Published:Updated:

`8 சதவிகிதம் அதிகரித்தால் பிரச்னை!'- சுட்டிக் காட்டிய DYFI செங்கல்பட்டு மாநாடு

மாநாட்டில் புத்தகம் வெளியீடு
மாநாட்டில் புத்தகம் வெளியீடு

உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ நாடுகளில் 8 சதவிகிதம் பேர் வேலையில்லாமல் இருக்க வேண்டும் என்பது அவர்களின் கொள்கை.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்வளர்ச்சிக்கான சிறப்பு மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயிலில் நேற்று நடைபெற்றது.

மாநாட்டில் புத்தகம் வெளியீடு
மாநாட்டில் புத்தகம் வெளியீடு

இதில் கலந்துகொண்ட சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் அ.சௌந்தரராசன், ``உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ நாடுகளில் 8 சதவிகிதம் பேர் வேலையில்லாமல் இருக்க வேண்டும் என்பது அவர்களின் கொள்கை.

அப்படி வேலையில்லாதவர்கள் இருந்தால்தான் குறைந்த ஊதியத்தில் வேலைக்கு ஆள்கிடைப்பார்கள். இந்த 8 விழுக்காடு எண்ணிக்கை அதிகரிக்கும்போது பணியில் இருப்பவர்களின் ஊதியத்துக்கும் வேலைக்கும் ஆபத்து வரப் போகிறது என்று அர்த்தம். வேலையின்மையை எதிர்த்துப் பணியில் இருப்பவர்களும் போராட வேண்டும். ஆலை முதலாளிகள் வெளியில் வேலை இல்லாமல், ஊதியம் இல்லாமல் பல பேர் உள்ள நிலையில் பணியில் இருக்கும் நீங்கள் ஏன் போராடுகிறீர்கள் என்ற எண்ணத்தை பொதுவான கருத்தாக உருவாக்குகிறார்கள். இந்தியாவில் 35 வயதுக்கு கீழே 65 விழுக்காட்டினர் உள்ளனர். இதில் பெரும்பான்மை இளைஞர்களுக்கு வேலை இல்லை. சிலர் 8 ஆயிரம், 10 ஆயிரம் என்ற குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் நிலைமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கார்ப்ரேட் நிறுவனங்களோடு சிறு தொழில் செய்வோர் போட்டிபோட வேண்டிய நிலையை ஆட்சியாளர்கள் உருவாக்கி விட்டார்கள். இந்தியாவில் வாகன பழுது பார்ப்போர் மட்டும் 7 கோடி பேர் உள்ளனர். ஆனால் இனிமேல் வாகனம் உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் மட்டும்தான் பழுதுபார்க்க வேண்டும் எனக் கூறுகிறது. இதுதான் மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. ஏராளமான சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டதும், பல நிறுவனங்கள் பணி இல்லாமல் வேலை நாட்களை குறைத்ததும்தான் மின் நுகர்வு குறைந்ததற்கான காரணம். மக்களின் வாங்கும் சக்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தினால்தான் தொழில் வளர்ச்சி ஏற்படும்.

இந்த 8 விழுக்காடு எண்ணிக்கை அதிகரிக்கும்போது பணியில் இருப்பவர்களின் ஊதியத்துக்கும் வேலைக்கும் ஆபத்து வரப் போகிறது என்று அர்த்தம்.
அ.சௌந்திரராசன்

மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கினால்தான் தொழில் வளர்ச்சி பெரும். தொழில் வளர்ச்சி பெற்றால்தான் வேலைவாய்ப்பு பெருகும். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை மக்களிடத்திலே அம்பலப்படுத்த வேண்டும். வேலைமையின்மைக்கு அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம் என்பதை இளைஞர்களிடம் எடுத்துக் கூறி அவர்களை அணிதிரட்டி போராட வேண்டும். போராட்டம் வலுவடைந்தால் வெற்றி நிச்சயம்" என்றார்.

மாநிலப் பொருளாளா் தீபா, மத்தியக்குழு உறுப்பினர்கள் சி.பாலசந்திரபோஸ், செ.மணிகண்டன், மாநிலத் துணைத் தலைவர் கே.எஸ்.கார்த்தீஷ்குமார் ஆகியோர் மாநாட்டு தீர்மானங்களை விளக்கிப் பேசினர்.

மாநில நிர்வாகிகள் பேசி முடித்ததும் மதிய உணவு இடைவேளையின்போது பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. `வெள்ளரிக்கா பிஞ்சுக்காக வெளியே போகணுமா?' எனச் சிலர் சாப்பிடப்போகாமல் மெதுவாகப் போகலாம் என அங்கேயே தயங்கி உட்கார்ந்திருந்தனர். பிரியாணி சாப்பிடச் சென்றவர்களுக்கு அண்டாவில் உள்ள வெங்காயப் பச்சடியைப் பார்த்து அதிசயித்துப்போயினர். `பிரியாணிக்கு வெங்காயப் பச்சடி கொடுக்கிறாங்க' என மண்டபம் உள்ளேயும் தகவல் பரவியதால் பிரியாணி வழங்கும் இடத்தில் கூட்டம் களைகட்டத் தொடங்கியது.

சமீபத்தில் வெங்காய விலை உயர்வு நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. அப்போது பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், `நான் அதிக அளவில் வெங்காயம் சாப்பிட மாட்டேன்’ எனப் பதில் அளித்தார். இந்தக் கருத்து நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியது.

பிரியாணி
பிரியாணி

ஆனால், இன்று கடுமையான விலையேற்றத்தால் நெட்டிசன்கள் வெங்காயம் பற்றிய மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். ஆட்டோவுக்கு வெங்காயம், பேங்க் லாக்கரில் வெங்காயம் வைப்பது, வெங்காயத்தில் அலங்காரம் செய்துகொள்வது, செல்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என விலை உயர்வைக் காட்டும்விதமாக ஏதாவது ஒருவகையில் தினம்தினம் புதிது புதிதாகக் கலாய்த்து வருகிறார்கள். `இந்த நிலையில் பிரியாணிக்கு வெங்காயப் பச்சடியை வழங்கியது ஆச்சர்யமானதுதான்' என உற்சாகத்தோடு குரலை எழுப்பினர் மாநாட்டுக்கு வந்தவர்கள்.

`ஸ்மார்ட் போன் வாங்கினால் வெங்காயம் இலவசம்!’- பட்டுக்கோட்டையில் அசத்தல் ஆஃபர்
அடுத்த கட்டுரைக்கு