியைப் பிரசுரித்ததற்காக டைம்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் பல இடங்களில் பணியாற்றிவிட்டு, அரசியலில் நுழைந்தார். லண்டன் நகர மேயராக இரண்டு முறை பணியாற்றியவர், ஹென்லி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். கன்சர்வேட்டிவ் கட்சியின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். பிரிட்டனின் ஒப்பற்ற தலைவரான வின்ஸ்டன் சர்ச்சில் பற்றிய இவரது புத்தகம் பலரது கவனத்தை இவர்பக்கம் திருப்பியது.

தற்போது இவரைப் பிரிந்திருக்கும் இவரின் இரண்டாவது மனைவி மரீனா வீலெர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். மரீனாவின் தந்தை பிரிட்டனைச் சேர்ந்தவர், தாயார் இந்தியாவின் மேற்குப் பஞ்சாபைச் (பிரிக்கப்படாத பாகிஸ்தான்) சேர்ந்தவர். மேலும், போரிஸின் அமைச்சரவையில் உள்துறைச் செயலராக பிரீதி பாட்டீல், மாநிலச் செயலாளராக அலோக் சர்மா, கருவூலத் தலைமைச் செயலராக ரிஷி சுனக் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவர் இடம்பெற்றிருப்பதும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

போரிஸ் என்னும் புதிய ரட்சகர்!

பிரதமரானதும், பிரிட்டன் வரலாறு காணாத அளவிற்கு அமைச்சரவையில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கும் போரிஸ், தன்னுடைய வெற்றி உரையில், பிரிட்டனில் ஐரோப்பா யூனியனிலிருந்து பிரிட்டன் விலகும், பிரெக்ஸிட் நிறைவேற்றப்படும், லேபர் கட்சியின் ஜெரிமி கோர்ப்பியனின் தோல்வி உறுதி செய்யப்படும், பிரிட்டன் புத்துணர்வு பெறும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில், பிரிட்டனுக்கு சாதகமான முடிவு எட்டப்படவில்லை என்றால், ஒப்பந்தமின்றியே பிரிட்டன் வெளியேறும் எனத் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார் போரிஸ். அப்படி ஒப்பந்தமின்றி வெளியேறும் பட்சத்தில், பொருளாதார ரீதியாக பிரிட்டன் பெரும் சரிவினை சந்திக்கும். எல்லைப் பாதுகாப்பு, குடியுரிமை, வர்த்தகம், போக்குவரத்து, உணவுக் கொள்முதல் என்று பல்வேறு விஷயங்களில் இங்கிலாந்து சிக்கல்களைச் சந்திக்கும்.

தெரசா மே பிரெக்ஸிட் ஒப்பந்தத்தைப் பற்றிய அதிகப்படியான வாக்குறுதிகளை அளித்ததன் விளைவாகத்தான் பதவி விலக நேரிட்டது என்றால், போரிஸ் அதைவிடப் பத்து மடங்கு அதிகமான வாக்குறுதிகளை அளித்திருக்கிறார். யாரும் கணிக்க முடியாத அவரது அதிரடிகளை நம்பிக் காத்திருக்கிறது பிரிட்டன்.

என்ன செய்யப்போகிறாரோ?