Election bannerElection banner
Published:Updated:

`சுதந்திரம் கிடைச்சே 74 வருஷம்தான் ஆகுது!’- அம்ருதா பட்னாவிஸ் கருத்தும் நெட்டிசன்களின் விமர்சனமும்

அம்ருதா பட்னாவிஸ்
அம்ருதா பட்னாவிஸ்

`மத்திய பட்ஜெட் 100 ஆண்டுகளில் பார்க்காத ஒன்று’ என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா தெரிவித்துள்ள கருத்து விமர்சனத்தைச் சந்தித்துள்ளது.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா, பட்ஜெட் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துவருகிறார்கள். பட்ஜெட் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், `இந்தியா 100 ஆண்டுகளில் பார்க்காத பட்ஜெட். இதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று அம்ருதா கருத்து தெரிவித்திருந்தார். `இந்தியா சுதந்திரம் அடைந்தே 74 ஆண்டுகள்தான் ஆகின்றன. அப்படியிருக்கும்போது எப்படி 100 ஆண்டுகால பட்ஜெட்டைப் பார்த்திருக்க முடியும்?’ என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

தேவேந்திர பட்னாவிஸ் - அம்ருதா
தேவேந்திர பட்னாவிஸ் - அம்ருதா

அனுஜ் ஏக்நாத் கெய்க்வாட் என்பவர், `நீங்கள் உண்மையில் இந்தியரா? உங்களது பதிவிலிருந்தே இந்தக் கேள்வி கேட்கத் தோன்றுகிறது’ என்று கேட்டிருக்கிறார். சமாதான் ஜக்தாப் என்ற மற்றொருவர் ட்விட்டரில், `நாம் தவறான வரலாற்றை படித்திருப்போம். நீங்கள் சொல்வதுதான் சரி. பட்ஜெட் குறித்து ஒரு பாடல் பாடுங்கள்’ என்று கலாய்த்திருக்கிறார்.

மெட்ரோ விரிவாக்கம், தொழில் வழித்தடம்... மத்திய பட்ஜெட் 2021-ல் தமிழகத்துக்கு என்னென்ன திட்டங்கள்?

தொடர்ச்சியான விமர்சனத்தை அடுத்து தனது கருத்தை அம்ருதா மாற்றிக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக ட்விட்டரில் பிரபல ஆங்கில நாளிதழ் செய்தியைப் பகிர்ந்து, நிர்மலா சீதாராமன், `2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட், இந்தியா 100 ஆண்டுகளில் காணாத ஒன்றாகத் தயாரிக்கப்படும்’ என்று குறிப்பிட்டது குறித்த இணைப்புடன் விளக்கம் கொடுத்திருக்கிறார். மேலும், `வேளாண் வரிக்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்திருந்தாலும், சுங்கவரி குறைக்கப்பட்டிருப்பதால் பாதிப்பு ஏற்படாது. உலக நாடுகள் நம்மை கவனிக்கின்றன. கூடுதல் வரி இல்லாமல் வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கும் கலையை கற்றுக்கொள்கின்றன’ என்றும் அம்ருதா தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

அம்ருதா பட்னாவிஸ்
அம்ருதா பட்னாவிஸ்

அம்ருதா, தனது கணவர் முதல்வராகப் பதவி வகித்தபோது தொடர்ந்து தனியார் வங்கியொன்றில் பணியாற்றிவந்தார். ஆனால், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசு ஊழியர்கள் அனைவரும் ஊதியக் கணக்கை அந்தக் குறிப்பிட்ட வங்கியில் தொடங்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்தாகப் புகார் எழுந்தது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு